இந்தியாவில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது அதைக் காப்பாற்ற "இந்தியா" கூட்டணியில் உள்ள தி.மு.க., காங்கிரசுக்கு வாக்களிப்பீர்! - ஆசிரியர் கி. வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

இந்தியாவில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது அதைக் காப்பாற்ற "இந்தியா" கூட்டணியில் உள்ள தி.மு.க., காங்கிரசுக்கு வாக்களிப்பீர்! - ஆசிரியர் கி. வீரமணி

featured image

‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் பரப்புரைப் பயணம்
இந்தியாவில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது
அதைக் காப்பாற்ற “இந்தியா” கூட்டணியில் உள்ள தி.மு.க., காங்கிரசுக்கு வாக்களிப்பீர்!
ஆசிரியர் கி. வீரமணி தென்காசி, திருநெல்வேலியில் மக்களிடம் வேண்டுகோள்!

தென்காசி, ஏப்.3-தமிழர் தலைவர் ஆசிரியர் கி, வீரமணி அவர்கள் நேற்று (2.4.2024) தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களான தி.மு.க., காங்கிரசு வேட் பாளர்களை ஆதரித்து பரப்புரைப் பயணத்தை தென்காசியில் தொடங்கினார். தென்காசி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பரப்புரை செய்தார். கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

25.3.2024 அன்று தஞ்சையில் நடைபெற்ற பொதுக் குழுவில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான “இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 2.4.2024 தென்காசி முதல் ஏப்ரல் 17 தஞ்சை வரை பரப்புரை செய்ய வேண்டும் என வடித்த தீர்மானத்தின் படி, முதல் கூட்டம் ஏப்ரல் 2 அன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன் தலைமையில் மாவட்டச் செயலாளர் முருகன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டக் கழகக் காப்பாளர் டேவிட் செல்லதுரை, பொதுக்குழு உறுப் பினர்கள் இராமச்சந்திரன், பொன்ராஜ் மற்றும் தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் உதய சூரியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பெரிதும் உறுதுணையாக இருந்தவர் தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் ஆவார்.

கழகத்தின் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் பா.ஜ.க. அரசின் 10 ஆண்டு ஆட்சியின் அவலங்களை தோலுரித்துத் தொங்கவிட்டார். ஆசிரியர் வருகை தந்தவுடன் தனது உரையை முடித்துக் கொண்டு, அடுத்த கூட்டமான திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நான்கு கருத்துப் போர் ஆயுதங்கள்!

கழகத் தோழர்கள், ’இந்தியா’ கூட்டணிக் கட்சியின் பிரமுகர்கள் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். தென்காசியில் தி.மு.க.வின் சார்பில் மருத்துவர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, களத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்து கொண்டிருந்தார். முன்னதாக பாசிசத்தை வீழ்த்த ஆசிரியர் வழங்கியுள்ள நான்கு கருத்துப் போர் ஆயுதங்களான ‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்’, பா.ஜ.க.வின் ப்ரிபெய்டு, போஸ்ட் பெய்டு தேர்தல் பத்திர முறைகேடுகள்’, ’பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக் காரரின் திறந்த மடல்!’, மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் ஏன்?’ ஆகிய புத்தகங்களை அறிமுகம் செய்வித்து ஆசிரியர் பேசினார். தோழர்கள் ஆசிரியரிடம் அதற்குரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.

தென்காசியில் தமிழர் தலைவர்!

தொடர்ந்து மருத்துவர் ராணியை ஆதரித்து ஆசிரியர் பேசத்தொடங்கினார். காலையில் இருந்து கடுமையான வெப்பத்தால் அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டி ருந்தனர். மாலையில் அதற்கு மாறாக கருமேகங்கள் விசிறி அடிக்கும் காற்றுடன் தூறல் பொழியத் தொடங்கியது. ஆசிரியர் தொடக்கத்திலேயே, ”நான் பேசத் தொடங்கும் போது மழை வருகிறது” என்றார் சிரித்துக்கொண்டே. மக்களும் பூரிப்புடன் சிரித்தனர். தொடர்ந்து, ”காலூன்றி விட்டோம் என்று சொல்கிறார்கள். மிஸ்டு கால் கட்சி எப்படி காலூன்ற முடியும்?” என்று முன்னோட்டமே இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே இப்படிச் சொன்னதும், மக்கள் மிகச் சரியாக புரிந்து கொண்டு கையொலி எழுப்பியதோடு ஆனந்தமாக சிரித்துக்கொண்டனர்.
பிறகு பிரதமர் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருவது போல் ஆறு முறை வந்துவிட்டதை எடுத்துரைத்து, “ஆறு மனமே ஆறு என்று வந்தாலும், ஆறுமுகத்தோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது” என்று ’பஞ்ச்’ வைத்து பேசினார்.

கச்சத்தீவு பற்றி தவறாக பிரதமரும், பா.ஜ.க.வினரும் பேசி வருவதை சுட்டிக்காட்டி, “சீனா 2000 கி.மீ இந்தியாவில் இப்போது ஆக்கிரமிப்பு செய்ததைப் பற்றிப் பேசாமல், 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றிய அரசு கொடுத்ததைப் பற்றி பேசுகிறார்கள்” என்று ஆதாரங்களுடன் சாடிவிட்டு, “வித்தைகளிலேயே உச்சம் மோடி வித்தைதான்” என்று மேலும் ஒரு ’பஞ்ச்’ வைத்தார். மக்கள் குதூகலத்துடன் சிரித்தனர். இறுதியாக, ”வெற்றி பெறப்போவது இந்தியா கூட்டணிதான். ஆகவே, நீங்கள் ஏப்ரல் 19 அன்று மருத்துவர் ராணி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியில் தென்காசி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அமுதன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்து கொடுத்தார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் இனியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் கோபால், ஒன்றியத் தலைவர் சண்முகம் மற்றும் ஆலங்குளம் பெரியார் குமார், கீழப்பாவூரைச் சேர்ந்த புதிய பழனி, பி.எஸ்.என்.எல். ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருநெல்வேலியில் தமிழர் தலைவர்!

தென்காசியில் கூட்டத்தை முடித்துக்கொண்டு எட்டு மணியளவில் ஆசிரியர் திருநெல்வேலியை நோக்கி தனது கருஞ்சட்டைப் படை பரிவாரங்களுடன் பயணத்தைத் தொடங்கினார். திட்டமிட்டபடி அங்கே, மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். முன்னதாக மேனாள் அமைச்சர் மைதீன்கான், தி.மு.க. பொறுப்பாளர் ஆலடி எழில்வாணன் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். திராவிடர் கழகக் காப்பாளர்கள் வேலாயுதம், காசி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரபாண்டிய கட்டபொம்மன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சூர்யா, மாவட்ட மகளிரணித் தலைவர் பானுமதி, மாநகரச் செயலாளர் வெயிலுமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தனர். வருகை தந்திருந்த மேனாள் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு, நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், காங்கிரசு வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் உரை யாற்றினர்.
குமரி மாவட்டத் தலைவர் எம்.எம். சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன், தி.மு.க. செய்தி தொடர்பு துறைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்சினி, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலைராஜா, கிருத்துவ ஆலய பணியாளர் நல வாரியத் தலைவர் விஜிலா சத்யானந்த், தி.மு.க. சட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுப. சீதாராமன், காங்கிரசு மாநகர் மாவட்டத் தலைவர் சங்கர பாண்டியன், சி.பி.அய். (மா) மாவட்டச் செயலாளர் சிறீராம், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான ரசூல் மைதீன், வி.சி.க. மாநகர் மாவட்டச் செயலாளர் முத்து வளவன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் நெல்லை தமிழரசு, திராவிடர் தமிழர் கட்சி நெல்லை கதிரவன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இளமாறன் கோபால், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சந்தானம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப் பினர் அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

பிரதமர் மோடியின் புதிதாக கேரண்ட் டீ… கேரண்ட் டீ…

புத்தக அறிமுகம், விற்பனை முடிந்து ஆசிரியருக்கு இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு பிரமுகர்கள் பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். 10 மணிக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கும் போது ஆசிரியர் உரையாற்றினார். “மாற்றம் தேவை என்று ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தான் தந்தார்கள்” என்ற முத்திரையோடு தொடங்கினார். தொடர்ந்து அவர், “பிரதமர் மோடி புதிதாக கேரண்ட் டீ… கேரண்ட் டீ… என்று புதிதாக டீ விற்றுக் கொண் டிருக்கிறார். ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த கேரண்ட் டீ… என்னாயிற்று?” என்று கேள்வி கேட்டு, மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர், அதற்குப் பதிலாக விஞ்ஞானபூர்வமாக ஊழல் தான் செய்திருக்கிறார்” என்று தேர்தல் பத்திர முறைகேடுகளை பட்டியலிட்டார். 140 கோடி மக்களும் மோடியின் குடும்பம் என்று பிரதமர் பேசி வருவதை சுட்டிக்காட்டி, “அந்தக் குடும்பத்தில் மணிப்பூர் மக்கள் இல்லையா?” என்று சுருக்கென்று தைக்கும்படியாக ஒரு கேள்வி கேட்டார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களவை துணைத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் அவலத்தை மக்கள் முன் எடுத்து வைத்தார்.

ஸ்டாலினும், ராகுலும் நாளைய நம்பிக்கை!

தனது வயதைக் குறிப்பிட்டு அனைவரும் பேசியதை நினைவூட்டி, “ஜனநாயகத்தை ஒருவன் காப்பாற்ற முயற்சி செய்தான். அந்த முயற்சியில் அவன் இறந்தான் என்பதுதான் எனக்குப் பெருமை” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியதும், அனைவரிடமும் ஒரு இறுக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ”ஏன் நான் ஓய்வெடுக்க வேண்டும்? எனது கொள்கை ஆசான், 95 வயதில் மூத்திரச் சட்டியை தூக்கியபடி பேசினாரே” என்று பெரியாரை நினைவூட்டியதால் அனைவருக்கும் மயிர்க்கூச் செரிந்தது. தொடர்ந்து, “இப்போது ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டு மானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என்றதும், மக்கள் அதை அங்கீகரித்து பலத்த கையொலி எழுப்பினர். பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் ஸ்டாலினும், இந்திய அளவில் காங்கிரசின் இளந்தலைவர் ராகுல் காந்தியும் சிம்மசொப்பனமாக இருக்கின்றனர்” என்றார்.

தேர்தல் பத்திர மோசடி என்பது கடலில் மூழ்கியுள்ள ஒரு பனிப்பாறையின் முனையளவுதான். இன்னும் பாறை இருக்கிறது. தண்ணீருக்குள் மலையே இருக்கிறது” என்று கூறி நிறுத்தினார். இது தேர்தல் பத்திர முறைகேடு எவ்வளவு மோசமானது என்பதை புரிய வைத்து சேது சமுத்திரத் திட்டம் மூடநம்பிக்கையைச் சொல்லி நிறுத்தப்பட்டதை நினைவூட் டினார். இறுதியாக, ”பிரதமர் மோடி மற்ற பிரதமர்களைப் போல் தொழிற்சாலைகளை உருவாக்கவில்லை. ஆனாலும், இரண்டு தொழிற்சாலைகளை மோடி உருவாக்கியுள்ளார்” என்றதும் மக்கள் திகைத்து ஆசிரியர் என்ன சொல்லப் போகிறார் என்று உற்று கவனித்தனர். ஆசிரியர், “ஒன்று பொய் சொல்லும் தொழிற்சாலை! மற்றொன்று, ஊழல்வாதி களை தூய்மைப்படுத்தும் தொழிற்சாலை” என்று முடித்ததும் ஆசிரியரின் பேச்சில் முரண்பாடு போல் உள்ளதே என்று எண்ணியவர்கள் தங்களின் தவற்றை உணர்ந்து வெடித்துச் சிரித்தனர். ”ஆகவே தோழர்களே, நமது காங்கிரசு வேட்பாளர் ராபர்ட் புரூஸ்-க்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக தச்சநல்லூர் பகுதித் தலைவர் கருணாநிதி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இந்த தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தில் மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா. குணசேகரன், கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, பெரியார் மருத்துவக் குழுமத்தின் தலைவர் மரு.இரா.கவுதமன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிர மணியம்,கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேசு, தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்டோர் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment