முதலமைச்சர் கூறிய கொள்கை ரீதியான பிறந்த நாள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

முதலமைச்சர் கூறிய கொள்கை ரீதியான பிறந்த நாள் வாழ்த்து

71ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தனது பிறந்த நாள் செய்தியில் “நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய ஆட்சியின் மாற்றமே எனது பிறந்த நாள் செய்தி” என்று கூறியிருப்பது – கை தட்டி வரவேற்புக்கும், வாழ்த்துதலுக்கும் உரிய ஒன்றாகும்.
ஏதோ சம்பிரதாயமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தினைக் கூறாமல், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டும், நாடு எதிர்நோக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டும், மக்கள் நலக் கண்ணோட்டத்தில் இப்படி ஒரு செய்தியைத் தெரிவித்திருப்பது – அசாதாரணமானது.
தமிழ்நாட்டிற்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு விழாக்களில் கண்மூடித்தனமாக தி.மு.க. எதிர்ப்பையும் – தி.மு.க. ஆட்சியை, நாகரிகமற்ற வகையில் தூற்றிப் பேசியிருப்பதும் மிகப் பெரிய கேடு ஆகும்.
எதிலும் அரசியல் கண்ணோட்டம் என்பது ஆபத்தானது! தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் பிரதமர் இப்படிப் பேசி இருப்பாரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியின் மீது குற்றம் சுமத்தும் பிரதமர் அதற்கான தரவுகளோடு பேசி இருக்க வேண்டாமா? கண் சிமிட்டினால் தரவு களைப் பெறுவதற்குப் பெரும் வாய்ப்பும், ஏராளமான வசதிகளையும் பெற்றுள்ள ‘சர்வ அதிகாரமும் பெற்றுள்ள பிரதமரால் ஏன் அப்படிப் பேச முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி.
காரணம் எளிது – தி.மு.க. ஆட்சிமீது தரவுகளோடு குறைகூற கையில் சரக்கு இல்லை.
எந்த வகையிலும் பிஜேபி ஆளும் மாநிலங்களோடு ஒப்பிடு கையில், ஈடு இணை சொல்ல முடியாத அளவுக்கு வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும். தி.மு.க. ஆட்சியின்மீது எந்தக் குறைபாட்டைக் கூற முடியும்? அடிக்கின்ற பந்து எதிரே வந்து தாக்கும் நிலைதான் – பிரதமருக்குரிய பரிதாப நிலை!
வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு பைசாகூட அளிக்க முன்வராத இரக்கமற்ற மோடி அரசு என்பதைவிட வேறு எந்த வகையில் விமர்சனத்தை வைக்க முடியும்?

“கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக!” என்று வள்ளலார் தொலைநோக்கோடு கூறியிருப்பாரோ!
“அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை”
என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவிற்கு வருகிறது. மழை வெள்ளத்தால் கண்ணீர் வெள்ளத்திற்கு ஆளான மக்களுக்கு ஒரு பைசாகூட நிதி உதவி அளிக்காத ஒரு பிரதமர் எந்த முகத்தோடு தமிழ்நாட்டிற்கு வருகிறார்?

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததுபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதிக்குச் சென்ற பிரதமர் அரசு விழாவை அரசியல் மேடையாக மாற்றினாரே தவிர, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதலாக ஒரே ஒரு வார்த்தை சொன்னதுண்டா? நிதியும் கொடுக்க மாட்டார் – குறைந்தபட்சம் அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட வடிக்கவில்லையே!
முதலமைச்சர் மிகச் சரியாகக் கிடுக்கிப்பிடி போட்டு இருக்கிறார். ஒன்றிய அரசின் எந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை? என்று கேட்டாரே – பதில் என்ன?

வேண்டுமானால் ‘நீட்’டையும் தேசியக் கல்விக் கொள்கையையும் சொல்லலாம்; இவை எல்லாம் “திராவிட மாடல்” அரசின் கொள்கை களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் கேடானவை என்பதால் எதிர்த்து வருகிறது தி.முக. ஆட்சி; இன்னும் சொல்லப் போனால் நூறு ஆண்டு வரலாற்றைக் கொண்ட திராவிட சித்தாந்தம் வேர் பிடித்த இந்த மண்ணின் தனிக் குணத்திற்கு (Soil Psychology) எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகளை, திட்டங்களை எப்படி ஏற்க முடியும்?
வேளாண் சட்டத்திற்கும், குடியுரிமை சட்டத்திற்கும் துணை போன அ.தி.மு.க. போன்றதுதான் தி.மு.க. என்ற நினைப்பா?
தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லா வகையிலும் வஞ்சனை செய்யும் பிஜேபியை வரும் தேர்தலில் மண்ணும் மண்ணடி வேருடனும் தூக்கி எறியப் போகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பது நினைவிருக்கட்டும்!

எடுத்துக்காட்டுக்கு ஒன்றைச் சொன்னால் போதுமே! மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜூலை 27ஆம் நாள் அடிக்கல் நாட்டியவர் தானே பிரதமர் நரேந்திர மோடி – அய்ந்து ஆண்டுகள் ஓடி விட்டனவே – ஒரு செங்கல்லை வைத்ததுண்டா? (வாழ்க உதயநிதி ஸ்டாலின்!)
அதே நேரத்தில் இமாசலப் பிரதேசத்தில் ரூ.1470 கோடியில், 2019 ஜனவரி 27ஆம் தேதி ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட் டினார் இதே பிரதமர் மோடி. அந்த மருத்துவமனை முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா செய்து விட்டாரே பிரதமர்!
பஞ்சாப் மாநிலம் பதிண்டா எய்ம்ஸ் மருத்துவமனை 2015இல் அறிவிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டிலேயே செயல்பட ஆரம்பித்து விட்டதே! மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் 95 விழுக்காடு முடிந்து விட்டதாக பிஜேபி தேசிய தலைவர் நட்டா தமிழ்நாட்டுக்கு வந்து சொல்லிச் சென்றுள்ளார் என்றால் இவர்களுக்கு பொய்யப்பர் என்று பட்டம் கொடுக்க வேண்டும். பெரிய பதவி சிறிய குணமா?
“தமிழ்நாட்டுக்கு விரோதமான – மாற்றாந்தாய் மனப்பான்மை யோடு – தமிழ்நாட்டைப் பார்க்கிற வஞ்சனையின் மறு வடிவமான நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பிஜேபி அரசை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவதே தனது பிறந்த நாள் செய்தி” என்று மாணிக்க வரிகளாய்ப் பொறித்த நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சருக்கு அவர் விரும்பியதை நிறைவேற்றி 2025ஆம் ஆண்டு மார்ச் முதல் நாள் வரும் அவரின் பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவோம் – முன் (Advance) கூட்டியே பெரு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment