வெப்பமாகிக் கொண்டிருக்கும் இந்த பூமியைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்று மனிதகுலம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. புவிக்கோளத்தின் பருவநிலையோ, மனிதர்களைப் பற்றி கவலைப்படாமல் தன்போக்கில் தாறுமாறாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது.
எண்ணெய் சார்ந்த எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடின் அளவை எவ்வாறு குறைப்பது என்பதை உலகத்தலைவர்கள் எல்லோரும் கூடிப் பேசி வரும் காலம் இது. பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.
கலிபோர்னியா-லாஸ்ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சையனோபாக்டீரியத்தின் மரபியல் பண்புகளை மாற்றியமைப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை அய்சோபுயூட்டனால் என்னும் திரவ எரிபொருளாக மாற்ற முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். இந்த அய்சோபுயூட்டனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிவாயுவிற்கு ஒரு மாற்றாக இருக்குமாம். இந்த வேதியியல் வினையை சூரிய ஒளியின் ஆற்றலைக் கொண்டே நிகழ்த்தமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. டிசம்பர் 9 ஆம் தேதியிட்ட Nature Biotechnology இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு இரண்டு நீண்டகால பயன்களைக் கொடுக்கவல்லது. முதலாவதாக, நம்மை அச்சுறுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவை வளிமண்டலத்தில் இருந்து குறைக்கமுடியும். இரண்டாவதாக, சூரிய ஆற்றலை எரிபொருளாக மாற்றமுடியும். இன்றைய வாகனங்களை இயக்க இந்த எரிபொருள் போதுமானது. தாவரங்களில் இருந்தும் ஆல்காக்களில் இருந்தும் எரிபொருளைப் பெறும் தொழில்நுட்பம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அதிகமான படிநிலைகளைக் கடந்த பின்னரே இந்த உயிரி எரிபொருளை பெற இயலும். மேலும் தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ் அழிக்கப்பட்ட பிறகே இந்த உயிரி எரிபொருள் கிடைக்கும். இதன்விளைவாக ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிக்க புதிய ஆய்வு துணை செய்கிறது.
RuBisCO என்னும் என்சைம் காற்றில் உள்ள அனங்கக கார்பனை அங்கக கார்பனாக மாற்றவல்லது. அதாவது உயிரற்ற பொருளில் உள்ள கரிமத்திற்கும் உயிருள்ளவற்றில் உள்ள கரிமத்திற்கும் இணைப்புப்பாலமாக செயல்படுகிறது இந்த என்சைம். ஒளிச்சேர்க்கையின்போது RuBisCO என்சைம் காற்றில் உள்ள கரிமத்தை தாவரங்களுக்கும், அதன்மூலம் மனிதர்கள் உட்பட்ட மற்ற உயிர்ப்பொருட்களுக்கும் மாற்றித் தருகிறது.
ஆய்வின் முதல்படியில் cyanobacterium Synechoccus elongates என்னும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி RuBisCO – என்சைமின் அளவு அதிகரிக்கப்பட்டது. பிற நுண்ணியிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜீன்களின் உதவியால் cyanobacterium-இல் மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். இதன் விளைவாக கார்பன் டை ஆக்சைடும் சூரிய ஒளியும் உறிஞ்சப்பட்டு isobutyraldehyde வாயு உருவானது. இந்த வாயு குறைந்த கொதிநிலையும், அதிகமான வாயு அழுத்தமும் கொண்டது. எனவே இதனை பிரித்தெடுப்பது எளிதாக இருந்தது. IsobutyraldehydeÞ இல்இருந்து அய்சோபியூட்டனால் என்னும் எரிபொருள் பெறப்படுகிறது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகாமையில் இந்த சாதனங்களைப்பொருத்துவதன் மூலம், வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடை உடனுக்குடன் சிறைபிடித்து எரிபொருளாக மாற்ற இயலுமாம். இந்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எரிபொருளின் உற்பத்தித்திறன் இன்னும் மேம்படுத்தப்படவேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். அமெரிக்க அரசின் எரிசக்தி துறையின் நிதி உதவியுடன் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment