குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் இருக்கிறது. இப்பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்கா, ஆப் கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தை சுற்றி எங்கும் மசூதி இல்லை. தற்போது ரம்ஜான் மாதம் என்பதால், விடுதியில் தங்கி இருக்கும் முஸ்லிம் மாணவர்கள் விடுதியில் ஓர் இடத்தில் கூடி, இரவில் தொழுகை செய்கின்றனர். இது குறித்து யாரோ வெளியில் சொல்லி இருக்கின்றனர். இதனால் வெளியில் இருந்து கம்பு மற்றும் கத்தியுடன் 17ஆம் தேதி இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம கும்பல், நமாஸ் செய்து கொண்டிருந்த மாணவர்கள்மீது கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியது.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்களைத் தடுக்க முயன்ற பாதுகாவலரை மீறிச் சென்று மாணவர்களின் அறைகளை அடித்து உடைத்ததோடு, உள்ளே இருந்த லேப்டாப், கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். சிலர் விடுதி மீது கல்வீசித் தாக்கினர். “உங்களுக்கு நமாஸ் படிக்க யார் அனுமதி கொடுத்தது” என்று கேட்டு, சரமாரியாக அடித்து உதைத்தனர். மர்ம கும்பலின் தாக்குதலில் வெளிநாட்டு மாணவர்கள் அய்ந்து பேர் காயம் அடைந்தனர். சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து காவல்துறை வந்தனர். ஆனால் காவல்துறையினர் ஹிந்துத்துவ கும்பல்கள் அனைவரையும் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்த காட்சிகள் சமுகவலைதளங்களில் பரவலாகிக் கொண்டு இருக்கின்றன.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அக்கும்பல் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் சங்பரிவார்க் கும்பல் எத்தகையது என்பதற்கு இந்த ஒரே எடுத்துக்காட்டுப் போதுமே!
“வேற்றுமையில் ஒற்றுமை” என்று பொதுவாகப் பேசப் படுவதுண்டு. அதெல்லாம் சங்பரிவார்களிடத்தில் எடுபடாது; அவர்களுக்கு மூளைச்சலவை எதிர்மாறாகச் செய்யப் பட்டுள்ளது.
இன்றைய பிரதமர் குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது என்பதை – அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா?
கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து குஜராத் மாநிலமே மதவெறிக் காட்டுத் தீயால் மயானமாகவில்லையா?
இப்பொழுது மதவெறி பிஜேபி ஆட்சியில் குடியுரிமைச் சட்டத்தில்கூட மதவெறி தானே அம்மணமாகக் கூத்தாடுகிறது!
அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்களாக இருந்தால் மட்டும் இந்தியாவின் குடிஉரிமைக்குத் தகுதி பெற்றவர்களாம்! முஸ்லீமாக இருந்தால் இந்தியாவில் குடிஉரிமை கோர முடியாதாம்.
இந்துவாக இருந்தும் தமிழராக இருந்தால் இலங்கையில் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடையாதாம்! மதவெறியோடு இனவெறியும் கைகோர்த்தால்… “மதங் கொண்ட யானைக்குச் சாராயத்தை புகட்டினால்” என்ன கெதியாகும்?
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள், அடுத்து இப்போது காசி, மதுரா மசூதிகள்மீது குறி வைத்துள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் நமாஸ் செய்தால் இந்த சங்பரி வார்களுக்கு என்ன நோக்காடு?
உலகில் முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் மக்கள் தொகை ஏராளம் உண்டு. முஸ்லிம்களுக்கு இந்தியாவில் கொடூரம் இழைக்கப்படுகிறது என்ற நிலையில், அதன் பாரதூர விளைவு எதில் போய் முடியும்?
இதற்கு மேல் தாங்காது நாடு? ஒன்றிய பிஜேபி ஆட்சி மக்களாட்சியல்ல – மாக்கள் ஆட்சி! பாசிஸ்டுகள் ஆட்சி! வரும் மக்களவைத் தேர்தலில் இதனை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே நாடு பிழைக்கும்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment