பறிமுதல் செய்யப்பட்ட 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் எங்கே?
ஒன்றிய பா.ஜ.க. அரசின்
ரூ.5 லட்சம் கோடி ‘மெகா’ ஊழல்!
போதைப் பொருளுக்கு எதிரான ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என்பதுபற்றி ஒன்றிய அமைச்சர் சொல்வது
என்ன?
68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் சிக்கிம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் கைப்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர்கள் கூறக் கூடிய தகவல்கள் இரண்டையும் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு:
5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவினுடைய மாபெரும் ஊழலின் மர்மத்தை ஆதாரத்துடன் தெரிந்துகொள்ள கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள் இந்தத் தொகுப்பை – ஒரு மாபெரும் ஊழலின் ‘மர்மம்’ உங்களுக்குப் புரிய வரும்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி ‘‘நேஷனல் கான்பரன்ஸ் ஆன் ட்ரக்ஸ் டிராப்பிக்கிங் அண்ட் நேஷனல் செக்யூரிட்டி” என்ற தலைப்பில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் போதைப் பொருள் தொடர் பான தேசிய மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டினைத் தொடங்கி வைத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா முழு பலத்துடன் எதிர்த்து வருகிறது என்றும், இந்தியாவில் போதை மருந்து தயாரிக்கவும் அனுமதியில்லை. வெளியில் இருந்தும் இந்திய எல்லைக்குள் போதை மருந்து வராது; இந்தியாவிற்குள் இருந்தும் வெளியே செல்லாது என்று கூறினார்.
போதைப் பொருள் வர்த்தகத்தின் மூலமாகப் புழங்கும் பணமும், பன்னாட்டு அளவில் தீவிரவாதத்தை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதனால் தீவிரவாதத்திற்கு எதிராகவும், போதைப் பொருள் கடத் தலை தடுக்கவும், உலகில் உள்ள ஒட்டுமொத்த நாடு களும் ஒன்றிணைந்து போராடி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், ‘ட்ரக்ஸ் ப்ரீ இந்தியா’ என்ற முழக்கத்தை முன்வைத்து, ஒன்றிய உள்துறை அமைச்சகம், சட்ட விரோதமான போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கும் நார்க்கோட்டிக் கண்ட்ரோல் பீரோ என்பது போதைப் பொருள் சட்ட அமலாக்கம் தொடர்பான விஷயங்களுக்கான நோடல் ஏஜென்சி ஆகும்.
என்.டி.ஏ. சட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் அதி காரங்கள் மற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளும் ஒன்றிய ஆணையமான என்.சி.பி. போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு கள் மற்றும் ஒன்றிய அரசுடன் இணைந்து பல நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைச் செயலாளரின் கீழ், மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அதாவது ஸ்டேட் மல்டி ஏஜென்சி டிரேடிங் மிஷன், ரீஜினல் எகானமிக் இன்டலிஜன்ஸ் கவுன்சில், லீட் இன் டலிஜன்ஸ் ஏஜென்சி என பலவிதமான தொடர் ஆலோ சனைக் கூட்டங்களை என்.சி.பி. மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, போதை மருந்து கடத்தலுக்கு எதிரான அய்.நா. சபையுடனும், சார்க் நாடுகள் உடனான உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. கூடவே, 24 நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் 13 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான கூட்டுப் பணிக்குழுக்கள் மூலம் 28 நாடுகள் பிராந்திய குழுக்களுடன் ஒத்துழைப்பு என, மிகத் தீவிரமான பணிகளை கவனத்துடன் செய்துவரு கிறது ஒன்றிய அரசு.
இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் தொடர் பான சட்டத்தை அமலாக்கம் செய்வது; போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்களில், ஒன்றிய – மாநில அரசாங்கங்களில் பல்வேறு ஏஜென் சிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நார்கோட்டிக் கண்ட்ரோல் பீரோ அமைப்பு ஒருங்கிணைக்கிறது.
இந்திய வரலாற்றிலேயே
இதுவரையில் இல்லாத அளவில்…
சட்ட விரோதமாகக் கடத்தப்படும் போதைப் பொருள்களில் மிகவும் விலை உயர்ந்தது ஹெராயின், கொக்கைன். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில், குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 2 ஆயிரத்து 988 கிலோ 21 கிராம் ஹெராயின் பிடிபட்டது. இந்திய வரலாற்றிலேயே இதுவரையில் இல்லாத அளவில், அதிகம் ஹெராயின் பிடிபட்டது முந்த்ரா துறைமுகத்தில்தான் என கூறுகிறது டைரக்டில்டாப் ரெவின்யூ இன்டலிஜன்ஸ்.
15 நாள்கள் டி.ஆர்.அய். அதிகாரிகளின் தொடர்ச்சி யான விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு தேசிய புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது என்.அய்.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் முந்த்ரா துறைமுகத்தில் பிடிபட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 988 கிலோ ஹெராயின் அகமதாபாத்தில், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி, ‘‘ட்ரக்ஸ் டிஸ்ட்ரக்சன் டே” அன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், மிகவும் பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் அழிக்கப்பட்ட நடவடிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் பாராட்டுவதை யும், போதைப் பொருள் இந்தியப் பொருளாதாரத்தையும், மக்களையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைப்பற்றி விவரித்து, குஜராத் மாநில நாட்டுப்புறக் கலைஞர் நீலேஷ் கஜ்ஜூவின் பாடல்கள், போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு உதவிகரமாக இருந்ததற்கும் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்தார்.
சட்ட விரோத போதைப் பொருள் வர்த்தகம் இந்தி யாவின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, சமூகத்தையே கடுமையாகப் பாதிக்கிறது என்ற நிதியமைச்சர் சீதராமன் கூறிய வார்த்தைகள் உண்மைதான்.
ஆனால், உண்மையில் இந்தியாவில் புலனாய்வு ஏஜென்சிகளால் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் பிடிபட்ட 2 ஆயிரத்து 988 கிலோ ஹெராயின்தான், முதன்முறையாக நாட்டில் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினா?
ஒன்றிய அரசும், உள்துறை அமைச்சகமும் அரசின் இதர ஏஜென்சிகளும் சொல்லும் தகவல் உண்மையா? ஆயிரம் சதவிகிதம் இல்லை. அது தவறான தகவல் என்கிறது ஒன்றிய அரசின் ஆவணங்களே! இதோ அந்த ஆதாரங்களை நீங்களே பாருங்கள்! தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டு ரிப்போர்ட் இது.
உலகின் எந்த நாட்டிலும்
இவ்வளவு அதிகமான ஹெராயின் இதுவரை பிடிபட்டது இல்லை!
2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 22 ஆயிரத்து 263 கிலோ ஹெராயின்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 55 ஆயிரத்து 804 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.சி.ஆர்.பி. ரிப் போர்ட் கூறுகிறது. உண்மையில் உலகின் எந்த நாட்டிலும் இவ்வளவு அதிகமான ஹெராயின் இதுவரை பிடிபட்டது இல்லை.
2020 ஆம் ஆண்டு என்.சி.ஆர்.பி. ரிப்போர்ட் வெளியான பிறகு, எந்த மாநிலத்தில் அதிக அளவு ஹெராயின் பிடிபட்டது என்பதை அறிய ஆய்வில் இறங்கியது ஒரு தனியார் தொலைக்காட்சி.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பிரிவு 24 இல், 26 ஏஜென்சிகளுக்கு ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களைத் தவிர, வேறு எந்தத் தகவல்களையும் யாருக்கும் தரவேண்டியதில்லை என்று விலக்குத் தரப்பட்டுள்ளது.
அதனால், போதைப் பொருள் பறிமுதல் செய்யும் ஒன்றிய அரசின் எந்த ஏஜென்சிகளிடமிருந்தும் எந்த மாநிலத்தில், 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டில் அதிக அளவு ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது என்பதை எவ்வளவு முயற்சித்தும் அந்தத் தனியார் தொலைக் காட்சியால் பெற முடியவில்லை. ஆனால், இரண்டாண்டு காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது.
உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தராய் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான பதில்!
எந்த மாநிலத்தில் அதிக அளவு ஹெராயின் பிடிபட்டது என்ற பதிலை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகமே எழுத்துப்பூர்வமாகக் கொடுத்தது. ஒருமுறை அல்ல மூன்று முறை எழுத்துப்பூர்வமாக உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் நித்தியானந்தராய் அந்தப் பதிலைக் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் கொடுக்கப் பட்ட அந்த பதிலை வரிசைப்படுத்தி காட்டுகின்றோம். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு ஹெராயின் பிடிபட்டது என்ற கேள்வி, சுக்ராம் சிங் யாதவ், விஷம்பர் பிரசாத் நிஷாத் என்ற உறுப்பினர்களால் மாநிலங்களவையில் கேட்கப் பட்டது.
கேள்வி எண் 1173, ட்ரக்ஸ் சீசிடு இன் தி கண்ட்ரி என்று தலைப்பிடப்பட்ட அக்கேள்விக்கு, 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டில், எந்த மாநிலத்தில் அதிகம் ஹெரா யின் பிடிபட்டது என்ற பதில் உள்துறை அமைச்சகத்தால் கொடுக்கப்பட்டது.
எந்த மாநிலம் என்று பாருங்கள்.
சிக்கிம் மாநிலத்தில் மட்டும்…
2018 இல் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 15 ஆயிரம் கிலோ ஹெராயின் பிடிபட்டுள்ளது. அதேபோல, 2020 ஆம் ஆண்டில், சிக்கிம் மாநிலத்தில் 50 ஆயிரம் கிலோ ஹெராயினும், மணிப்பூர் மாநிலத்தில் 3 ஆயிரத்து 200 கிலோ ஹெராயினும் பிடிபட்டு இருக்கிறது.
அதேபோல, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி ராகேஷ் சின்கா என்ற மாநிலங்களவை உறுப்பினர் கேள்வி எண்: 3097 – 2016 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், இந்தி யாவில் நடந்த ஹெராயின் பறிமுதல் குறித்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
அந்தக் கேள்விக்கு உள்துறை அமைச் சகம் சார்பில், ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தராய் எழுத்துப் பூர்வமாக பதில் கொடுத்திருந்தார். அதிலும், 2018 ஆம் ஆண்டில் சிக்கிம் மாநிலத்தில் 15 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பதில் மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது!
அதேபோல, 2020 ஆம் ஆண்டில், சிக்கிம் மாநிலத்தில் 50 ஆயிரம் கிலோ ஹெராயினும், மணிப்பூர் மாநிலத்தில் 3 ஆயிரத்து 200 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், தனித்த நிலப்பரப்பாக சிக்கிம் மாநிலத்து மக்கள் தொகை வெறும் 7 லட்சம் மட்டுமே. நாட்டிலேயே மிகக் குறைவான மக்கள் தொகைக் கொண்ட சிக்கிமில் 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 65 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது என்ற உள்துறை அமைச்சகத்தின் பதில் மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதனால், எந்த ஏஜென்சி சிக்கிம் மாநிலத்தில் ஹெரா யினைப் பறிமுதல் செய்தது என்றபதை அறியக்கூடிய ஆய்வில் இறங்கியது அந்தத் தனியார் தொலைக்காட்சி. ஆனால், அவர்களுக்குக் கிடைத்த பதில் மிகவும் அதிர்ச்சிகரமானது. இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை ஒருங்கிணைக்கும் நோடல் ஏஜென்சி, ஏற்கெனவே குறிப்பிட்டபடி, நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ மட்டுமே!
என்.சி.பி.யின் ஆண்டறிக்கையின்படி 2018 ஆம் ஆண்டு ஹெராயின் கடத்தல் தொடர்பாக இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 748. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் அளவு ஆயிரத்து 258 கிலோ. நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ மட்டும் தனியாகப் பறிமுதல் செய்த ஹெராயின் 300 கிலோ.
என்.சி.பி.க்கு அடுத்தபடியாக, போதைப் பொருள் பறிமுதல் செய்யும் முக்கியமான மற்றொரு ஏஜென்சி, டைரக்டட்ரேட் ஆஃப் ரெவின்யூ இன்டலிஜன்ஸ் மற்றும் கஸ்டம்ஸ்.
நிதி மற்றும் வருவாய் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் டி.ஆர்.அய். வெளியிட்டுள்ள போதைப் பொருள் பறிமுதல் குறித்த ஆண்டறிக்கையில், 2018 ஆம் ஆண்டு 7.98 கிலோ மட்டுமே ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆக, நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ, டைரக் டட்ரேட் ஆஃப் ரெவின்யூ இன்டலிஜன்ஸ் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் – சிக்கிம் மாநிலத்தில் பிடி பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள 15 ஆயிரம் கிலோ ஹெராயினை 2018 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்ய வில்லை என்பது தெளிவாகிறது.
மீதம் இருக்கக்கூடிய எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏஜென்சிகள் ஏதேனும் 15 ஆயிரம் கிலோ ஹெராயினை சிக்கிம் மாநிலத்தில், 2018ஆம் ஆண்டில் பறிமுதல் செய்திருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். 2018 ஆம் ஆண்டில், என்.சி.ஆர்.பி. ரிப்போர்ட்டில் பதிவாகியுள்ள இதர ஏஜென்சிகளில் ஹெராயின் பறிமுதல் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
உள்துறை அமைச்சக அறிக்கையின்படி ஹெராயினைப் பறிமுதல் செய்யவில்லை என்பது தெளிவாகிறது!
சி.பி.அய். 2018 ஆம் ஆண்டு ஒரு கிராம் ஹெராயினைக்கூட பறிமுதல் செய்யவில்லை. என்.அய்.ஏ. 2018 ஆம் ஆண்டு ஒரு கிராம் ஹெராயினைக்கூட பறிமுதல் செய்யவில்லை. அசாம் ரைபிள்ஸ் 2018 ஆம் ஆண்டு 176 கிலோ 14 கிராம் ஹெராயினைப் பறிமுதல் செய்துள்ளது. பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் 2018 ஆம் ஆண்டு 237 கிலோ 913 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்திருக்கிறது. சென்ட்ரல் இண்ட்ஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் 2018 ஆம் ஆண்டு ஒரு கிராம் ஹெராயினைக்கூட பறிமுதல் செய்ய வில்லை. சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் 2018 ஆம் ஆண்டு ஒரு கிலோ 430 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்திருக்கிறது. இந்தோ திபேத்தியம் பார்டர் போலீஸ் 2018 ஆம் ஆண்டு 19 கிலோ 24 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்திருக்கிறது. சாஸ்த்ரா சிம்மபாய்ஸ் 2018 ஆம் ஆண்டில் 8 கிலோ 26 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்திருக்கிறது.
ஒன்றிய அரசின் எந்த ஏஜென்சிகளும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் சிக்கிம் மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டில், 15 ஆயிரம் கிலோ ஹெராயின் பிடிபட்டதாகக் கூறும், உள் துறை அமைச்சக அறிக்கையின்படி அந்த ஹெரா யினைப் பறிமுதல் செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
ஒருவேளை சிக்கிம் மாநில காவல்துறை பறிமுதல் செய்திருக்குமோ என்பதை அறிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சிக்கிம் மாநிலத்திற்கு விண்ணப்பம் செய்தனர். உண்மையில் அவர்கள் கொடுத்த பதில் பகிரங்கமானது.
பறிமுதல் செய்தது யார்? பிடிபட்டதாக உள்துறை அமைச்சகத்தால் கூறப்படும் 15 ஆயிரம் கிலோ ஹெராயின் என்னவானது?
2018 ஆம் ஆண்டில், சிக்கிம் மாநில காவல் துறை ஹெராயின் பறிமுதல் தொடர்பாக, இரண்டு வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இரண்டு வழக்குகளிலும் சேர்த்து 5 கிராம் ஹெராயின் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரி, ஒன்றிய ஏஜென்சிகளும் பிடிக்கவில்லை; மாநில காவல்துறையும் பறிமுதல் செய்யவில்லை என்றால், 2018 ஆம் ஆண்டில் 15 ஆயிரம் கிலோ ஹெராயினை சிக்கிம் மாநிலத்தில் பறிமுதல் செய்தது யார்? பிடிபட்டதாக உள்துறை அமைச் சகத்தால் கூறப்படும் 15 ஆயிரம் கிலோ ஹெராயின் என்னவானது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா!
உண்மையில் 2018 ஆம் ஆண்டிலாவது 15 ஆயிரம் கிலோ ஹெராயின். ஆனால், 2020 ஆம் ஆண்டில் நடந்துள்ள விவகாரமோ இன்னும் அதிபயங்கரமானது. 2020 ஆம் ஆண்டில் என்.சி.ஆர்.பி. ரிப்போர்ட் – இந்தியாவில் மொத்தம் 55 ஆயிரத்து 804 கிலோ ஹெராயின் பிடிபட்ட தாகக் கூறுகிறது.
அதில் 50 ஆயிரம் கிலோ சிக்கிம் மாநிலத்திலும், 3 ஆயிரத்து 200 கிலோ மணிப்பூர் மாநிலத்திலும் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச் சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அவ்வளவு ஹெராயினை எந்த ஏஜென்சியாவது பறிமுதல் செய்ததாகக் கணக்கில் காட்டியுள்ளதா என்று இப்போது பார்க்கலாம். நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ ஆண்டறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டு ஹெராயின் கடத்தல் தொடர்பாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 112. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் அளவு 3 ஆயிரத்து 838 கிலோ.
என்.சி.பி. மட்டும் தனியாக பறிமுதல் செய்த ஹெரா யின் அளவு 343 கிலோ. என்.சி.பி.க்கு அடுத்தபடியாக, போதைப் பொருள் பறிமுதல் செய்யும் மற்றொரு முக்கியமான ஒன்றிய ஏஜென்சி, டி.ஆர்.அய். மற்றும் கஸ்டம்ஸ். 2020 ஆம் ஆண்டு 202 கிலோ மட்டுமே ஹெராயின் பறிமுதல் செய்ததாக அதன் ஆண்டறிக்கைக் கூறுகிறது. ஆக, நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ, டி.ஆர்.அய். மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிக்கிம் மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டில் பிடிபட்டதாகக் கூறப்படும் 50 ஆயிரம் கிலோ ஹெராயினை பறிமுதல் செய்யவில்லை.
மணிப்பூர் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 3 ஆயிரத்து 200 கிலோ ஹெராயினையும் அவர்கள் பிடிக்கவில்லை என்பது இதன்மூலம் தெளி வாகிறது. மீதம் இருக்கக்கூடிய எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இதர ஏஜென்சிகள் ஏதேனும் மணிப்பூர் மற்றும் சிக்கிமில் 2020 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டதாகக் உள்துறை அமைச்சகத்தால் கூறப்படும் 53 ஆயிரத்து 200 கிலோ ஹெராயினைப் பறிமுதல் செய்திருக்குமா? என்பதை அறிவதற்காக அந்த ஏஜென்சியின் ஆவனங்களையும் ஆய்வு செய்தனர்.
2020 ஆம் ஆண்டில் என்.சி.அய்.பி. ரிப்போர்ட்டில் பதிவாகியுள்ள இதர ஏஜென்சிகளின் ஹெராயின் பறிமுதல் குறித்த விவரங்களைப் பாருங்கள். அசாம் ரைபிள்ஸ் 2020 ஆம் ஆண்டு 174 கிலோ ஹெராயினைப் பறிமுதல் செய்துள்ளது.
பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் 2020 ஆம் ஆண்டு 578 கிலோ 726 கிராம் ஹெராயினை பறிமுதல் செய் திருக்கிறது.
சென்ட்ரல் இண்ட்ஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் 2020 ஆம் ஆண்டு 3 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்திருக்கிறது. சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் 2020ஆம் ஆண்டு ஒரு கிலோ 490 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்திருக்கிறது.
இந்தோ -திபேத்தியம் பார்டர் போலீஸ் ஃபோர்ஸ் 2020 ஆம் ஆண்டில் ஒரு கிராம் அளவுகூட ஹெராயினை பறிமுதல் செய்யவில்லை.
சாஸ்த்ரா சிம்மபாய்ஸ் 2020 ஆம் ஆண்டில் 4 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்திருக்கிறது. உண்மையில், சிக்கிம் மாநில காவல்துறையோ ஒரு கிராம் அளவுகூட ஹெராயினை 2020 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்ய வில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் கொடுக்கப்பட்டது.
மணிப்பூர் மாநில காவல்துறையின் இணையப் பக்கமோ 2020 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 200 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்யவில்லை என்று தெளிவுபடுத்துகிறது.
3 ஆயிரத்து 200 கிலோ
ஹெராயின் எங்கே சென்றது?
அப்படி என்றால், கொஞ்சம் கவனமாகப் படியுங்கள், 2018 ஆம் ஆண்டில் சிக்கிம் மாநிலத்தில் பிடிபட்டதாக உள்துறை அமைச்சகம் கூறும் 15 ஆயிரம் கிலோ ஹெராயின், 2020 ஆம் ஆண்டில் அதே சிக்கிம் மாநிலத்தில் பறிமுதல் செய்ததாக உள்துறை அமைச்சகத்தால் கூறப்பட்டி ருக்கக் கூடிய 50 ஆயிரம் கிலோ ஹெராயின், அதே 2020 ஆம் ஆண்டில் மணிப்பூர் மாநிலத்தில் கைப்பற்றப்பட்டதாக உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தராயால் எழுத்துப்பூர்வமாகச் சொல் லப்பட்டு இருக்கக்கூடிய 3 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் எங்கே சென்றது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா!
இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்பதால், மீண்டும் தெளிவான விளக்கம் பெறுவதற்காக, உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் ஹெராயின் பறிமுதல் தொடர்பாகத் தெரிவித்துள்ள பதிலைக் குறிப்பிட்டு, யார் 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஹெராயினைப் பறிமுதல் செய்தது என சிக்கிம் மாநில காவல்துறைக்கு ஆர்.டி.அய்.மூலமாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிக்கிம் மாநில காவல்துறை கொடுத்துள்ள பதிலைப் பார்ப்போம்.
மிகத்தெளிவாக அவ்வளவு அதிக அளவு ஹெரா யின் சிக்கிம் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்படவே இல்லை என்று சிக்கிம் மாநில காவல் தலைமையகம் பதில் கொடுத்துள்ளது.
கூடவே, 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைதான நபர்களின் பெயர், எவ்வளவு ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது என்ற அனைத்துத் தகவல்களையும் கொடுத்துள்ளனர்.
இரண்டாண்டுகளில் 16 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது
அதன்படி 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சிக்கிம் மாநிலத்தில், 16 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 கிராம் ஹெராயினும், 563 கிராம் பிரவுன் சுகரும்தான் சிக்கிமில் மாநில காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
போதைப் பொருள் விவகாரங்களுக்கான நோடல் ஏஜென்சி நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ மட்டுமே என்பதால், அந்தத் துறைக்கும், உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் ஹெராயின் பறிமுதல் தொடர்பாகத் தெரிவித்துள்ள பதிலைக் குறிப்பிட்டு, சிக்கிம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில், எந்த ஏஜென்சி ஹெராயினை பறிமுதல் செய்தது என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
ஆனால், நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோவின் பொதுத் தகவல் அலுவலர், செக்சன் 24 அய் குறிப்பிட்டு, அந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். ஆனாலும், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்த பதில் என்பதால், மீண்டும் மேல் முறையீட்டு அலுவலருக்கு விண்ணப்பம் செய்யப் பட்டது.
ஆனால், அவரும் ஹெராயின் பறிமுதல் தொடர்பாக கேள்வி கேட்க, விண்ணப்பதாரருக்கு உரிமை இல்லை என்று கூறி, பதில் தர மறுத்துவிட்டார்.
நன்றாகக் கவனிக்கவேண்டும், ஹெராயின் பறிமுதல் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் கூறிய பதில் தவறானது என்று நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ கூறவில்லை. மாறாக, பதில் கொடுக்க முடியாது என்றுதான் தெரிவித்துள்ளன.
அப்படியென்றால், 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் பறிமுதல் செய்ததாகக் கூறியிருக்கக்கூடிய 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் காணாமல் போயிருக்கிறது. இதனுடைய பன்னாட்டு சந்தை மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்.
பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கணக்கில் காட்டியுள்ள 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்ததாக ஏன் ஒன்றிய அரசாங் கத்தினுடைய எந்த ஏஜென்சிகளும் பொறுப்பேற்க வில்லை?
நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைக் கும் வகையிலான 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் ஒன்றிய அரசின் எந்த ஒரு ஏஜென்சிகளும், போதைப் பொருள் தொடர்பான பறிமுதல் ஆவனத் திலோ, ஆண்டறிக்கையிலோ காட்டப்படாமல் இருக்க என்ன காரணம்?
5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவினுடைய
மாபெரும் ஊழல் அரங்கேறியது?
கணக்கில் காட்டப்படாத 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயினும், 53 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின், வீட்டை விட்டு மக்கள் வெளிவராத கொரோனா காலகட்டத்தில் பறிமுதல் செய்ததாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின், சட்ட விரோதமாகக் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு விட்டதா? யாருடைய ஆதரவோடு 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவினுடைய மாபெரும் ஊழல் அரங்கேறியது?
இந்தியாவில் மிகச் சிறிய மாநிலங்களான சிக்கிம் மற்றும் மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 68 ஆயி ரத்து 200 கிலோ ஹெராயின் விவகாரத்தை உள்துறை அமைச்சகம் கண்டும் காணாமல் இருக்க என்ன காரணம்?
ஹெராயின் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இந்தியாவில் ஹெராயின் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை – 11 ஆண்டுகாலகட்டத்தில், 16 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது.
2.7.2012 ஆம் ஆண்டில் என்.அய்.ஏ. ஹெராயின் கடத்தல் தொடர்பாக வழக்கு ஒன்றைப் பதிவு செய் துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வெறும் ஒரு கிராம் அளவு ஹெராயின் பிடிபட்டது தொடர்பாக இந்த வழக்குப் பதிவாகியிருக்கிறது. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில், 2021 ஆம் ஆண்டு, 2 ஆயிரத்து 988 கிலோ ஹெராயின் பிடிபட்டது குறித்தும் என்.அய்.ஏ. விசாரித்து வருகிறது. அதுவே, என்.அய்.ஏ. பதிவு செய்துள்ள வழக்குகளில் அதிகம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட முந்த்ரா துறைமுக வழக்கு.
விசாரணைக்கு எடுக்காத
மர்மம் என்ன?
ஒரே ஒரு கிராம் ஹெராயின் பறிமுதல் செய்த வழக்கையெல்லாம் விசாரணைக்கு எடுத்த தேசிய புலனாய்வு முகமை – சிக்கிம் மற்றும் மணிப்பூர் மாநிலத் தில் பிடிபட்ட 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் பறிமுதல் விவகாரத்தை விசாரணைக்கு எடுக்காமல் இருக்கும் மர்மம் என்ன?
ஒன்றிய மற்றும் மாநில புலனாய்வு ஏஜென்சிகள் நாடு முழுவதும் பலவிதமான போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து வருகிறது.
அதில், 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கக் கூடிய ஹெராயின் என்ற ஒரே ஒரு போதைப் பொருள் குறித்த கணக்கில் இருந்து 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் காணாமல் போயிருக் கிறது.
அப்படியென்றால், மீதமிருக்கும் இதர போதைப் பொருள் பறிமுதல் குறித்த கணக்கை ஆய்வு செய்தால், இன்னும் பல பூதாகரமான விவகாரங்கள் வெளிவரு வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எந்த ஏஜென்சிகளின் கணக்கிலும் கொண்டுவரப் படாமல், போதைப் பொருள் மருந்துகள் அழிக்கப்பட்ட அதாவது ட்ரக்ஸ் டிஸ்போசல் கணக்கிலும் காட்டப்படாத 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் என்னவானது?
நாடாளுமன்றத்தில் மூன்று முறை எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்துள்ள உள்துறை அமைச்சகம் 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயினை யார் பறிமுதல் செய்தது என்ற விவரங்களையும், பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் எங்கே சென்றது என்பதுபற்றியும் உரிய பதிலளிக்கவேண்டியது மிகவும் அவசியம்.
நாட்டின் பொருளாதாரத்தை சர்வ நாசமாக்கிவிடும்!
இல்லையேல், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தையும் சர்வ நாசமாக்கிவிடும் என்பது உண்மை!
நன்றி: ‘முரசொலி’,
12-3-2024
No comments:
Post a Comment