ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி சூளுரை
ஈரோடு, மார்ச் 7- முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்கம், தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் பொதுக் கூட்டம் ஈரோடு நகரில் 4.3.2024 அன்று நடைபெற்றது. இதில் தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. அவர்கள் சிறப்புரையாற்றுகையில், ‘இந்தியாவை மீட்க பெரியார் மண்ணிலே உறுதி யேற்போம்’ என சூளுரைத்தார்.
இக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:
“மார்ச் 2 ஆம் தேதி தஞ்சையிலே இதேபோன்ற பொதுக்கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அங்கே, ‘என் தந்தை வீட்டுக்கு வந்தது போன்ற உணர்வு இருந்தது’ என்று கூறினேன். தஞ்சாவூர் எனது தந்தை வீடு. இந்த ஈரோடோ தமிழ்நாட்டுக்கெல்லாம் தந்தை வீடு. தந்தை பெரியாரின் மண்ணுக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சிம்ம சொப்பனமாக
திகழும் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரின் பெயரை சொன்னாலே சிலருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ஏனென்றால் இன்று யாரெல்லாம் அரசியலை மதத்தோடு கொண்டுவந்து இணைத்து, அதன் மூலம் மக்களை ஏமாற்றி குளிர் காயலாம் என்று நினைக்கிறார்களோ அவர்களுக் கெல்லாம் . இன்றுவரை சிம்மசொப்பனமாக இருப்பது தந்தை பெரியார்தான்.
அதனால்தான் பெரியார் சிலைகளை பார்த்தாலே காவியடிப்பது அவமதிப்பது போன்றவற்றை செய் கிறார்கள். இதெல்லாம் எதை தெளிவாக சொல்கிறது என்றால், நாங்கள் எப்படி பெரியாரை மறக்கவில்லையோ, அதேபோல நீங்களும் பெரியாரை மறக்கவில்லை.
அவருடைய கருத்தியல் என்பது உங்களை அச்சுறுத்தக் கூடிய பயமுறுத்தக் கூடிய ஒன்றாகத்தான் இன்றுவரை இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆன பின்னாலும் உங்களை ஓட ஓட விரட்டுவது பெரியாரின் கருத்து.
அந்த பெரியாரின் கருத்துகளை மய்யமாக வைத்து திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இந்த சமூகத்தில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ ஒடுக்கப்பட்டார்களோ அவர்களுக்கெல்லாம் தலை நிமிர்ந்து வாழக் கூடிய சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர் தலைவர் கலைஞர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் கலைஞர்!
தலைவர் கலைஞர் ஆட்சியிலேதான் பெண்களுக்கு சொத்திலே சமபங்கு உண்டு என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அதுவரைக்கும் பெண்கள் சொத்தில் பங்கு கேட்டால், ‘அதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச் சுல்ல, போயிட்டே இரு’ என்பார்கள். ஆனால் கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு சட்டம் கொண்டுவந்த பிறகு சொத்தில் பங்கு கேட்டால் கொடுத்துதான் ஆக வேண்டும். பெண் பிள்ளைக்கு உரிமை இல்லை என்று சொல்லும் சகோதரன் இருக்க முடியாது.
அதேபோல பெண்களின் படிப்பில் மிக முக்கிய மாற்றங்களை செய்தது தலைவர் கலைஞர். பெண் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார்கள் என்பதால், ‘கல்யாணச் செலவுக்குதானே படிப்பை நிறுத்துகிறாய்? பெண்ணை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தால் நானே கல்யாண செலவை ஏற்கிறேன்’ என்று அறிவித்தார் கலைஞர். அந்த பெண் பத்தாவது வரை படித்துவிட்டால், எப்படியாவது மேற்கொண்டு பிளஸ்டூ படித்து கல்லூரிக்கு சென்றுவிடுவார் என்று கலைஞர் நம்பினார்.
அதேபோல பெண்களுக்கு கேஸ் ஸ்டவ் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதியளித்தார் கலைஞர். வாக்குறுதியளிக்கும்போது எத்தனை பர்னர் கொண்ட ஸ்ட்வ் என்று சொல்லவில்லை. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு… அதிகாரிகள், ‘நீங்க ரெண்டு பர்னர் கொண்ட ஸ்டவ் கொடுக்க ஆசைப்படுறீங்க. ஆனால் ஒரு பர்னர் கொண்ட ஸ்டவ் கொடுத்தா செலவு பாதியாக குறையும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு கலைஞர், ’நான் செலவை மிச்சம் பண்றத் துக்காக ஆட்சியில இல்லை. அந்த பெண்கள் அடுப்படியிலயே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இரண்டு பர்னர் கொண்ட ஸ்டவ் கொடுத் தால் ஒன்றில் சாதம், இன்னொன்றில் குழம்பு வைத்து விட்டு சீக்கிரம் சமையலை முடித்துவிட்டு வெளியே வந்து உலகம் என்னவென்று தெரிந்துகொள்வார்கள்’ என்று பெண்களுக்காக அன்றே சிந்தித்தவர் தலைவர் கலைஞர்.
இன்று தலைவர் கலைஞர் ஆட்சியின் நீட்சியாக அன்று பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கு உதவிய கலைஞரின் தொடர்ச்சியாக, அந்த பெண்கள் கல் லூரிக்கு சென்று படிக்கும்போது மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறார் அண்ணன் முதலமைச்சர் தளபதி. கல்லூரிக்கு போக கூடிய பெண்ணுக்கு பேப்பர், பேனா, உள்ளிட்ட செலவுக்கு காசு கேட்டால், ‘இதுக்குதான் உன்னை காலேஜுக்கு அனுப்பமாட்டேன்’னு சொன்னேன் என் பார்கள். அந்த மனவலி கூட மாணவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு ஓர் அண்ண னாக தந்தையாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் தந்திருக்கிறார்.
கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் விவசாயக் கடன்களை ரத்து செய்தார். நமது தளபதி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு கட்டணமில்லாமல் பேருந்து பயணத்தைத் தந்தார். அதன் பெயர் ஏன் விடியல் பயணம் என்றால்… இருட்டுச் சிறைக்குள் இருந்து பெண்களுக்கு விடுதலை அளித்து விடியல் வெளிச்சத்தைக் காட்டுகிற பயணமாக இருக்கிறது என்பதால்தான். இன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியே போக, அம்மா வீட்டுக்குப் போக, நண்பர் களைப் பார்க்க, ஒரு வகுப்புக்குப் போக யாரிடமும் பேருந்துக்கு காசு கேட்டு நிற்க வேண்டியதில்லை. இப்போது ஆண்கள்தான் பெண்களிடம் கேட்டு நிற்கிறார்கள்.
இதேபோல வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டால், ‘சும்மாதான் இருக்கிறார்கள்’ என்று சாதாரணமாக சொல்லுவார்கள். அதிகாலையில் எழுந்து, காபி, டிபன், மதிய சாப்பாடு, துணி துவைத்து காயப் போட்டு மடித்து வைக்க வேண்டும், பாத்திரம் தேய்த்து, பிள்ளைகளை பார்க்க வேண்டும், இரவு சமையல், சமையலறையை சுத்தம் செய்து பின் அனைவரும் தூங்கிய பிறகுதான் படுக்க வேண்டும்.
இந்த வேலையில் ஞாயிறு விடு முறையெல்லாம் கிடையாது. தீபாவளி, பொங்கல் என்றால் டபுள் வேலை. இப்படி உழைத்துக் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு ஒரு மரியாதையாக அங்கீகாரமாக மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறார் முதலமைச்சர் தளபதி. கலைஞர் உரிமைத் தொகையாக அதை அளிக்கிறார். ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு அளித்து வருகிறார்.
அருகே இறைவணக்கம் செய்கிறார்கள். அதற்காக பேச்சை நிறுத்துகிறோம். பின் தொடங்குகிறோம். இதற்காக கூட்டத்தில் கைதட்டுகிறீர்கள். இதுதான் இந்தியா. இப்படித்தான் மத நல்லிணக்கம் கொண்ட, மதச்சார்பற்ற இந்தியா இருக்கிறது. ஆனால் ஒன்றியத்தில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சியில் மதத்தைப் பயன்படுத்தி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து கொண்டி ருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் வெறுப்பு, காழ்ப் புணர்வை பரவச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
பிரித்தாளும் சூழ்ச்சியை செய்யும் ஒன்றிய அரசு!
அவர்கள் அரசியலுக்காக மணிப்பூரில் பற்ற வைத்த நெருப்பு இன்று வரை அணையவில்லை. நாங்கள் மணிப்பூர் சென்று அந்த மக்களை சந்தித்தபோது யாரும் வீட்டில் இருக்க முடியாத நிலைமை. இரண்டு இனத்த வரும் பாதுகாப்பாக இல்லாததை உணரக் கூடிய நிலை. ஆயிரம் பேர் முன் இரு பெண்கள் அவமானப் படுத்தப்பட்டு கூனிக்குறுகி நிற்கிறார்கள். அந்த பெண் போல ஏராளமான பெண்கள் அங்கே பாதிக்கப்பட் டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி இன்றுவரை மணிப்பூர் பக்கம் செல்லவில்லை. அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லை, அங்கே பிரச்சினையை பேசித் தீர்க்கவோ நேரமில்லை.
ஆனால் பிரதமருக்கு இப்போதெல்லாம் தமிழ் நாட்டுக்கு வருவதற்குதான் நேரம் இருக்கிறது. நேற்று வந்தார், முந்தநாள் வந்தார், போன வாரம் வந்தார், நாளை வருவார் என்கிறார்கள். தேர்தல் வரும் வரை தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டே இருப்பார்.
ஆனால் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மோடி தமிழ்நாட்டிலேயே வந்து குடியேறினால் கூட அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
சாமானிய மக்களுக்காக பா.ஜ.க. செய்தது என்ன?
நம்மைப் பார்த்து இந்து விரோதி என்கிறார்கள்., மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட நம்பிக்கை, தனிப்பட்ட் விஷயம். அதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசாங்கம் பொதுவாக மக்களை பாதுகாக்க வேண்டும்.
இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி பெரும் பான்மை மக்கள் இந்துக்கள். யாரும் அதை மறுக்க முடியாது. அவர்கள் இந்த பெரும்பான்மை மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? ஒன்றும் இல்லை. இந்து மக்களில் பெரும்பான்மையாக இருப்பது ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதாரண சாமானிய மக்கள். இவர்களின் இட ஒதுக்கீட்டுக்காக பா.ஜ.க. என்ன செய்திருக்கிறது?
நம் வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவம் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று தலைவர் கலைஞர் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். அந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் நம் வீட்டுப் பிள்ளைகள் படித்துவிடக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் பி.ஏ. , பி.காம்,என்று எதைப் படிக்க வேண்டுமென்றாலும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். சாதாரண மக்கள் கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை இந்துக்கள் என்றால் மேல் ஜாதி என்று சொல்லப்படக் கூடிய சிலரை மட்டுமே கருதுகிறார்கள். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு என்ன செய்தார்கள்?
இன்று விவசாயிகள் போராடுகிறார்களே அவர்கள் இந்துக்கள் இல்லையா? தொழிலாளர்கள் போராடிக் கொண் டிருக்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் இல்லையா?
பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துவிட்டோம் என்றார்கள். ஆனால் அந்த மசோதா எப்போது நடைமுறைக்கும் வரும் என்று யாருக்கும் தெரியாது. இன்று உள்ளாட்சி அமைப்புகளில் அய்ம்பது சதவிகிதம் கொண்டுவந்திருக்கிறோம்.,
பெண்களை ஏமாற்றி விடலாம் என கருதும் பா.ஜ.க. அரசு!
ஆனால் அவர்கள் எப்படி தெரியுமா இட ஒதுக்கீடு அளிக்கிறார்கள்? முதலில் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்துவார்களாம்… அதன் பின் தொகுதி மறு வரையறை செய்வார்களாம்… அதன் பின்னர்தான் மகளிருக்கு இட ஒதுக்கீடு வரும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதாரண விஷயமா? அதன் பின் தொகுதி மறு வரையறை கொண்டுவரும்போது மாநிலங்கள் எதிர்க்கும், வழக்குத் தொடுக்கும். இதற்கெல்லாம் பிறகுதான் மகளிர் இட ஒதுக்கீடு வரும். அதனால் முடியவே முடியாது என்று தெரிந்த ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு மகளிர்க்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டோம் என்று பெண்களை ஏமாற்றிவிடலாம் என்று கருதுகிறது பா.ஜ.க..
தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. பா.ஜ.க. இரண்டும் ஒட்டிக் கொள்ளும்!
2014 இல் மோடி இந்தப் பக்கம் வந்தபோது சொன் னார். இங்கே இருக்கக் கூடிய ஜவுளித் தொழிலை தரமுயர்த்துவதற்கான மிகப்பெரிய பூங்காவை அமைத் துத் தருவேன் என்று சொன்னார். 2024 வந்துவிட்டது. பூங்காவும் வரவில்லை. எதுவும் வராது.
நம்மைப் பார்த்து ஸ்டிக்கர் ஒட்டுகிறோம் என்று சொல்கிறார்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு பிரதமர் கால் வாசி பணம் கொடுக்கிறார், முக்கால் வாசி பணத்தை நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் கொடுக்கிறார். ஆனால் இதில் ஸ்டிக்கர் ஒட்டுவது யார்? ஏற்கெனவே எல்லாவற்றுக்கும் ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுக, இப்போது ஸ்டிக்கர் ஒட்டும் பா.ஜ.க…. இந்த இரண்டும் தேர்தலுக்காக பிரிந்து நிற்கிறது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஒட்டிக் கொள்ளும். அதனால் இவர்களை நம்பாதீர்கள்.
இந்த ஈரோட்டில் பெருந்துறையில் 100 பெட் கொண்ட உயர் மருத்துவமனை தரமுயர்த்தப்படும் என்று அறிவித்து 40 கோடி ரூபாய் நிதி நிலை அறிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவுளிப் பூங்காவை அவர்கள் தர மாட்டார்கள் என்று அறிந்து… 10 ஜவுளிப் பூங்காக் களுக்காக 20 கோடி ஒதுக்கியிருக்கிறார் நமது முதலமைச்சர்.
பழமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கொடுமுடியில் உள்ள மிகப் பழைய பயணியர் விடுதியை செப்பனிட்டு, வரக் கூடிய மக்களை ஈர்க்கக் கூடிய அளவுக்கு மாற்ற 50 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படி மக்களுக்கான அரசாக செயல்பட்டுக் கொண் டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
பெண்களுக்கு மட்டுமல்ல, இந்த நிதி நிலை அறிக் கையிலே இளைஞர்கள் கல்லூரிக்கு சென்று படிக்கும் போது தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மதியம் வரை பசியோடு இருக்கக் கூடாது என்று காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ப தற்காக பாடுபட்டு வருகிறோம்.
ஆனால் அங்கே இருக்கும் ஒன்றிய அரசு என்ன செய்திருக்கிறது? ஆயிரம் ரூபாய், அய்நூறு ரூபாய் செல்லாது என்றார்கள். இத்தோடு கருப்புப் பணம் ஒழிந்துவிடும், நாடு இனி வேறு மாதிரி ஆகிவிடும் என்பார்கள். வங்கி வாசலில் காத்திருந்து நாடு முழுதும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். அந்த உயிர்த் தியாகம் எதற்காக? இன்றுவரை அதை நியாயப்படுத்த முடியவில்லை. ஆயிரம், அய்நூறுக்கு பதில் இரண்டாயிரம் ரூபாயைக் கொண்டுவந்தார்கள். இப்போது இரண்டாயிரம் ரூபாயும் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். இதன் பெயர்தான் துக்ளக் தர்பார்.
பணமதிப்பிழப்பு வந்த பின் சிறு குறு தொழில்கள் ஏராளமானவை முடங்கியது. அவர்களை கைதூக்கிவிட எதுவும் செய்யாமல் ஜிஎஸ்டி கொண்டுவந்து தெரிந்த பாக்கி., தெரியாத பாக்கி என திணித்து… இன்று சிறு குறு தொழில்களை எல்லாம் மூட வைத்துக் கொண்டிருக் கிறது. இந்த நாட்டின் முதுகெலும்பான சிறு குறு தொழில்களை முடக்கி, அதிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வேலை இழக்கச் செய்திருப்பதுதான் மோடியின் ஆட்சி.
ஆனால் நாட்டின் தனி நபர் வருமானம் அதிகரித் திருக்கிறது என்கிறார்கள். அதானி, அம்பானியின் வருமானம்தான் பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்திருக்கிறது.
இந்த ஊரில் இருக்கும் ஒருவர், பா.ஜ.க.வுக்கு ஊழலே தெரியாது,. திராவிடக் கட்சிகள்தான் ஊழல் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உலகத் திலேயே மிகப்பெரிய ஊழல் எலக்டரல் பாண்ட் தான். அதை சட்டமாக்கி யார் எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்தியா வில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் வந்த நிதியைவிட மூன்று மடங்கு அதிகமாக நிதி வசூலித் துள்ளது பா.ஜ.க.. உச்ச நீதிமன்றம் இந்த எலக்ட்ரல் பாண்டுகளை செல்லாது என்று தீர்ப்பளித்து. யார் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இப்போது அந்த விவரங்களை வெளியிட அவகாசம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் அபிடவிட் போட்டிருக்கிறார்கள். மடியிலே கனம் இருப்பதால்தானே இந்த பயம். இதற்கு பெயர் ஊழல் இல்லையா? ஊழலை சட்டமாக்கினால் அது ஊழல் இல்லையா?
இவர்கள் எந்த மக்களைப் பற்றியும் அக்கறை இல் லாதவர்கள். விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது ஒர் அமைச்சரின் மகன் வண்டியை விட்டு கொலை செய்கிறார். பத்திரிகையாளர்களை, எதிர்க் கருத்து உடையவர்களை எல்லாம் கைது செய்து நாட் டையே சர்வாதிகாரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்று தளபதிசொன்னதுபோல மறுபடியும் நாட்டின் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, ஒருவரை ஒருவர் நேசித்து வாழ, அடுத்த தலைமுறையினர் அனைத்து வாய்ப்பு களையும் பெறுவதற்கு… இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமை நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
நம் பிள்ளைகளுக்கு நாம் தரப் போகிற பரிசு பாது காப்புதான். அந்த உணர்வோடு இந்தத் தேர்தலில் வாக் களியுங்கள். மக்களை பிளவுபடுத்து பவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்பதை சொல்லித் தாருங்கள்.
இவ்வாறு கனிமொழி கருணாநிதி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி, உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில மகளிரணி தொண்டரணி செயலாளர்நாமக்கல் ராணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment