இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் செவிலியர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது. போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.
எனவே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது .
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் டாக்டர், என்ஜினீயர், செவிலியர், வீட்டு வேலைக்கு செல்லும் நபர்கள், மேற்பார்வையாளர், திறன் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வேலை வாய்ப்பு பெற முடியும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று டாக்டர், என்ஜினீயர், நர்ஸ், வீட்டு வேலைக்கு செல்லும் நபர்கள் அதற்கு பதிவு செய்ய வேண்டும். அடிக்கடி புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மகேஸ்வரன் சமீபத்தில் புதிய வேலை வாய்ப்பு குறித்து வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது:
“இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து செவிலியர் பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளது. மேலும், அந்த நாடுகளுக்கு செவிலியர் பணிக்கு செல்வதற்கு அந்தந்த நாட்டிற்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்பணிக்கான நேர்காணலுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இதனை கருத்தில் கொண்டு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செவிலியர் பணிக்கு செல்ல விருப்பமும், ஆர்வமும் உள்ள நர்சுகள் மற்றும் நர்சிங் படிப்பு பயிலும் மாணவ – மாணவிகளுக்கு சிறப்பு தேர்வுக்கான பயிற்சியினை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள செவிலியர்கள் மற்றும் நர்சிங் படிப்பு பயிலும் மாணவ – மாணவிகள் தங்களின் சுயவிவர விண்னப்பத்தினை அயல்நாட்டு வாலைவாய்ப்பு நிறுவனத்தின் omcflt.24@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம். மேலும் இந்த நிறுவனம் தொடர்பான தகவல்களை www.omcmanpower.tn.gov.in மற்றும் OMCL Mobile App வாயிலாக அறிந்து கொள்ளலாம்” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment