♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து
பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்!
♦ வீட்டில் 5 பெண்கள் இருந்தாலும், கல்லூரி செல்லும் ஒவ்வொருவருக்கும்
ரூ.ஆயிரம் அளிக்கும் ‘அருள்’ ஆட்சி!
♦ பெண்களுக்கு மட்டும்தானா? என்ற கேள்வி எழுந்தபோது, ஆண்களுக்கும் ‘தவப்புதல்வர்’ திட்டத்தைக் கொண்டு வந்தது ‘திராவிட மாடல்’ ஆட்சி!
பிரதமர் மோடி அவர்களே, எத்தனை முறை நீங்கள் படையெடுத்தாலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும் வெல்லப்போவது இந்தியா கூட்டணியே!
வாக்காளப் பெருமக்களே, இந்தியா கூட்டணிக்குக் கை கொடுப்பீர்!
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
விருதுநகர், ஏப்.4 பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி, கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் – ஆணுக்கும் ஓராயிரம் ரூபாய் என்று அடுக்கடுக்காக கருணை மழை பொழிவது ‘திராவிட மாடல்’ அரசே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு ஒன்றிய மோடி அரசு. எனவே, வாக்காளப் பெருமக்களே ‘‘இந்தியா கூட்டணிக்கே!” வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர் என்று ‘‘கை” சின்னத்திற்கு ஆதரவாக விருதுநகரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
விருதுநகரில் தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை
நேற்று (3.4.2024) இரவு 8 மணியளவில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இப்பிரச்சாரக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய இல.திருப்பதி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த, ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் விளித்ததாகக் கொள்ளவேண்டும்.
இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களைப் பார்த்தவுடன் மிகுந்த உற்சாகம் எனக்கு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, நன்றி உணர்ச்சியோடு நீங்களெல்லாம் இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்று சொன்னால், நாங்கள் உரை யாற்றுவதைவிட, நீங்கள் இங்கே வந்து அமர்ந்து, எங்களை வரவேற்கின்ற முறையில், வெற்றி வேட் பாளருக்கு வாழ்த்துச் சொல்கிறீர்கள் என்றுதான் நாங்கள் கருதுகின்றோமே தவிர, இதை ஒரு பிரச்சார மேடையாகக் கருதவில்லை.
காரணம் என்னவென்று சொன்னால், அந்த அள விற்கு நீங்கள் நன்றி உணர்ச்சியோடு இருக்கின்றீர்கள்.
ஒவ்வொரு மாதமும் தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய்; தாய் வீட்டிலிருந்து சீதனம்கூட தவறாமல் வராது; எங்கள் ஸ்டாலின் ஆட்சியில், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அந்த வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்லக்கூடிய நிலையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.
பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி, செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற ஜனநாயகத்திற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள்தான் மருத்துவர்கள்!
அதேநேரத்தில், மோடி ஆட்சியினுடைய வேதனை களையும் மக்களுக்கு நினைவூட்டுகிறோம். நீங்கள் இந்த முறை தவறினால், என்னாகும்? என்பதை எண்ணிப் பாருங்கள். ஜனநாயகம் மரணப் படுக்கையில் இருக்கிறது; தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற ஜனநாயகத்திற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள்தான் மருத்துவர்கள்.
மிக முக்கியமான
இரண்டு இளைஞர்கள்!
அந்த மருத்துவர்களில் மிக முக்கியமானவர்கள் இரண்டு இளைஞர்கள்தான். ஒருவர் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் இந்தியா கூட்டணி உருவாவ தற்குக் காரணமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
இன்னொருவர், இவரைக் கண்டால் மோடி அலறக் கூடியவர் – அவர்தான் இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள்.
ராகுல் காந்தி, மோடி அவர்களை நேரிடையாகப் பார்த்துச் சொன்னார், ‘‘மோடி ஜி அவர்களே, நீங்கள் எத்தனை முறை தமிழ்நாட்டிற்குச் சென்றாலும், எத் தனை முறை ‘ரோடு ஷோ’ நடத்தினாலும், தமிழ்நாடு பெரியார் மண் – சமூகநீதி மண் – ஆகவே உங்கள் வித்தைகள் அங்கே பலிக்காது; நூறு ஆண்டுகள் ஆனாலும், உங்களால் அங்கே காலூன்ற முடியாது” என்றார்.
‘‘நாடாளுமன்றத்திலிருந்து
146 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது மோடி பா.ஜ.க. ஆட்சி!’’
அதேபோலத்தான் நம்முடைய மாணிக்கம் தாகூர் அவர்கள் சொன்னார்கள், ‘‘நாடாளுமன்றத்திலிருந்து 146 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது மோடி பா.ஜ.க. ஆட்சி” என்று குறிப்பிட்டார்.
எந்தக் காலகட்டத்திலாவது 146 எதிர்க்கட்சியினரை வெளியில் அனுப்பியிருக்கிறார்களா?
கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில், நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகரே கிடையாது. இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட நிலை இருந்ததுண்டா?
நம்முடைய முதலமைச்சர் சொன்னார், ‘‘எங்களுக்கு வாக்களித்தவர்கள் எவ்வளவு மகிழ்கிறார்களோ, அதே போல, எங்களுக்கு வாக்களிக்காதவர்களும், ‘‘இவர் களுக்கு நாம் வாக்களிக்கவில்லையே” என்று வருந்தும் படியாக நான் நடந்துகொள்வேன்” என்றார். அதன்படி நடத்தியும் காட்டினார்.
தமிழ்நாட்டைப் பார்த்து மற்ற மாநிலங்கள் வியப்படைகின்றன!
அதனால்தான், அருமைத் தாய்மார்களே! உங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்களில் காலைச்சிற் றுண்டி வழங்கும் திட்டம். அந்தத் திட்டத்தைப் பார்த்து மற்ற மாநிலங்கள் எல்லாம் வியப்படைகின்றன.
தமிழ்நாட்டு மண், கல்வி வள்ளல் காமராசர் அவர் களுடைய மண் – காமராசர் அவர்கள் கொண்டுவந்த பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குகின்ற திட் டத்தை, எம்.ஜி.ஆர். அவர்கள் தொடர்ந்தார். முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்கள் சத்துணவுத் திட்டம், உண்மை யிலேயே சத்துணவாக இருக்கவேண்டும் என்று சொல்லி, இரண்டு முட்டையைக் கொடுத்தார்.
இதை குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே சிலர் சொன்னார்கள், ‘‘பள்ளியில் படிக்கும் சைவப் பிள் ளைகளை வெறுப்பேற்றுவதற்காகவே முட்டையைப் போடுகிறது தி.மு.க. அரசு” என்று.
அவ்வளவுதானே, ‘‘முட்டைக்குப் பதில் இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிடுங்கள்” என்று சொல்லி, வாழை விவசாயிகளுக்கும் புதுவாழ்வைக் கொடுத்தார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
அப்படிப்பட்ட ஓர் அருமையான திட்டம், இன்றைக் குக் காலைச் சிற்றுண்டியாகவும் மலர்ந்தது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை.
இவ்வளவு நிதி நெருக்கடியிலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது தமிழ்நாடு அரசு.
நாம் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு – ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது 29 பைசாதான்!
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் உரை யாற்றும்பொழுது மிக அழகாக எடுத்துச் சொன்னார். நம்மிடமிருந்து வாங்குகின்ற ஒரு ரூபாயில், ஒன்றிய அரசு 29 காசுதான் திரும்பத் தருகிறது என்று.
தந்தை பெரியார் அவர்கள் ஒரு உதாரணம் சொல்வார், ‘‘பட்டுச் சேலையை இரவல் கொடுத்த ஓர் அம்மையார், பின்னாலேயே மனைக்கட்டையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்” என்று சொல்வார். ஏனென்றால், கீழே அமர்ந்தால், பட்டுச்சேலை அழுக்காகிவிடுமே என்பதற்காகவாம்.
37 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவேண்டிய ஒன்றிய அரசு, ஒரு பைசாவைக் கூட கொடுக்கவில்லை!
ஒன்றிய அரசு நிதி கொடுக்காத நெருக்கடியிலும், மழை, புயல், வெள்ள நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவேண்டிய ஒன்றிய அரசு, ஒரு பைசாவைக் கூட கொடுக்கவில்லை.
அதனால்தான் இன்றைக்கு நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின் காதைப் பிடித்துத் திருகி பல குட்டுகளை வைத்திருக்கிறது.
ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக ‘‘பத்திரமாக தேர்தல்” நடக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.
பத்திரமானத் தேர்தலை நாம் கேட்டால், இவர்கள் தேர்தல் பத்திர திட்டத்தில் மெகா ஊழலை செய்திருக் கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சியினரை, ஒன்றிய அரசு திரிசூலத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள்.
தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; மற்றவர்கள் வந்து கற்றுச் செல்லுகின்ற கற்றிடம் என்றோம்!
கலைஞர் மறைந்தபொழுது என்ன சொன்னார்கள்? ‘‘தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது” என்று சிலர் சொன்னார்கள்.
நாங்கள்தான் சொன்னோம், ‘‘இது வெற்றிடம் அல்ல; வந்து கற்றுக்கொண்டு போகவேண்டிய, கற்றிடம்” என் றோம்.
இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பார்த்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பார்த்து கற்றுக்கொண்டு போகக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.
இதையெல்லாம் பார்த்து, என்னதான் செய்தாலும், நம்மால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்று பிதரமர் மோடி அதிகம் கவலைப்படுகின்றார்.
இன்றைக்கு என்ன சொல்கிறார் என்றால், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்‘’ என்று தத்துவம் பேசுகிறார்.
ஒரு பிரதமர் அப்படி இருந்தால், அது மகிழ்ச்சிதான். அப்படித்தான் ஒரு பிரதமர் இருக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாரா பிரதமர் மோடி?
140 கோடி மக்கள் என்றால், காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை – இந்தப் பக்கத்தில் வடகிழக்கு மாநிலங்கள் – அந்தப் பக்கத்தில் குஜராத் மேற்கில் என்று இருக்கக்கூடிய சூழலில், மணிப்பூர் என்ற ஊரில், பழங்குடி சகோதரிகள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த சகோதரிகள், இதைச் சொல்வதற்காக தாய்மார்கள் என்னை மன்னிக்கவேண்டும் – நம் சகோதரிகள் நிர் வாணப்படுத்தப்பட்டு தெருக்களில், சங்கிகளால் விரட் டப்பட்டனர். அதைத் தொலைக்காட்சிகளிலும் எல்லோ ரும் பார்த்திருப்பீர்கள். 140 கோடி மக்களில், மணிப்பூர் மக்கள் இல்லையா? அங்கே சென்று பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினாரா பிரதமர் மோடி?
அதேநேரத்தில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் அத்துணைப் பேரும் மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப் பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
அதேபோன்று, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களி லும், தூத்துக்குடி, நெல்லை, போன்ற மாவட்டங்களிலும் மழை, புயல், வெள்ளத்தால் மக்கள்பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார், தூத்துக்குடிக்குச் செல்கிறார், தனுஷ்கோடிக்குச் செல்கிறார், இராமேசுவரத் திற்குச் செல்கிறார், குலசேகரப்பட்டினத்திற்குச் செல் கிறார். ஆனால், தேசியப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாரா பிரதமர் மோடி?
‘‘வேற்றுமையில் ஒற்றுமை!’’
‘‘வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தத்துவத்தை இந்தியா கூட்டணி கடைப்பிடிக்கிறது.
‘‘எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல; எது நம்மை இணைக்கிறது” என்கிற மனிதநேயம்தான் மிகவும் முக்கியம்.
நம்முடைய மண் எப்படிப்பட்ட மண்?
‘‘வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடி னேன்” என்று கூறிய வள்ளலாரை உருவாக்கிய மண்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று சொல்கின்ற மண்.
நிவாரண நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை யென்றாலும், நம்முடைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், மிக சாமர்த்தியமாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, மாதாமாதம் மகளிருக்கு, கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்ற திட்டத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்திய பண வீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. சொன்னது என்ன?
கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டும் அல்லவா?
ஆண்டு ஒன்றிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொன்னார்கள் – அவர்களின் கணக் குப்படி பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டும் அல்லவா? கொடுத்தார்களா, என்றால், இல்லை என்பதுதான் பதில்.
‘நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிறாண்டாமல் இருந்தால் போதும்” என்று ஒரு பழமொழி உண்டு.
அதுபோல, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி புதிய வேலை வாய்ப்புகளைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை; இருக்கின்ற பணியிடங்களைக் காலி செய்துவிட்டார்கள்.
சாதாரண தங்கமல்ல – மாசில்லா தங்கம் – கொள்கை மாசற்ற தங்கம்!
நம்முடைய தமிழ்நாட்டின் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ அரசு – அன்றைக்குத் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்கள், வெளிநாட்டிற்குச் சென்று அங்கே இருந்த தொழி லதிபர்களைச் சந்தித்தார் நம்முடைய அருமை எங்கள் தங்கம் தென்னரசு அவர்கள். சாதாரண தங்கமல்ல – மாசில்லா தங்கம் – கொள்கை மாசற்ற தங்கம்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வெளிநாடு களுக்குப் பயணம் செய்து 9 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய அளவிற்குச் செய்தார்.
நிதி நெருக்கடி என்று நாம் சொன்னால்,
பிரதமர் மோடியோ, அதா‘னி’ என்பார்!
நிதி நெருக்கடி என்பது நம் மாநிலத்திற்கு. ஆனால், பிரதமர் மோடிக்கு நிதி நெருக்கடியே கிடையாது. என்ன நிதி என்று கேட்டால், திரும்பிப் பார்த்து ஒரு வார்த் தையை சொல்வார், ‘அதானி’ என்பார். அதானி என்றால், நிதிப் பிரச்சினை அவர்களுக்குத் தீர்ந்துவிடும்.
சட்டத்தை வளைத்தார்கள்; நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்தினார்கள்.
உச்சநீதிமன்றம் கண்டிப்பு!
தேர்தல் பத்திரத் திட்டம் வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவைப் போட்டது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு – மார்ச் 6 ஆம் தேதிக்குள் அத்துணை ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று.
ஆனால், அந்த வங்கி மார்ச் 5 ஆம் தேதி, வாய்தா கேட்டது, ஜூன் 30 ஆம் தேதிவரை கால அவகாசம் வேண்டும் என்று.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஓங்கித் தலையில் குட்டி, ‘‘இன்றைய கணினி உலகத்தில் இது உங்களால் முடி யாதா? அப்படியென்றால், நாங்களே அதனை செய்து கொள்கிறோம்” என்று சொன்னவுடன், வேறு வழியில்லாமல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
நன்கொடை என்ற பெயரால், மிகப்பெரிய ஊழலை செய்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதனை வெட்ட வெளிச்சமாக்கியது உச்சநீதிமன்றம்.
யார் நன்கொடை கொடுப்பார்கள்? யார் பயனடை கிறார்களோ, அவர்கள்தான் நன்கொடையைக் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று வந்து விழும் என்று சொன்னார்கள்.
‘‘வரும், ஆனால், வராது’’ என்றார்கள்!
எப்பொழுது 15 லட்சம் ரூபாய் வரும் என்று கேட்டபொழுது, திரைப்பட வசனம் போன்று, ‘‘வரும், ஆனால், வராது” என்று சொன்னார்கள். ‘‘ஜூம்லா” என்று சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு வகையிலும் ஒன்றிய ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாகத் தான் இருக்கிறது.
மாற்றம், மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வினால், மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே!
பா.ஜ.க.வின் ஊழலை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி. அறிக்கை
சாலை போடும் திட்டத்தில் பா.ஜ.க. செய்த ஊழலை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஒரு கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு நிர்ணயிக்கப் பட்ட தொகை 18 கோடி ரூபாய். ஆனால், 18 கோடி ரூபாய்க்குப் பதிலாக, 250 கோடி ரூபாய் என்று கணக்குக் காட்டியிருக்கிறார்கள்.
இதை நாங்கள் சொல்லவில்லை; இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சொல்லவில்லை; எதிர்க்கட்சியினர் சொல்லவில்லை. சி.ஏ.ஜி. என்று சொல்லக்கூடிய தணிக்கையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இதுபோல பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் ஏராளம் இருக்கிறது.
‘‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை” என்று உங்களுக்கெல்லாம் மிகத் தெளிவாகத் தெரியும்.
தென்கிழக்கு ஆசியாவே வளம் பெற்றிருக்கும்!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறி யிருந்தால், தென்கிழக்கு ஆசியாவே வளம் பெற் றிருக்கும்.
அதற்காக மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது, டி.ஆர்.பாலு அவர்கள் கப்பல் துறை அமைச்சராக இருந்தபொழுது, சோனியா காந்தி அம்மையாரை அழைத்து, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், மதுரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைத் தொடங்கினார்.
2000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்யப்பட்ட அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு இன்னும் 23 கிலோ மீட்டர் அளவில்தான் பணிகள் மீதமிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டம் நிறைவேறி விட்டால், தி.மு.க.விற்குப் பெருமை வந்துவிடுமே, காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை வந்துவிடுமே, கலைஞருக்குப் பெருமை வந்துவிடுமே என்பதால், உயர்ஜாதிக்காரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திடீரென்று ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் ‘இராமன் பாலம்’ என்ற ஒன்று. இராமன் அங்கேதான் பாலம் கட்டினார் என்று சொல்லி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்தத் திட்டத்திற்குத் தடை விதித்தது.
‘‘இராமன் பாலம் அல்ல; அது வெறும் மணல் திட்டுதான்’’ என்பதை ஒப்புக்கொண்டார்!
‘‘இராமன் பாலத்திற்கு” ஆதாரம் கொண்டு வாருங்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டபொழுது, வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி ஆண்டுகள் பல ஓடியது. கடைசியில், இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. மோடி அமைச்சரவையில் உள்ள ஒன்றிய அமைச்சரே, ‘‘இராமன் பாலம் என்பதற்கு ஆதாரமில்லை; அது வெறும் மணல் திட்டுதான்” என்பதை ஒப்புக்கொண்டார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்வோம் என்று சொன்னார்கள், அதைச் செய்தார்களா?
சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறியிருந்தால், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரமும் உயர்ந்திருக்கும். வேலை வாய்ப்பும் இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கும்.
தமிழ்நாடு ஒருபோதும் காவி மண்ணாக ஆகாது!
பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டிற்கு நீங்கள் எத்தனை முறை படையெடுத்தாலும், இங்கேயே நீங்கள் குடியேறினாலும் மக்கள் உங்களை நம்பத் தயாராக இல்லை. உங்களுடைய வித்தைகள் இங்கே எடுபடாது. தமிழ்நாடு ஒருபோதும் காவி மண்ணாக ஆகாது.
ஒரு தொழிற்சாலையும் உங்களுடைய ஆட்சியில் தொடங்கப்படவில்லை. இருந்த பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் மயமாக்கி விட்டீர்கள்.
சிறிய நாடான சிங்கப்பூருக்குக் கூட சொந்தமாக விமான நிலையம் உண்டு. ஆனால், இந்தியாவில் விமான நிலையங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன.
பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம்
தனியார் மயமாக்கப்பட்டு விட்டன!
நேரு காலத்தில் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம், இன்றைக்குத் தனியார் கைகளில் – அம்பானி, அதானி, டாட்டா, பிர்லாக்கள் என்கிற பெருமுதலாளிகளின் வசம் போய்விட்டன. இன்னொரு பக்கம் ஒன்றிய ஆட்சி உயர்ஜாதிக்காரர்கள் வசம் அகப்பட்டுக் கொண்டுவிட்டது.
பிரதமர் மோடி அவர்கள் இரண்டு தொழிற்சாலை களைத் தொடங்கியிருக்கிறார். வேறு யாரும் தொடங்க முடியாத தொழிற்சாலை.
ஒன்று, தினசரி பொய்யைத் தயாரிக்கின்ற தொழிற் சாலை. 20 ஆயிரம் பேருக்குச் சம்பளம் கொடுத்து, தினமும் தவறான செய்திகளையே பரப்புவது. பிறகு அதனை மாற்றிக் கொள்வது.
ஊழல்வாதிகள், கிரிமினல் குற்றவாளிகள் தூய்மைப்படுத்தப்படுவார்கள் –
பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன்!
இரண்டாவது, ‘‘தூய்மைப்படுத்துகின்ற தொழிற் சாலை” – யார் யாரெல்லாம் ஊழல் செய்திருக்கிறார்களோ, கிரிமினல் குற்றவாளிகளோ அவர்கள் எல்லாம் பா.ஜ.க. வில் சேர்ந்துவிட்டால், அவர்களைத் தூய்மையாக்கிவிடு வார்கள். அதுதான் தூய்மைப்படுத்துகின்ற தொழிற் சாலை.
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
வடநாட்டில் உள்ள மக்களும் தயாராகி விட்டார்கள்!
இந்தியா கூட்டணியினுடைய வெற்றி என்பது தென்னாட்டில் மட்டுமல்ல; வடநாட்டில் உள்ள மக்களும் தயாராகி விட்டார்கள்.
தமிழ்நாட்டிற்கு ஏன் இத்தனை முறை வருகிறார் பிரதமர் மோடி? ஏன் அண்ணாமலைகள் அலறுகிறார்கள் என்றால், அவர்களுடைய முயற்சி எதற்காகவென்றால், நோட்டாவைத் தாண்டவேண்டும் என்பதற்காகத்தான்.
நோட்டாவிற்கும் – அவர்களுக்கும்தான் போட்டி. அவர்களின் ரூபாய் நோட்டிற்குத்தான் செலவே தவிர, அவர்களால் நோட்டாவைத் தாண்ட முடியாது.
இ.பி.எஸ். – ஒ.பி.எஸ்.சுக்கிடையே யார் இரண்டாமிடம் வரவேண்டும் என்பதில்தான் போட்டி!
இப்போது இ.பி.எஸ். – ஒ.பி.எஸ். இடையே யார் முதலாவது வரவேண்டும் என்பதற்கு போட்டியில்லை; யார் இரண்டாமிடம் வரவேண்டும் என்பதில்தான் போட்டி.
எனவே நண்பர்களே, நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், வரப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான்! ‘‘இந்தியா கூட்டணி” ஆட்சி வந்தால்தான், ஜனநாயகம் காப்பாற்றப்படும்; இந்திய அரசமைப்புச் சட்டம் காப்பாற்றப்படும்.
மாணிக்கம் தாகூர் அவர்களுக்குக் ‘‘கை” சின்னத்தில் வாக்களியுங்கள்!
எனவே, நீங்கள் அனைவரும் வெற்றி வேட்பாளரான நம்முடைய மாணிக்கம் தாகூர் அவர்கள், மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்காக கை சின்னத்திலே வாக் களிக்கவேண்டும். நிச்சயமாக வெற்றி விழா கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்வோம்.
மறவாதீர் கை சின்னம்!
வெற்றி இந்தியா கூட்டணிக்கு!
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி இந்த வரலாற்றை சாதிக்கவிருக்கிறது.
வந்திருந்த உங்களுக்கு நன்றி!
ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்!!
கவனச் சிதறல்கள் வேண்டாம்!
மீண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – இந்தத் தொகுதிக்கு கை சின்னம்தான்!
கை கொடுங்கள், கை கொடுப்போம், வெற்றிக்குக் கை கொடுத்து, கைலாகு கொடுப்போம் என்று முடி வெடுங்கள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையில் சிறப்புரையாற்றினார்.
கருணை மழை பொழியும் ‘திராவிட மாடல்’ ஆட்சி!
காலைச் சிற்றுண்டி சாப்பிடாமல் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுகிறார்களே எங்கள் பிள்ளைகள் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த தாய்மார்கள், இன்றைக்கு அந்தக் கவலையைப் போக்கிய ஆட்சிதான் நமது ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ஆட்சி என மகிழ்ச்சியோடு சொல்லுகிறார்கள்.
‘‘அய்ந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்று சொல்வார்கள். இப்பொழுது அதைப்பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியமும் இல்லை. அதற்காக நிறைய
பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்கிற அவசியம் கிடையாது – அப்படி பொருள் கொள்ளவும் கூடாது!
ஆனால், ஒரு வீட்டில் அய்ந்து பெண்களை கல் லூரிக்கு அனுப்பினாலும்கூட, அத்தனைப் பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்று, ஆண்டிற்கு 12 ஆயிரம் ரூபாய்.
இதைப் பார்த்துவிட்டு, ஆண் பிள்ளைகளுக்கு அந்த உதவி இல்லையா? என்ற கேட்கிறார்கள்.
ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கக்கூடிய அளவிற்கு…
ஒரு காலத்தில் பெண்களுக்கு உரிமை கேட்டார்கள்; இப்பொழுது ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கக்கூடிய அளவிற்கு, சமத்துவத்தை உரு வாக்கிய ஒப்பற்ற ஆட்சியே ‘திராவிட மாடல்’ ஆட்சி.
அதுமட்டுமல்ல, இன்றைக்குப் பார்த்திருப்பீர்கள் – இந்தியாவினுடைய மற்ற மாநிலங்கள், தமிழ்நாட்டி னைப் பின்பற்றி வருகின்றன.
இது ஒன்றும் மோடியினுடைய ‘விளம்பர மாடல்’ அல்ல. ஏனென்றால், அவர்தான் ‘கேரண்டீ, கேரண்டீ’ என்று சொல்கிறார். இதுவரையில் அவர் கொடுத்த டீ, குஜராத் டீ – இப்பொழுது கொடுப்பது ‘கேரண்டீ’. ஏற்கெனவே கொடுத்த டீ எல்லாம் எந்தப் பயனையும் தரவில்லை.
– விருதுநகர் தேர்தல் பரப்புரையின்போது தமிழர் தலைவர் ஆசிரியர்
No comments:
Post a Comment