புதுடில்லி,ஏப்.9 – உ.பி. தலைநகர் லக்னோவில் சவுத்ரி சரண்சிங் பன்னாட்டு விமானநிலையம் உள்ளது. இங்கு புதிதாக மூன்றாவது டெர்மினல் திறக்கப்பட்டது. இதனால் மத்திய பாதுகாப்பு படையான சிஅய்எஸ்எப் இன்னும் முழுமையாக அமர்த்தப்படவில்லை. இச்சூழலில் கடந்த 2-ஆம் தேதி ஷார்ஜாவிலிருந்து காலை 7 மணிக்கு இண்டிகோ விமானம் வந்திறங்கியது.
இதன் பயணிகள் சோதனையில் சந்தேகத்தின் பேரில் 36 பேர் சுங்கத்துறையிடம் சிக்கினர். இவர் களிடம் ரூ.3.14 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் கிடைத்தன. மேலும் அவர்கள் தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.மறுநாள் தமாமிலிருந்து வந்த விமானத்திலும் மேலும் 26 கடத்தல்காரர்கள் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.1.3 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளும், 50 கிராம் தங்கக் கட்டியும் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் காரர்கள் 62 பேரில் பெரும்பாலானோர் தமிழர்கள். இவர்கள் விமான நிலையத்திலேயே சுமார் 35 மணி நேரம் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர். அப்போது 62 பேரில் 29 பேர் முகம்மது காஷிப் என்பவர் தலைமையில் தப்பி விட்டனர். இந்த வழக்கு லக்னோ விமான நிலையப் பகுதியின் சரோஜினி நகர் காவல் நிலையத்திடம் ஒப்படைக் கப்பட்டது. இவ்வழக்கை கையில் எடுத்த உ.பி. காவல்துறையினர் கடத்தல்காரர்களிடம் விசா ரித்ததில் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளி யாகி உள்ளன.
கடந்த சில மாதங்களாக இவர்கள் சிகரெட் மற்றும் தங்கத்தை வெளி நாடுகளிலிருந்து லக்னோ வழியாக கடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவற்றில் அதிகமானவற்றை தமிழ்நாட்டிற்கு அனுப்பி விட்டு, மற்றதை உ.பி. மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் விநியோகித்து வந்துள்ளனர். துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்டவெளிநாட்டு நகரங்களி லிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சரக்குகளிலும் சிகரெட்டுகள் கடத்தப்பட்டு வந்துள்ளன. இதற்காக இவர்களது ஒரு பயணத்திற்கு ரூ.30,000 வரை அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் உள்ள உண்மையான கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் அல்லது தமிழ்நாடு, டில்லி, மகாராட்டிரா ஆகியமாநிலங் களில் இருக்கலாம் என உ.பி. காவல்துறையினர் கருதுகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளை சரோஜினி நகர் காவல் நிலையம் கேட்டுள்ளது. இதற்கு அப்பதிவுகள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் இருந்தது சந்தேகத்தை எழுப்பியது. பிறகு இவர்களது கடத்தலுக்கு லக்னோ விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் லஞ்சம் பெற்று உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்க அதிகாரிகளில் ஒரு குழுவினர் முழுவதும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர். இதுகுறித்து லக்னோ விமான நிலைய அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “சிக்கிய வர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள்மீது சென்னை விமான நிலையத்திலும் பல கடத்தல் வழக்குகள் உள்ளன. இதனால், சென்னை கடத்தல்காரர்கள் தங்கள் முகாமை லக்னோவுக்கு மாற்றியுள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உ.பி. சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு சென்னைக்கும் செல்ல உள்ளது” என்றனர்.
No comments:
Post a Comment