தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை நாள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை நாள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஏப்.5- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 19ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலும், விளவங்கோடு சட்ட மன்ற தொகுதிக்கு இடைத் தேர்தலும் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. அதற்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதால், அந்த தேதியை பொது விடுமுறை நாளாக சட்டப்படி அறிவிக்க வேண்டும். அதன்படி, வரும் 19ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை இல்லாவிடினும் ஆதார் உட்பட 12 ஆவணங்கள் போதுமானது

சென்னை,ஏப்.5- மக்களவைத் தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன் படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தேர்தல் ஆணையத் தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவ ணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க 12 ஆவணங்களை தேர் தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
1. ஆதார் அட்டை, 2. பான் கார்டு, 3.ரேஷன் அட்டை, 4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக், 5.ஓட்டுநர் உரிமம், 6. பாஸ்போர்ட், 7. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 8. புகைப்படத்துடன் கூடிய ஒன்றிய மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை, 9. நாடாளுமன்ற, சட்டமன்ற எம்எல்சி இவற்றின் அதிகாரப் பூர்வ அடையாள அட்டை, 10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ், 11. ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை, 12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங் கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி
பள்ளி கல்வித்துறை முனைப்பு

சென்னை,ஏப்.5- அரசுப் பள்ளிகள் இணையதள வசதிகளை துரிதமாகப் பெறவேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 80 ஆயிரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தும் ஜூன் மாதம் பள்ளி திறப்பின்போது முடிக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த பணிகளில் ஈடுபட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களை குரல்வழிப் பதிவின் வழியாக பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் போர்டு மற்றும் கையடக்கக் கணினி போன்ற தொழில்நுட்ப ரீதியிலான வகுப்பறை கற்றலை மாணவர்களுக்கு வழங்க இணையதள வசதி அவசியமானது. இதுவரை சுமார் 1,000 அரசு தொடக்க, நடுநிலைபள்ளிகள் மட்டுமே இணையதள வசதிகளை பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இணையதள வசதிகளைப் பெறுவதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். இந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்தால் மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீது பெரும் நம்பிக்கை வரும். இந்த 3 மாதத் துக்கான நமது உழைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கான பெரிய மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment