ராமருக்கே நாமமா? ஊழல் மோடி - ஊழல் பா.ஜ.க - மதுக்கூர் இராமலிங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 7, 2024

ராமருக்கே நாமமா? ஊழல் மோடி - ஊழல் பா.ஜ.க - மதுக்கூர் இராமலிங்கம்

தென்னிந்தியாவில் நான்கு மாநிலங்களில் உள்ள 41 சுங்கச்சாவடிகளை வகை மாதிரியாக எடுத்து ஆய்வு செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. பல சுங்கச் சாவடிகள் ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகும், கொள் ளையடித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2020 ஜூன் வரை 1,17,08,438 வாகனங்கள் கடந்து சென் றுள்ளன. ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் என்பது மலைக்க வைக்கிறது என்றால், அதில் 62,37,182 வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற விஅய்பி-களின் வாகனங்களாம். பரனூர் சுங்கச்சாவடியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் என்பது வாகன ஓட்டிகளை சாகடிக்கும் இடங்களாகவே உள்ளன. குஜராத்தில் போலியான சுங்கச் சாவடி ஒன்றை பாஜகவினர் அமைத்து, பகல் கொள்ளை, இரவு கொள்ளை என இரட்டைக் கொள்ளை அடித்தது சமீபத்தில் வெளி யானது. காலாவதி யான சுங்கச்சாவடி மூலமாகவும் போலி சுங்கச்சாவடி மூலமாகவும் கொள்ளையடிப்ப வர்களுக்கு வாய் மட்டும் வங்கக்கடல் போல நீள்கிறது.

நோய் ஒழிப்பா? ஊழல் வளர்ப்பா?

பிரதமர் மோடியால் பிரமாதமாக பேசப்படும் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் திட்டம் என்பது நோய் ஒழிப்பு திட்டமாக அல்ல; ஊழல் வளர்ப்பு திட்டமாகவே நடந்து கொண்டிருக்கிறது. 2.25 லட்சம் பேர் மருத்துவமனையிலிருந்து குணமாகி சென்ற பிறகும், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ததாக கணக்கு எழுதியுள்ளனர். இவை பெரும்பாலும், பாஜக ஆளும் இரட்டை இன்ஜின் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்ச கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், விளிம்பு நிலை மக்க ளுக்கு உதவ உருவாக்கப்பட்ட நிதி, மடை மாற்றப்பட்டு மோடி அரசின் விளம்பரங் களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறது சிஏஜி அறிக்கை.

அயோத்தியில் சுருட்டல்

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டியதுதான் தன்னுடைய ஆகப்பெரிய சாதனை என்று அள்ளிவிடுகிறார் மோடி. ஆனால், கோயில் கட்ட நிலம் கையகப் படுத்தியதிலும், ராமாயண புராண நிகழ்வுகள் நடந்த இடங்களை இணைக்கும் சுற்றுலா திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு சுருட்டியுள்ளனர். பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தில்தான் இதில் பெரும்பகுதி சுருட்டப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எரிவாயு இன்ஜின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்றாத தால் ஒன்றிய அரசுக்கு ரூ.153 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது சிஏஜி அறிக்கை. இதெல்லாம் எங்களுக்கு சோளப்பொரி என்கிறது மோடி அரசு. மோடி அரசுக்கு முந்தைய பாஜக அரசாங்கம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், பங்குச்சந்தை ஊழல், வியாபம் ஊழல் என ஊழல்கள் ஊர்வலம் நடத்தின. அதை பெரும் பேரணியாக மாற்றிக் காட்டியிருக்கிறது மோடி அரசு.
2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை கண்டறிந்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார் மோடி. ஆனால் சொந்த நாட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகூட தேர்தல் பத்திரக் கணக்கை கொடுக்க விடாமல் மிரட்டுவதுதான் இந்த ஊழல் ஒழிப்பு உத்தமரின் உண்மையான உருவம். பொதுத் துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்சி என யாரும் இது வரை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வில்லை. இந்த வங்கிக் கொள்ளை திரு டர்கள் உல்லாசபுரியில் உலா வரு கிறார்கள். மோடி அரசோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியை குறைத்தும், முடக்கி யும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.

-தீக்கதிர், 4.4.2024

No comments:

Post a Comment