மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் தலையிடும் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் தலையிடும் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு

featured image

புதுடில்லி, மார்ச்.8- ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் கேரள அரசு தொடர்ந்த வழக் கில் இருதரப்பும் பேசி தீர்வுகாண வேண்டும் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

கேரள அரசு மனு

கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கூட்டணி அரசு நடந்து வருகிறது. அந்த அரசு கடன் வாங்க ஒன்றிய அரசு உச்சவரம்பு நிர்ணயித் துள்ளது. இதுதொடர்பாக ஒன் றிய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை.

இதையடுத்து, மாநிலத்தின் நிதி நிலவரத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு இருக்கும் பிரத்யேக, தன்னாட்சி அதிகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டி, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது.

இம்மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நிபந்தனை கூடாது

கேரள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபலும், ஒன்றிய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணியும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ராமனும் ஆஜராகி வாதிட்டனர்.

பின்னர், நீதிபதிகள் கூறிய தாவது:-

கடன் வாங்குவதற்கு நிபந்தனை விதிக்கும் ஒன்றிய அரசின் அதி காரத்தை எதிர்த்து கேரள அரசு மனு தாக்கல் செய்திருப்பதால், அந்த மனுவை திரும்பப் பெற் றால்தான். கூடுதலாக கடன் பெறுவதற்கான கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று ஒன்றிய அரசு நிபந்தனை விதிக்கிறது. அப்படி நிபந்தனை விதிக்கக் கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ஒன்றிய-மாநில அரசுகளுக் கிடையிலான பிரச்சினைகளை விசாரிக்க அரசமைப்புச் சட்டத் தின் 131-ஆவது பிரிவு, உச்சநீதிமன் றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது. இது தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்சினை.

பொருளாதாரத்தை பாதிக்கும்

மாநிலங்களின் தவறான நிதி நிர்வாகத்தால். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, தவறான நிதி நிர்வாகம் குறித்து ஒன்றிய அரசு கவலைப்பட வேண்டும்.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதற்காக கேரள அரசும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிடக் கூடாது. முடிவு எடுக்கும் திறன் படைத்த மூத்த அதிகாரிகளும், இதில் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்.
அடுத்தகட்ட விசாரணை தேதியை நாங்கள் நிர்ணயிக்க மாட்டோம். இருதரப்பும் விரும் பும் தேதியில் நாங்கள் விசா ரிப்போம்.
-இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment