வேலையில்லாத் திண்டாட்டம் வேலாகக் குத்துகிறதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

வேலையில்லாத் திண்டாட்டம் வேலாகக் குத்துகிறதே!

“வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு நாட்டின் சீர்மைக்கு வேட்டு வைக்கும் பேராபத்தான நிலையாகும். அதுவும் வேலை வாய்ப்பு இல்லாமை இளைஞர்களிடம் தாண்டவமாடினால், அது நாட்டின் அமைதியின்மைக்கு எதிரான வன்முறை கலாச்சாரத்தை வேகப்படுத்தி விடும் “ஆயிரங்கால் பூதம்” என்று மறைந்த பொதுவுடைமை சொக்கத் தங்கம் ப. ஜீவானந்தம் அவர்கள் குறிப்பிடுவதுண்டு. (தொடக்கத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க இளைஞராக வீரநடை போட்டவர்!).
வேலை வாய்ப்பின்றி நடமாடும் இளைஞர்களைக் கண் காணித்து, அவர்கள் தலையில் காவி முண்டாசு கட்டி தங்களின் மதவாத அரசியலுக்குப் பயன்படுத்தும் போக்கு வடமாநிலங்களில்

சர்வ சாதாரணம். பா.ஜ.க.விடம் தான் பணத்துக்குப் பஞ்சம் இல்லையே!

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு மேல் வேலைக்கு உத்தரவாதம் என்று 56 அங்குல மார்பை நிமிர்த்தி முழக்கமிட்டவர்தான் ‘விஸ்வகுருவான’ நரேந்திர தாமோதரதாஸ் மோடிஜி.

ஆனால் என்ன நடந்தது? பத்தாண்டுக் காலம் ஆட்சி – அத்தாணி மண்டபத்தில் அமர்ந்து இருக்கையைத் தேய்த்ததுதான் மிச்சம்!
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மய்யத்தின் அறிக்கைப்படி 20-24 வயதிற்கு உள்பட்ட இளைஞர்களில் 44.5 விழுக்காட்டினர் வேலை வாய்ப்பின்றி அல்லல்பட்டனர்.
25 முதல் 29 வயதுக்கு உள்பட்டவர்களில் 14.33 விழுக்காட்டினர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.
ஆண் தற்காலிக தொழிலாளர்கள் பெண் தற்காலிக தொழி லாளர்களைவிட 48 விழுக்காடு அதிகமாகவும் – நிரந்தர ஆண் தொழிலாளர்கள் பெண்களைவிட 24 விழுக்காடு அதிகமாகவும் சம்பாதிக்கின்றனர். நகர்ப்புற பெண்களுக்கான தொழிலாளர் விழுக்காடு 21.9 ஆகும். (ஆண்கள் விழுக்காடு 69.4 விழுக்காடு).
மோடி அரசு ஒரு தந்திரம் (ஏமாற்று வேலை) செய்துள்ளது. 2016ஆம் ஆண்டிலிருந்தே வேலை வாய்ப்புக் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடுவதில்லை என்பதுதான் அந்தத் தந்திரம். வெளியிட்டு இருந்தால் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு விடுமே – அதனால்தான் இந்த ஏமாற்று வேலை – அச்சமும் கலந்தது!
2013-2018 கால கட்டத்தில் வேலை வாய்ப்பு தொழிலாளர் எண்ணிக்கை ஆகியவை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுண்டு. ஆனால், அது வெளியிடப்படவில்லை என்பதுதான் கவனிக்கத்தக்கதாகும்.

உண்மைநிலை என்ன? 2017 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 15 லட்சம் வேலை வாய்ப்புகள் பறி போயின.

2020இல் கோவிட் தொற்றின் போது 12 கோடி மக்கள் இருந்த வேலையையும் இழந்த பரிதாப நிலை. 2021ஆம் ஆண்டில் கோவிட்டின் இரண்டாவது தாக்குதலில் ஒரு கோடி இந்திய மக்கள் மேலும் வேலையைப் பறி கொடுத்தனர்.

ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ரயில்வே துறையில் 90 ஆயிரம் இடங்களுக்கு (கேங்க் மேன், சுவிட்ச்மேன் உள்ளிட்டவை) 2 கோடியே 80 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே!

பட்டதாரிகளில் 42 விழுக்காட்டினர் வேலையின்றித் தவிக்கின்றனர். மனித பலம் இருந்தும், அது பயன்படுத்தப்பட முடியாத நிலை பா.ஜ.க. ஆட்சியின் அவலமே!

நூறு நாள் வேலைத் திட்டம் என்பது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கொண்ட வரப்பட்ட மகத்தான பெருந்திட்டம்.
ஆண்டில் நூறு நாட்களுக்கான அந்த வேலைத் திட்டத்தை மேலும் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை; இருந்ததையும் இடுப்பை முறித்ததுதான் மோடி அரசின் ‘மனிதாபிமான வேலை’ (?)
என்ன செய்தது மோடி அரசு? கடந்த 2022-2023ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 89,000 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டிலோ ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவாக்கி நாள் ஒன்றுக்கு ரூ.400 ரூபாய் அளிக்கப்படும் என்று இந்தியா கூட்டணி உறுதி அளிக்கிறது.
தொழிலாளர்கள் ஒரு பக்கம் நாளும் நசிந்து கொண்டு இருக்க, இந்தியாவின் ஒட்டு மொத்த சொத்து வளத்தில், ஒரு விழுக்காட்டினரிடம் 33% வளமும், 50 விழுக்காடு மக்களிடம் 5.9% வளமும் இருக்கின்றன.

குறிப்பாக சொல்லப் போனால் நாட்டின் பொருளாதார சிண்டு கார்ப்பரேட்டுகளின் கையில் தான் இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியின் கொள்கையே நாட்டுடைமைகளை தனியார் உடைமை ஆக்குவதுதான். தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு இல்லாமையால் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை அதல பாதாளத்திற்கு தள்ளப்படும் நிலைதான்.

இத்தகைய முதலாளித்துவ பாசிச ஆட்சியை நீடிக்க விடலாமா என்பதுதான் மக்கள் மத்தியில் வெடித்தெழும் கேள்வி! விழித்துக் கொண்டால் உயிர் தப்பலாம்; இல்லையேல் என்னாகும் என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

வீழட்டும் மோடி தலைமையிலான பிஜேபி பாசிச ஆட்சி! வெல்லட்டும் இந்தியா கூட்டணி!!

No comments:

Post a Comment