மதக் கலவரத்தைத் தூண்ட திட்டமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

மதக் கலவரத்தைத் தூண்ட திட்டமா?

featured image

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேசுவரத்திற்குப் பாதயாத்திரையாக வந்தபோது தன்னை சிலர் தாக்கியதாக பெண் சாமியாரிணி ஷிப்ரா (வயது 38) புகார் அளித்திருந்தார். விசாரணையில் பெண் சாமியாரிணி அளித்தது பொய் புகார் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து பெண் சாமியாரிணி மீது பரமக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் கடந்த மார்ச் 8ஆம் தேதி இரவு மகா சிவராத்திரிக்காக வந்த பெண் சாமியாரிணி ஷிப்ரா பதக், பரமக்குடியில் உள்ள சிவன் கோவில்களில் தரிசனம் செய்துள்ளார்.

பின்னர் இரவில் பரமக்குடியில் தங்கிவிட்டு, சனிக்கிழமை (9.3.2024) காலை 6 மணியளவில் அங்கிருந்து சத்திரக்குடி வழியாக ராமேசுவரம் நோக்கி பெண் சாமியாரிணி ஷிப்ரா பதக் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அவருக்குப் பின்னால் அவருடைய தந்தை மற்றும் சகோதரர் காரில் வந்து கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த வழியாக மற்றொரு காரில் வந்த 6 பேர், திடீரென அவர்களை வழிமறித்து வாக்குவாதம் செய்தார்களாம். மேலும் அந்த நபர்கள் ராமன் குறித்து ஆபாசமாகப் பேசியும், ‘கோ பேக் ராமன்’ என்றும் முழக்கமிட்டார்களாம். பெண் சாமியாரிணியின் கார் கண்ணாடியை உடைத்ததுடன், காரில் கட்டப்பட்டிருந்த ராமன் கொடியை சேதப்படுத்தியதாகவும் அந்தப் பெண் சாமியாரிணி குற்றம்சாட்டினார். மேலும் இந்த சம்பவத்தில் பெண் சாமியாரிணி ஷிப்ரா பதக் தனது கையில் கண்ணாடி சிதறல்கள் பட்டு லேசான காயம் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலே உள்ள விடயங்களை குறிப்பிட்டு ஷிப்ரா பதக், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் 9.3.2024 அன்றே புகார் செய்தார். அதன்பேரில் பரமக்குடி காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெண் சாமியாரிணி ஷிப்ரா பதக், அயோத்தியில் இருந்து ராமேசுவரம் வரை ஆன்மிகப் பயணம் மேற்கொண்டதாகவும், ராமேசுவரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்ய இருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவி சர்ச்சையாக வெடித்தது.இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வந்த பெண் சாமியாரிணி ஷிப்ரா பதக் அளித்த புகார் பொய்யானது என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பெண்

சாமியாரிணி மீது பரமக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்தப் பெண் சாமியாரிணி புகார் அளிக்கும் போது சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஹிந்து அமைப்பினரும் பாஜகவினரும் ஹிந்து விரோத அரசு ஒழிக! என்று முழக்கமிட்டதோடு சாமியாரைத் தாக்கிய ஹிந்து விரோத அமைப்பினரை கைதுசெய்யாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றும் கத்திக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் காணொளிக்காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண் சாமியாரிணியும் அவருடன் வந்தவர்களுமே சாலை போட வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்களை வாகனத்தில் எடுத்து வைத்ததும், பிறகு சில கிலோ மீட்டர் தூரம் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் கார் கண்ணாடிகளை உடைத்ததும், சில கண்ணாடிச் சில்லுகளால் சாமியாரிணி தானே கையில் கீறிக்கொண்டதும் காணொளியில் தெரியவந்தது. இதன் மூலம் பெண் சாமியார் மூலம் பாஜகவினரும், இதர ஹிந்து அமைப்பினரும் திட்டமிட்டு தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயலுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களை உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியே அனுப்பாமல் காவல்துறையினர் மீண்டும் இவர்களை தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பயணம் செய்ய அனுமதித்து உள்ளது எப்படி என்று தெரியவில்லை.

வட இந்தியாவிலோ, பெண் சாமியாரிணி தமிழ்நாட்டில் தாக்கப் பட்டார் என்று போலி செய்திகள் வேகமாக பரவிக்கொண்டும் இருக்கின்றன.
ஹிந்தியில் எப்படி செய்திகளைப் பரப்புகிறார்கள் தெரியுமா?

“ஷிப்ரா பதக் என்ற பெண் சாமியார் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து தமிழ்நாட்டின் ராமேசுவரம் வரை தனது பாதயாத்திரையின் போது ஒரு மோசமான நிகழ்வை எதிர்கொண்டார்.
அயோத்தியில் இருந்து 27 நவம்பர் 2023 அன்று பயணம் தொடங்கியது, வனவாசத்திற்குப் பிறகு பகவான் ராமன், சீதை மற்றும் லக்ஷ்மணன் சென்ற பாதையைக் கண்டுபிடித்து, மார்ச் 4, 2024 அன்று மதுரையை அடைந்தது. அவர் பரமக்குடி வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத 8 நபர்கள் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தி அவரது கைகளில் காயங்களை ஏற்படுத்தி, கார் கண்ணாடிகளை உடைத்து, அவரது குடும்பத்தினரின் ராமன் கொடி தாங்கிய கார் கொடிக் கம்பத்தை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும், இந்த நபர்கள், அங்கே ராமனுக்கு இடமில்லை என்று கூறி, ஊரை விட்டு வெளியேறுமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். சம்பவங்கள் குறித்து உள்ளூர் சிங்காரத்தோப்பு காவல் துறையினருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது, மேலும் ஹிந்து ஆர்வலர்களின் உதவியால் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டின் ஆபத்தான யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த சம்பவத்தால் மாநிலம் இருளில் மூழ்கியுள்ளது.”

இப்படியாக வட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் செய்தியைப் பரப்புகின்றனர். இது திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாகவே தெரிகிறது.
வடநாட்டு ராமன் அரசியலை தமிழ்நாட்டில் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது இங்கு எடுபடாது – (1971இல் என்ன நடந்தது?) என்றாலும் ஏதோ ஒரு திட்டத்தில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். கும்பல் இறங்கியுள்ளது என்பது மட்டும் தெரிகிறது – எச்சரிக்கை!

No comments:

Post a Comment