இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1,42,122 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒன்றிய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3ஆவது தவணை நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.25,495 கோடியும், பீகாருக்கு 14,295 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.11,157 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.10,692 கோடியும், மகாராட்டிராவுக்கு ரூ.8,978 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.8,564 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.6,435 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடியும், கருநாட காவுக்கு ரூ 5,183 கோடியும், குஜராத்துக்கு ரூ.4,943 கோடியும், சட்டீஸ்கருக்கு ரூ.4,842 கோடியும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரூ.4,700 கோடியும், அசாமிற்கு ரூ.4,446 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.2,987 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளன.
மேலும், கேரளாவுக்கு ரூ.2,736 கோடியும், பஞ்சாப்பிற்கு ரூ.2,568 கோடியும், அருணாசல பிரதேசத்திற்கு ரூ.2,497 கோடியும், உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ.1,589 கோடியும், அரியானாவுக்கு ரூ. 1,553 கோடியும், இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,180 கோடியும், மேகாலயாவுக்கு ரூ.1,090 கோடியும், மணிப்பூருக்கு ரூ.1018 கோடியும், திரிபுராவுக்கு ரூ.1,006 கோடியும், நாகலாந்துக்கு ரூ.809 கோடியும், மிசோராமுக்கு ரூ.711 கோடியும், சிக்கிமிற்கு ரூ.551 கோடியும், கோவாவுக்கு ரூ.549 கோடியும் என மொத்தம் ரூ.1,42,122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 12ஆம் தேதி மாநிலங் களுக்கு ரூ.72,961 கோடி வரிப்பகிர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 3ஆவது தவணையாக கூடுதலாக ரூ.1,42,122 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பட்டியலைப் பார்க்கும்பொழுது தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? பிஜேபி ஆளும் மாநிலங் களுக்கு அதிக நிதியும் பிஜேபி ஆளாத மாநிலங்களுக்கு சிந்தியதில் கொஞ்சம் போனால் போகிறது என்ற முறையில் கிள்ளிக் கொடுத்திருக்கிறது ஒன்றிய பிஜேபி அரசு.
ஒன்றிய பிஜேபி அரசின் பாரபட்ச நிலையை எதிர்த்து கருநாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா டில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் டில்லியில் போராட்டம் நடத்தியதுண்டு. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவல், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் முதலியோரும் அதில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்புடை அணிந்து இதே காரணத்துக்காகப் போராடியும் செவிடர் காதில் ஊதிய சங்காக, ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாகத்தான் முடிந்தது, மதவெறி மனம் கொண்டோர் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
தமிழ்நாட்டிற்கு ரூ.5799 கோடி ரூபாயாம். ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கோ ரூ25,495 கோடியாம். ஏணி வைத்தாலும் எட்டாத உயரத் துக்கு தமிழ்நாட்டைவிட அய்ந்து மடங்கு தூக்கிக் கொடுத்திருக்கிறது ஒன்றிய மோடி அரசு.
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பிரதமர் இதற்கு விளக்கம் சொல்லுவாரா? அவர் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு வந்து பேசிச் சென்றால், பிஜேபிக்குக் கிடைக்கும் வாக்குகள் பரிதாப நிலையைத் தான் அடையும் – அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், வளர்ச் சிக்காகவும் விழிப்போடு குரல் கொடுக்கும் தி.மு.க.வின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டுதான் போகும்.
இது கல்லின் மேல் எழுத்து!
No comments:
Post a Comment