இனி செய்ய வேண்டிய வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

இனி செய்ய வேண்டிய வேலை

featured image

09.01.1927 – குடிஅரசிலிருந்து…

மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதும், சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கிறார் களென்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயையில் விழுந்து, தங்கள் சமுகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கி விட்டது. ஆனால், இந்த விளக்கம் மாத்திரம் போதுமா? இதனாலேயே நாம் சுயமரியாதை அடைந்து விட்டோமா? என்பதை யோசிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினாலும், விஷமப் பிரசாரத்தினாலும் சுவாதீன புத்தியுள்ள பல பார்ப்பனரல்லாதார் தோல்வியுற்று விட்ட காரணத்தாலும், சுயராஜ்ஜியக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் புரட்டுகளைக் கண்டு சகியாததாலும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உள்ள காங்கிரஸ் சபையினிடம் உள்ள அதிருப்தியினாலும் திடீரென்று மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வரவும், உற்சாகம் காட்டவும் முடிந்ததே அல்லாமல் முழுதும் ஏற்கனவே ஏற்பட்டுள்ள உற்சாகமென்றாவது நிரந்தரமாயிருக்கக் கூடிய உற்சாகமென்றாவது, சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறோம். நமது மக்கள் பார்ப்பன சூழ்ச்சியில் விழாதிருக்க வேண்டுமானாலும், நமது மக்களின் முன்னேற்றத்திற்கு அனுகூலமான மகாநாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானாலும், தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து வேலையை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும். தவிர, மகா நாட்டிற்கு ஒவ்வொரு ஜில்லா, தாலுகாவிலிருந்தும் தக்க பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகள் வந்து போயி ருக்கிறார்களானதால் அவர்கள் தங்கள் தங்கள் ஜில்லாவிலும் தாலுகாவிலும் ஜில்லா, தாலுகா மகாநாடுகள் கூட்ட வேண்டும். அதை ஆதாரமாக வைத்தே ஜில்லா முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்தச் சவுகரியமாயிருக்கும். அந்தந்த இடங்களில் இப்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தார், இந்த மகாநாட்டு வேலையை எடுத்துக்கொண்டு ஆங்காங்குள்ள பெரியோர்களைப் பிடித்து மகாநாட்டை கூட்டுவிக்க ஏற்பாடு செய்யவேண்டும். திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, தென்னாற்காடு, வட ஆற்காடு, சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களில் இப்போது அவசரமாய் ஜில்லா மகாநாடுகள் கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போதே அந்தந்த ஜில்லாக்களில் இருக்கும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கக் கிளை ஸ்தாபனத் தலைவர்கள் இதை உடனே கவனிக்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். தேர்தல்களில் நிற்பதும், தேர்தல்களுக்குச் செலவு செய்வதும் தேர்தல்களின் போது ஊரூராய்ச் சென்று ஓட்டர்களை ஏமாற்றுவதுமே தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தார் வேலையானால் இந்தச் சங்கத்தைவிட காங்கிரஸே மேலானது என்று சொல்லுவோம். உண்மையிலேயே, பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதானால் குறைந்தது இந்த மாதத்திலேயே இரண்டு மூன்று ஜில்லா மகாநாடுகளாவதுகூட்ட வேண்டுமென்று விரும்புகிறோம். சேலம், கோயமுத்தூர், திருச்சி ஆகிய மூன்று ஜில்லாக்காரர்களும் இந்த மாதத்தில் கூட்ட ஆட்சேபணை இருக்காது என்றே நினைக்கிறோம். மற்றபடி அந்தந்த தாலுகாக்காரர்களுக்கும் கூட்ட வசதி இல்லாமற்போகவில்லை. ஆதலால், இந்த மூன்று மாதத்திற்குள் இந்த வேலை முடிந்து, கதர், பார்ப்பன ஆதிக்கப் புரோகிதத்தை ஒழித்தல், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு இவைகளில் தக்க முன்னேற்றம் ஏற்படும்படி செய்ய வேண்டும்.

இதில் பார்ப்பனரல்லாத எவ்வித ராஜிய அபிப்பிராய பேதமுடையவர் களாயிருந்தாலும், இந்த மேற்கண்ட கொள்கைகளை ஒப்புக் கொள்ளக்கூடிய யாரையும் அக்கிராசனராக அழைப்பதில் ஒன்றும் குற்றமில்லை என்றே நினைக்கிறோம். வீண் செலவும், ஆடம்பரமும் வைத்துக்கொள்ள வேண்டிய தில்லை என்பதையும் ஞாபக மூட்டுகிறோம். மகாநாட்டுப் பிரதிநிதிகள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையே மதுரை மகாநாட்டில் நிறைவேறிய கதர் திட்டத்திற்கு மிகுதியும் துணைபோவதாகும். அன்றியும், கிராமங்களில் தொழிலுமற்றுச் சுயமரியாதையுமற்று இரண்டு நாளைக்கு ஒருவேளைக் கஞ்சிக்கும் வகையற்றுப் பட்டினி கிடந்து தவிக்கும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் பசியைத் தீர்த்து பட்டினிக்காக அவர்கள் இழக்க நேரிடும் கற்பையும், மனசாட்சியையும் காப்பாற்ற இது ஒரு ஒப்பற்ற சாதனமாகவும் இருக்கும். ஆதலால் கதரைப் பிரதிநிகளுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

தவிர, வரப் போகும் பொங்கல் பண்டிகைக்கு எல்லாரும் கதரே உபயோகிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.

No comments:

Post a Comment