- தொண்டறத் தாய் அன்னை மணியம்மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்!
- ஜனநாயகத்தைக் காப்பாற்ற, ஆதிக்கமற்ற, பெண்ணடிமையற்ற, ஜாதி, தீண்டாமையற்ற
சமுதாயத்தை உருவாக்க வரும் மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் நாம் எடுக்கும் சூளுரை இதுவே!
- தஞ்சையில் தமிழர் தலைவர் பேட்டி
தஞ்சை, மார்ச் 10 ஆதிக்கமற்ற, பெண்ணடிமையற்ற, ஜாதி தீண்டாமையற்ற வகையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான இன்று சூளுரை எடுப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (10-3-2024) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
ஓர் அற்புதமான தன்னல மறுப்பாளர்!
அன்னை மணியம்மையார் அவர்களுடைய 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (10.3.2024).
அன்னை மணியம்மையார் அவர்கள் தொண்டறத் தாயாக, தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்த ஓர் அற்புதமான தன்னலமறுப்பாளர்.
அவ்வளவு அவதூறுகளையும், வசைமொழி களையும் தாண்டி, பொதுவாழ்க்கையில் அவர்கள் அடக்கத்தோடு அவற்றை எதிர்கொண்டவர்.
எவருக்கும் அவர் வார்த்தைகளால் பதில் சொன் னதே கிடையாது, மாறாக, செயல்களால் அன்னை மணியம்மையார் அவர்கள் உருவாக்கிய அந்த அறம், இந்தப் பல்கலைக் கழகம்.
தனக்கு வந்த சொத்துகள் அத்தனையையும் தன் னுடைய குடும்பத்திற்கோ அல்லது மற்றவர்களுக்கோ அளிக்காமல், முழுக்க முழுக்க அதனை அறப்பணிக் கழகமாக ஆக்கி, பாலிடெக்னிக்காகவும், பல்கலைக் கழகமாகவும், பல மருத்துவமனைகளாகவும் ஆவதற்கு அவர்கள் அடித்தளமிட்டார்கள்.
தந்தை பெரியாருக்குப் பிறகு…
தந்தை பெரியார் அவர்கள் எப்படி தன்னுடைய முழுச் சொத்தையும் பொதுமக்களுக்குப் பயன்படும் படியாக அறக்கட்டளையாக ஆக்கி, இன்றைக்குப் பயன்படுகின்ற வகையில், கைவிடப்பட்ட குழந்தைகளி லிருந்து, கல்வி கற்கவேண்டிய பெரியோர்வரை பயன்படும்படியாகச் செய்தார்களோ, அதைப்போல, அன்னை மணியம்மையார் அவர்கள், பெரியாருக்கும் தொண்டு செய்தார்; இயக்கத்தையும் வளர்த்தார். தமிழ் மக்களுக்கும், திராவிட சமுதாய மக்களின் இழிவைப் போக்குவதற்கும் கடைசிவரையில், அவருடைய இறுதிமூச்சு அடங்குகின்றவரையில் களமாடினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதில் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி வந்திருக்கின்றது என்றால், அதில் அன்னை மணியம்மையார் அவர்கள், தந்தை பெரியாருக்குப் பிறகும் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்ததினால்தான்.
எங்களுடைய அடிப்படைக் கொள்கை
எல்லாவற்றையும்விட ஒரு சிறப்பான அம்சம் – நெருக்கடி காலத்தில், ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் அன்னை மணியம்மையார் அவர்களை அழைத்து, ”திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு கொடுக்கின்ற ஆதரவை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொண்டால், உங்கள் தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறோம்” என்று சொன்னார்கள்.
உடனடியாக அவர்களுக்குப் பதில் சொல்வதைப் போல அன்னை மணியம்மையார் அவர்கள் எழுந்து நின்று, ”அது எங்களுடைய அடிப்படைக் கொள்கை. அதை விட்டுக் கொடுத்து, உங்களிடமிருந்து எங்கள் தோழர்கள் விடுதலை பெறவேண்டிய அவசியமில்லை. எத்தனை ஆண்டுகாலமானாலும் எங்கள் தோழர்கள் சிறையில் இருப்பார்கள். சிறையில் மடிவதற்குக் கூட தயாராக இருப்பார்கள்” என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, ராஜ்பவனை விட்டு வெளியேறினார்.
கலைஞருக்கும் – நாவலருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு!
இப்படிப்பட்ட வீராங்கனை அன்னை மணியம் மையார் அவர்கள். அவருடைய அருமையான ஒத்துழைப்பினால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு காலகட்டத்தில், கலைஞருக்கும் – நாவலருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், இரு கூறாகப் பிரிகிறோம் என்று சொன்னபொழுது, இருவரையும் பெரியார் திடலுக்கு அழைத்து, ”நீங்கள் எப்பொழுதும் ஒன்றாக இருக்கவேண்டும்” என்று சொன்னதை, மிகுந்த பாசத்தோடும், நன்றியோடும் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிறார்.
இன்று அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப் பான தொண்டறத் தாயினுடைய 105 ஆம் ஆண்டு பிறந்த நாள்! இந்த நாளில், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்; மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண் டும்; பாலியல் அநீதிகள் ஒழியவேண்டும். பெண்களுக் குரிய பாதுகாப்பும், சமத்துவமும், பங்களிப்பும், அதிக £ரத்துவமும் அதிகமாக வரவேண்டும் என்பதற்கு அவரே எடுத்துக்காட்டு.
இந்திய வரலாற்றிலேயே திராவிட இயக்கத்திற்கு…
இந்திய வரலாற்றிலேயே திராவிட இயக்கத்திற்கு, தந்தை பெரியாருக்குப் பிறகு தலைமை தாங்கிய மிகப்பெரிய சாதனையாளர் அவர். இந்தியாவையே கலங்கடிக்கக் கூடிய ”இராவண லீலா” என்ற மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நடத்திக் காட்டி, அதற்காக சிறை சென்ற – விலை கொடுத்த ஒரு மிகப்பெரிய வழிகாட்டியான சுயமரியாதை வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்கள்.
சூளுரையை பெரியார் தொண்டர்களான நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்!
அவர்களுடைய இந்தப் பிறந்த நாளில், அவர் விரும்பிய ஒரு புதிய சமுதாயத்தைக் காணவேண்டு மானால், ஆதிக்கமற்ற சமுதாயத்தைக் காணவேண்டும்; ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும்; ஜாதி, தீண் டாமை, பெண்ணடிமை இவற்றை நீக்கிய ஒரு சமூகத்தை ஏற்படுத்தவேண்டுமானால், வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது – அந்த இலட்சியத்தை அடைவதற்கு ஒரு சிறந்த வழியாகும். இந்தத் தேர்தல் சூழல் நேரத்தில், அந்த சூளுரையையும் பெரியார் தொண்டர்களான நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.
உச்சநீதிமன்றம் சொன்னதை, ஏற்கவில்லை மோடி அரசு!
செய்தியாளர்: தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்திருக்கிறாரே, அவரே பதவியை ராஜினாமா செய்தாரா? ராஜினாமா செய்ய வைக்கப்பட்டாரா?
தமிழர் தலைவர்: போகப் போகத் தெரியும். காரணம் என்னவென்றால், ஏற்கெனவே ஒரு வழக்கு வந்தபோது, தேர்தல் ஆணையர்களை, தாங்கள் விரும்புகின்ற அளவிற்கு, அவர்களுக்குப் பதவி நீட்டிப்பை ஏழு முறை, எட்டு முறை என்று கொடுத் ததை, உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதற்கும், அரசமைப்புச் சட்ட விதிப்படி, அவர்கள் குறிப்பிட்ட காலம் பதவியில் இருக்கக் கூடிய அளவிற்கே வாய்ப்பு இருக்கவேண்டும். ஆகவே, இந்த புதிய நியமனங்கள் சரியில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்னதை, ஏற்கவில்லை மோடி அரசு. மாறாக, அவர்கள் கருதியபடி, உச்சநீதிமன்றத் தினுடைய நீதிபதி ஒருவர், நியமனக் குழுவான மூவரில் ஒருவராக இடம்பெறவேண்டும் என்று சொன்னபொழுது, அதனை ஏற்காது – மீண்டும் அந்த பழைய சட்டத்தில், தங்களுடைய பிரதிநிதியே அமைச்சரவையிலிருந்து இருப்பார்கள் என்றெல்லாம் ஆக்கியிருக்கிறார்கள். எப்படி தேர்தல் பத்திரத் திட்டம் என்பது இன்றைக்கு மிகப்பெரிய ஒரு சூழ்ச்சிக் களம் – அரசியலில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., மோடி அரசு செய்ததைப்போலவே, இதையும் அவர்கள் தங்கள்வயப்படுத்தி இருக்கிறார்கள். ஆகவேதான், அது மிகப்பெரிய மர்மக் கலையாக இருக்கிறது. மர்மக் கலை மன்னர்களைப்பற்றி பல்வேறு வெளிச்சங்கள் விரைவில் வெளிவரும்.
பெண் வாக்காளர்களை ஏமாற்ற முடியாது!
செய்தியாளர்: சமையல் எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் விலை குறைத்திருப்பது மிகப்பெரிய சாதனை என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஒட்டகக் கதை ஒன்று உண்டு. அந்த ஒட்டகத்தின்மீது ஏராளமான வைக்கோலை ஏற்றிவிட்டு, பிறகு, கொஞ்சம் வைக்கோலை இறக்கி ஒட்டகத்திற்குக் காட்டுவார்கள்; ஒட்டகமும் முழு பாரமும் குறைந்துவிட்டது என்று நினைக்கும். ஆனால், நம்முடைய பெண் வாக்காளர்கள் ஒட்டகங்கள் அல்ல; உணர்ந்தவர்கள், ஏமாறமாட்டார்கள்.
எந்த சரக்கும் இல்லை என்பதற்கு இதுதான் அடையாளம்!
செய்தியாளர்: தஞ்சை பெரிய கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்திருப்பதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அண்ணாமலைக்கு வேறு எந்த சரக்கும் இல்லை என்பதற்கு இதுதான் அடையாளம்.
அரசியல் பேசுகிறேன் என்று அவர் ஒவ்வொரு நாளும், உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்து, அதன்மூலமாக தான் உயிரோடு இருக்கிறேன், தன்னுடைய கட்சி உயிரோடு இருக்கிறது என்று காட்டிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். அவருக்கு எதுவும் கிடைக்காதபொழுது, பரத நாட்டியமாவது கிடைத்திருக்கிறதே!
ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட ஒரு முடிவு
செய்தியாளர்: தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட ஒரு முடிவு. ஆகவே, அந்த முடிவை எப்படியாவது மாற்ற முடியுமா? என்பதற்காகத்தான் சிரசாசனம் போட்டுப் பார்க்கிறார்கள்.
கதவு திறந்திருக்கிறது, கதவு திறந்திருக்கிறது என்று முன்பு பா.ஜ.க. சொன்னது. கதவையே கழற்றி வைத்துவிட்டோம் என்று இப்பொழுது பா.ஜ.க. சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்பொழுது கதவைத் திறந்தாலும், ஜன்னலைத் திறந்தாலும், கட்டடத்தையே முழுக்க திறந்து வைத்திருந்தாலும்கூட, அவர்களைச் சீண்டுவார் இல்லை.
இப்பொழுது அவர்களுக்கு இருக்கின்ற கவலைப் படியே மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு ஓடி ஓடி வருகிறார்; தமிழ்நாட்டு மக்களைத் தேடித் தேடி வரு கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், ”மிகப்பெரிய மருத்துவர் அடிக்கடி வருகிறார் என்று சொன்னாலே, நோய் முற்றிப் போய்விட்டது என்று அர்த்தம்.”
பா.ஜ.க. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது!
எனவே, பா.ஜ.க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரையில், அது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது.
ஊடகத்தினுடைய ஒத்துழைப்பினால், 370 இடங்களில் வெற்றி பெறுவோம், 378 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள்; இன்னும் அவர்களுடைய கூட்டணியே அமையாதபொழுது இப்படி சொல்கிறார்கள்.
378 இடங்களில் இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சொல்கிறார்களே, பிறகு எதற்காக மற்ற கட்சிகளை கூட்டணிக்காக அழைக்கிறார்கள். கதவைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று வேண்டுகோள் விடுக்கவேண்டிய அவசியமில்லையே!
”புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மேல் வந்து விழுங்கள்” என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு; அதுபோன்றதுதான் இவர்களின் நிலை.
1000 ரூபாய் விலை ஏற்றி, 100 ரூபாய் விலை குறைப்புதான் மோடியின் சாதனை!
செய்தியாளர்: தமிழ்நாட்டிற்கு மோடி வரும் பொழுது, மக்களின் சொத்துக்களை மக்களுக்கே திரும்பக் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: எப்படித் திருப்பிக் கொடுத்திருக் கிறார் என்று சொன்னால், சமையல் எரிவாயு உருளை யின் விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏற்றிவிட்டு, இப்பொழுது 100 ரூபாய் விலை குறைத்திருக்கிறார் பாருங்கள்; அதைத்தான் திருப்பிக் கொடுத்திருக்கிறார். ஆனால், கொடுக்கவேண்டிய வெள்ள நிவாரண நிதியைக் கொடுத்தாரா என்றால், அதற்கு அவர் தயாராக இல்லை. மணிப்பூருக்குப் போவதற்கு அவர் தயாராக இல்லை. ஆனால், யானைமீது சவாரி செய்வதற்கு அவர் தயாராக இருக்கிறார்.
சருகுகளையும், கீழே விழுந்த இலைகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
செய்தியாளர்: அய்யா நீங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று சொல் கிறீர்கள். தி.மு.க. ஆட்சியில், ஆசிரியை ஒருவர் கருத்துச் சொன்னதற்காக, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதே?
தமிழர் தலைவர்: ஒழுங்கீனம் எங்கிருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். ஓர் அமைப்பில் பணியாற்றுபவர்கள், அந்த அமைப்பின்கீழ் பணியாற்ற வேண்டும்; அந்த அமைப்பிற்கு மாறாக இருந்தால், நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தினுடைய கடமை. இதைப் பெரிதாக ஆக்குகிறார்கள் என்றால், அவர்களுக்குக் குற்றம் சொல்வதற்கு எந்தச் சரக்கும் இல்லை. ஆகவேதான், ஏதாவது கிடைக்காதா என்று, சருகுகளையும், கீழே விழுந்த இலைகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.
No comments:
Post a Comment