இன்றைக்கு ‘‘தி.மு.க.வை நாங்கள் அழித்துவிடுவோம்; ஒழித்துவிடுவோம்; திராவிட இயக்கமே இனிமேல் இருக்காது’’ என்று சொல்கிறார்கள் – இப்படி சொன்னவர்கள்தான், முன்பு காணாமல் போயிருக்கிறார்கள்!
‘‘திராவிட இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தையும்
மூட்டைப் பூச்சிகளை அழிப்பதைப்போல், அழிப்பேன்” என்று சொன்ன இராஜகோபாலாச்சாரியார் என்ன ஆனார்?
அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!
உடையார்பாளையம், மார்ச் 14 இன்றைக்கு ‘‘தி.மு.க.வை நாங்கள் அழித்துவிடுவோம்; ஒழித்துவிடுவோம்; திரா விட இயக்கமே இனிமேல் இருக்காது’’ என்று சொல் கிறார்கள். இப்படி சொன்னவர்கள்தான், காணாமல் போயிருக்கிறார்கள். இன்றைக்குச் சொன்னவர் மோடி. இராஜகோபாலாச்சாரியார் 1952 ஆம் ஆண்டு, ‘‘திராவிட இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மூட்டைப் பூச்சிகளை அழிப்பதைப்போல், அழிப்பேன்’’ என்று சொன்னார். அப்படி சொன்ன இராஜகோபாலாச்சாரியார் என்ன ஆனார்? இன்றைக்கு இராஜகோபாலாச்சாரியார் கட்சி இருக்கிறதா? அப்படி இருந்த ஒரு கட்சிக்கு என்ன பெயர் என்று உங்களில் யாருக்காவது நினைவில் இருக்கிறதா? ‘‘சுதந்திரா’’ கட்சி என்பதுதான் அந்தக் கட்சிக்குப் பெயர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உடையார்பாளையத்தில் முப்பெரும் விழா!
கடந்த 10-3-2024 அன்று மாலை அரியலூர் மாவட் டம் உடையார்பாளையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில், படங்களைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அன்னை மணியம்மையார்
வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளம்!
அவர் ஒருவருக்கும் பதில் சொன்னதே கிடையாது. யார் யாரெல்லாம் அன்றைக்கு பழி சுமத்தினார்களோ, பிறகு அவர்களெல்லாம் அவரை – அன்னை மணியம் மையாரைப் பாராட்டியதை – அவர் காது குளிரக் கேட்டாரே, அது ஒன்றிலேயே அவர் வெற்றி பெற்றார் என்று சொல்லலாம்.
அதுபோலத்தான் தமிழ்மறவர் அவர்களும்; அது போலத்தான் கொள்கைத் தியாகி உயிர்த் தியாகம் செய்த நம்முடைய ஆசிரியர் உடையார்பாளையம் வேலாயுதம் அவர்களாவார்கள்.
பொதுவாழ்க்கைக்கு வந்தால்
என்ன கிடைக்கும்?
இவற்றையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லவேண்டும். பொதுவாழ்க்கைக்கு வரும்பொழுது, அதனால் என்ன கிடைக்கும்? என்று வரக்கூடாது.
பொதுவாழ்க்கைக்குக் வந்தால் – அறிவு கிடைக்கும் – மானம் கிடைக்கும் – கொள்கை கிடைக்கும்.
பதவி என்பது அதைப் பெறுவதற்கு ஒரு வழி. இது தான் திராவிட இயக்கத்தினுடைய தனித்தன்மையாகும். அன்றைய நீதிக்கட்சி காலத்திலிருந்து இன்றுவரை அதுதான் இலக்கணமாகும்.
இவர்கள் எல்லாம் பதவியை நினைத்துக்கொண்டு இந்த இயக்கத்திற்கு வரவில்லை. அந்தக் காலத்தில் நம் முடைய இயக்கம் என்பது தேர்தலில் நிற்காத இயக்க மாகும்.
இன்னுங்கேட்டால், தேர்தலில் நின்ற ஜஸ்டிஸ் கட்சியை மாற்றி, அண்ணா அவர்கள் பெயராலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதற்குப் பிறகு வரலாற்றில் மிகப்பெரிய அறைகூவல்கள் வந்த நேரத்தில், அந்த அறைகூவலை ஏற்றார். அரசியல் அதிகாரம் மூலமாக சமுதாயப் பணி களை நிறைவேற்றம் செய்ய முடியும் என்பதற்காகத்தான் பின்னாளில் அரசியலுக்கு வந்தார்கள்.
இந்த இயக்கத்தினுடைய வரலாற்றை ஒருவர் ஆய்வு செய்தால், இதுபோன்ற ஒரு சிறப்பு – பல அம்சங்களைக் கொண்ட இயக்கம் வேறு எந்த இயக்கத்திலும் கிடை யாது.
திராவிடத்தால்
வீழ்ந்தோமா? எழுந்தோமா?
இந்த இயக்கம் என்ன செய்தது? திராவிடத்தால் வீழ்ந்தோமா? எழுந்தோமா? திராவிடத்தால் பயனடைந் தோமா? இல்லையா? என்பதற்கு இந்தக் குடும்பங்கள் எடுத்துக்காட்டானது. அதனை இந்தக் கொள்கை உறவுகளைப் பார்த்துச் சொல்லவேண்டும்.
இந்தக் குடும்பத்தில் முழுக்க முழுக்க அந்த வாய்ப் பைப் பெற்றிருக்கின்றார்கள் என்று சொன்னால் நண் பர்களே, அய்யா உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் அவர்களுடைய காலத்தில் அவர் ஆற்றிய தொண்டு என்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த இயக்கம் மக்களுக்கு என்ன செய்தது என்பதைப்பற்றியும் இங்கே விளக்கமாகச் சொன்னார்கள்.
எடுத்துக்காட்டான குடும்பம்!
அவருடைய வாழ்விணையர், அதற்குப் பிறகு அவர் வழிவந்தவர்கள் எல்லாம் இயக்கப் பொறுப்பிற்கு வந் திருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட சிறப்பு என்ன வென்றால், பொறுப்புகள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், சூத்திரனுக்குப் படிப்புக் கொடுக்கக்கூடாது; ஒடுக்கப் பட்டவன் மேலே வர முடியாது- நாமெல்லாம் படிக்கத் தகுதியில்லாதவர்கள், அறிவில்லாதவர்கள், கல்வி வாய்ப்பு இல்லாதவர்கள் என்றெல்லாம் காலங்காலமாக நம்மீது பழி சுமத்திக் கொண்டிருந்தார்களே, அதை அழித்துக்காட்டி, எங்களாலும் வளர முடியும் என்று காட்டுவதற்கு – வளர்ந்திருக்கின்ற குடும்ப விளக்குகள் இங்கே இருக்கின்றனர்; நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு இந்தக் குடும்பங்கள் வந்திருக்கின்றன.
இவற்றையெல்லாம் இன்றைய இளைய சமூகத்தினர் தெரிந்துகொள்ளவேண்டும்.
திராவிடத்தால் வாழ்ந்தார்களா? வீழ்ந்தார்களா? வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற் காகத்தான் இதுபோன்ற விழாக்கள்.
அவர்களை உற்சாகப்படுத்த – நாங்களும் உற்சாகப் படுகின்றோம்; – நம் குடும்பம் வேறு; அவர்கள் குடும் பம் வேறு என்ற பிரிவினை கிடையாது நம்மிடத்தில். நம் குடும்பம் – நம் கொள்கை உறவு – கொள்கை உறவுக்காக அவர்கள் எந்தத் தியாகத்தையும் செய்து வழிகாட்டியிருக்கிறார்கள். வெறும் வாய்ப்பேச்சோடு போனதில்லை என்பதுதான் மிகவும் முக்கிமானதாகும்.
இங்கே உரையாற்றிய நம் தோழர்கள் அத்துணை பேரும் மிக அழகாகச் சொன்னார்கள்.
உடையார்பாளையம் வேலாயுதம் அவர்களைக் கொன்றுவிட்டால், இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைத்தார்கள்!
1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட அந்த மாநாட்டில், ஆசிரியர் வேலாயுதம் அவர்கள் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வந்தது. அந்த ஆண்டுதான் அந்தக் கொலை யும் நடந்தது. ஆனால், அதற்குப் பிறகு இந்த இயக்கம் அழிந்துவிட்டதா?
அவரைக் கொன்றுவிட்டால், இந்த இயக்கம் அழிந்து விடும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர் புதைக் கப்படவில்லை; மாறாக விதைக்கப்பட்டார் என்பதற்கு அடையாளம்தான் – அவருடைய காலத்தில், அவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்- எத்தனையோ பேருக்குக் கல்விக் கண்ணைத் திறந்தவர். இன்றைக்கு அவருடைய பிள்ளைகள் நன்றாகப் படித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக் கிறது என்றால், எனக்கு ஜெகதாம்பாள் அம்மையாரைத் தெரியும்; அதேபோன்று இராமச்சந்திரன் அவர்களும், அடிக்கடி பெரியார் திடலுக்கு வந்து என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். பல செய்திகளை உரிமையோடு சொல் வார்; அண்ணாவிடம் சொல்லுங்கள்; கலைஞரிடத்தில் சொல்லுங்கள் என்று வேக வேகமாகப் பேசுவார்.
‘‘உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் அவர் களின் குடும்பத்தினர் யார் யார் இருக்கிறார்களோ, அவர் களையெல்லாம் அழையுங்கள்” என்று தோழர்களிடத்தில் சொன்னேன். அவர்கள் எல்லாம் வந்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றேன்.
மதி என்பவர் அமெரிக்காவிலிருந்து பேசினார்!
நேற்றிரவு நான் ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, ரயில் நிலையம் செல்லும்போது, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தொலைப் பேசியில் தொடர்புகொண்டு, ‘‘அமெரிக்காவிலிருந்து மதி என்பவர் பேசுவார்; அவரிடம் நீங்கள் பேசுங்கள்” என்று சொன்னார்.
மதி என்பவர் யார்? எதற்காக என்னிடம் பேச விருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.
பிறகு, கொஞ்சநேரம் கழித்து அவர் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘‘நான் மதி (மதியழகன்) பேசுகிறேன் அய்யா! இராமச்சந்திரன் அவர்களுடைய மகன் நான்” என்றார்.
‘‘அப்படிங்களா, ரொம்ப மகிழ்ச்சிங்க” என்று சொன்னேன். ‘‘நாளை முப்பெரும் விழா உடையார்பாளை யத்தில் நடைபெறுகிறது. நீங்கள் இணைய தளத்தில் பார்க்கலாம்” என்று சொன்னேன்.
இன்றைக்கு அந்தக் குடும்பத்தில் எல்லோரும் படித் திருக்கிறார்கள். அய்யா தமிழ்மறவர் பொன்னம்பலனார் குடும்பத்தினரும் சரி, உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் அவர்களின் குடும்பத்தினரும் சரி – கல்லூரிப் பேராசிரியர்களாகவும், பல்கலைக் கழகப் பேராசிரியர்களாகவும் இருக்கிறார்களே – அது யாரால்?
திராவிட இயக்கத்தால், தந்தை பெரியாரால்தான்!
‘‘திராவிடம் வெல்லும் – வரலாறு அதைச் சொல்லும்” என்பதற்கான அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி!
1947 ஆம் ஆண்டு அந்த நிகழ்வு நடந்தது – கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்குமேலாகி இருக்கிறது. அதை மோடியினுடைய மொழியில் சொல்லவேண்டு மானால், ‘‘அமிர்தகாலம்” – ‘அமிர்தம்’ கதையிலேயே ஒரு பித்தலாட்டம் இருக்கிறது.
புராணக் கதைப்படி, பாம்பின் தலையை ஒரு பக்கமும், வாலை மற்றொரு பக்கமும் பிடித்து அமிர்தம் எடுப்பதற்காக கடைந்தார்களாம். பாம்பின் தலைப்பக்கம் அசுரர்கள் நின்றார்களாம்; வால் பக்கம் தேவர்கள் நின்றார்களாம். இவாள் இந்தப் பக்கம் – அவாள் அந்தப் பக்கம்.
தலைப்பக்கம் இருந்தவர்கள் அதிக உழைப்பைக் கொடுத்தார்களாம். அப்பொழுது தலைப்பக்கம் நஞ்சாக வந்தது; பிறகுதான் அமிர்தம் வந்தது என்று கதையில் எழுதியிருக்கிறார்கள்.
50 சதவிகித வியாக்கியானம்
அந்தக் காலத்திலேயே ஆரம்பம்!
வால் பக்கம் நின்றவர்கள் (பார்ப்பனர்கள்), அமிர்தம் முழுவதையும் நாங்களே எடுத்துக்கொள்கிறோம் என்று சொன்னார் களாம்.
தலைப்பக்கம் நின்றவர்கள், பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்களாம். 50 சதவிகித வியாக்கியானம் அந்தக் காலத்திலேயே ஆரம்பம்!
அந்த 50 சதவிகிதமாவது கிடைத்ததா என்றால், ‘மோகினி’ அவதாரம் வந்ததாம். அந்தக் காலத்திலிருந்து, இந்தக் காலம் வரையில் மோகினி அவதாரம்தான்.
நேரிடையாக வீழ்த்த முடியாமல், சூழ்ச்சியால் வீழ்த் தினார்கள் என்பதுதான் அந்தக் கதை.
இன்றைய ‘அமிர்தகாலம்’ என்பது தலைப்பக்கம் நின்று உயிரை விட்டுப் பெற்ற 50 சதவிகிதத்தையும் பறிப்பதுதான், புரிகிறதா!
ஆனால், அவர்களின் சூழ்ச்சியைப் புரிந்தவர்கள் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
‘‘திராவிட இயக்கமே இனிமேல் இருக்காது” என்பவர்கள்தான் காணாமல் போயிருக்கிறார்கள்!
அன்றைக்கு ஒரு வேலாயுதனாரை கொலை செய்து விட்டு, தூக்கில் அவர் தொங்கிவிட்டார் என்ற ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பினார்கள். அதுபோல, இன்றைக்கு ‘‘தி.மு.க.வை நாங்கள் அழித்துவிடுவோம்; ஒழித்துவிடுவோம்; திராவிட இயக்கமே இனிமேல் இருக்காது” என்று சொல்கிறார்கள்.
இப்படி சொன்னவர்கள்தான், முன்பு காணாமல் போயிருக்கிறார்கள்.
இன்றைக்குச் சொன்னவர் மோடி.
ஆனால், அன்று இராஜகோபாலாச்சாரியார் சொன் னார். அவருக்கு ”உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் மூளை” என்று சொல்வார்கள்.
(மூளை என்பது ஓரிடத்தில்தான் இருக்கவேண்டும்; உடல் முழுவதும் இருந்தால், அதற்கு வேறு பெயர்).
1952 ஆம் ஆண்டு!
அப்படிப்பட்ட இராஜகோபாலாச்சாரியார் அன்றைக் குச் சொன்னார், ‘‘திராவிட இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மூட்டைப் பூச்சிகளை அழிப்பதைப் போல், அழிப்பேன்” என்று 1952 ஆம் ஆண்டு சொன்னார்.
அப்படி சொன்ன இராஜகோபாலாச்சாரியார் என்ன ஆனார்?
தந்தை பெரியாரின் பக்கத்தில் அண்ணா அவர்கள் நின்றுகொண்டு, ஹிந்தியை எதிர்த்த நேரத்தில் – 1938 இல் தாளமுத்து, நடராசன் போன்றோர் பலியானார்கள். அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு என்ன நடந்தது?
‘‘ஆள்வது நாளா? இராமசாமி நாயக்கரா? நான் ஒரு கை பார்த்துவிடுவேன்” என்றார் இராஜகோபாலாச் சாரியார் அவர்கள்.
‘‘தமிழ் வாழ்க! ஹிந்தி ஒழிக!” என்று சொன்னால், ஜெயிலுக்குத்தான் போகவேண்டும். கருவுற்ற தாய்மார் கள் சிறைச்சாலைக்குச் சென்று குழந்தை பெற்றார்கள். அப்படிப்பட்ட கொடுமை நடந்தது.
பெரியாரின் வாழ்க்கை முடிந்துவிடும் என்று கருதிய இராஜகோபாலாச்சாரியார்,
பிறகு என்ன ஆனார்?
கோடைகாலத்தில், பெல்லாரி சிறையில் இருந்த தந்தை பெரியார் ரத்த வாந்தி எடுத்து, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அன்றைக்கே பெரியாரின் வாழ்க்கை முடிந்துவிடும் என்று கருதிய இராஜகோபாலாச்சாரியார், பிறகு என்ன ஆனார்?
இந்த இயக்கத்தையே அழிப்பேன் என்று சொன்ன இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், பிற்காலத்தில் (1965) அண்ணா அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு, ‘‘பிவீஸீபீவீ ழிமீஸ்மீக்ஷீ; ணிஸீரீறீவீsலீ ணிஸ்மீக்ஷீ” என்று சொன்னார். ‘‘ஹிந் தியை நாங்கள் உள்ளே விடமாட்டோம்” என்றார். இன்றைக்கு இராஜகோபாலாச்சாரியார் கட்சி இருக் கிறதா? அப்படி இருந்த ஒரு கட்சிக்கு என்ன பெயர் என்று உங்களில் யாருக்காவது நினைவில் இருக்கிறதா? ‘‘சுதந்திரா” கட்சி என்பதுதான் அந்தக் கட்சிக்குப் பெயர்.
நாங்கள்தான் இராஜகோபாலாச்சாரியாரை ஒவ் வொரு கூட்டத்திலும் ‘‘இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம், இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்” என்று நினைவூட்டிக் கொண்டிருக்கிறோமே தவிர, வேறு யாரும் அவரை நினைப்பதுகூட இல்லை.
மோடி ஜி, உண்மையிலேயே இராஜாஜி ஆகக்கூடிய அளவிற்கு வருகிறார். ஆனால், இராஜாஜி மிகவும் புத்திசாலி.
(தொடரும்)
No comments:
Post a Comment