தேர்தல் விதிமுறைகள் யாருக்கும் விதி விலக்கல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

தேர்தல் விதிமுறைகள் யாருக்கும் விதி விலக்கல்ல!

featured image

பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் கடந்த 18ஆம் தேதி பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சிறீ சாய்பாபா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சீருடையில் பங்கேற்ற காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் ஆணைய விதிகளை மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்களைப் பங்கேற்க வைத்ததற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது எனப் புகார் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். பள்ளிக் குழந்தைகளை வாகனப் பேரணிக்கு அழைத்து சென்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க தாக்கீது அனுப்பப்பட்டது. மேலும் 24 மணி நேரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளி நிர்வாகம் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கே நேரில் சென்று விசாரணையும் நடத்தினர்.
இந்நிலையில், சின்மயா மெட்ரிக் பள்ளி, வடவள்ளி சின்மயா சி.பி.எஸ்.இ பள்ளி, ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளிகள்மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 பள்ளிகளையும் சேர்ந்த 22 மாணவர்களை அழைத்து வந்து மோடியின் பேரணியில் பங்கேற்க வைத்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து 3 பள்ளிகள் மீதும் சாய்பாபா காலனி காவல்துறை வழக்குப்பதிவு செய் துள்ளது. தேர்தல் அலுவலரின் புகாரின் பேரிலேயே 3 பள்ளிகள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிப் பிள்ளை களுக்கு ராமன் – சீதை வேடம் அணிவிக்கப்பட்டு மோடிக்காக நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்கவும் செய்ததுதான்.
தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் அதற்கென்று விதி முறைகள் உள்ளன. அவை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலேயே மீறப்படுகின்றன என்பது எத்தகைய அவலம்!
மதத்தை மய்யப்படுத்தி தேர்தலில் பிரச்சாரம் கூடாது என்ற விதிமுறை திட்டவட்டமாக இருந்தும், பள்ளிப் பிள்ளைகள் இராமன், சீதை, அனுமான் வேடம் அணிந்து பிரச்சாரத்திற்கு உதவுவது சட்டப்படி குற்றமல்லவா?
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தை சம்பந்தப் படுத்தினர் என்ற காரணத்தின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்றதே செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தது உண்டே!
இந்தத் தீர்ப்பின் பார்வையில் பிஜேபி தரப்பில் நடத்தப்படும் ஒவ்வொரு பிரச்சாரமும் பெரும்பாலும் சட்ட விதிகளுக்கு முரணானதேயாகும்.
பிரதமர் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதும் – தேர்தல் விதிமுறை அத்துமீறல் என்று இன்னொரு பக்கம் புகார் ஓடிக் கொண்டு இருக்கிறது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே! பிரதமரும் இதற்கு விதி விலக்கல்ல! தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப் பாகும். என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்?

No comments:

Post a Comment