வேலூர் மயான கொள்ளை நிகழ்ச்சியின் போது
60 அடி உயர தேர் சரிந்து தொழிலாளி படுகாயம்!
வேலூர், மார்ச் 11 வேலூரில் மயானக் கொள்ளை திருவிழா வின்போது 60 அடி உயர தேர் சரிந்து விழுந்ததில், தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். ஆண்டுதோறும் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறும். அதன்படி, நடப்பாண்டுக் கான மயானக் கொள்ளை திருவிழா நேற்று முன்தினம்
(9-3-2024) மாலை தொடங்கியது.
பாலாற்றங்கரைக்கு…
இதன்படி, வேலூர் புதியபேருந்து நிலையம் அருகேயுள்ள பாலாற்றில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. வேலூர் மக்கான் பகுதி,தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, விருதம்பட்டு, கழிஞ்சூர், வஞ்சூர், சத்துவாச்சாரி, விருப்பாட்சி புரம், சேண்பாக்கம், ஓல்டுடவுன் பகுதிகளிலிருந்து, அம்மன் பொம்மையைத் தேரில் வைத்து, பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாகக் கொண்டுவந்தனர்.
காட்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர், வெண்மணி மோட்டூர் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சார்பில் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அம்மன் பொம்மையை வேலூர் பாலாற்றங்கரைக்குத் தேர் கொண்டு வந்து, சூறையாடல் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சி முடிந்து இரவு 11.30 மணிக்கு மீண்டும் 3 தேர்களும் புறப்பட்டன.
அப்போது, கடைசியாகப் புறப்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்த, சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இதில்,வெண்மணி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி விமல்ராஜ் (30) தேரின் அடியில் சிக்கி காயமடைந்தார். பொதுமக்கள் அவரைமீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment