உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக – உலகளாவிய ஆய்வறிக்கை கூறும் தகவலை அறிவியல் தூரிகையான லான்செட் (Lancet) வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய இளம்பிராயத்தினர் – இந்தப் பாதிப்புக்குள்ளாகியுள்ளோர் 1.25 கோடி பேர் என்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது!
விஞ்ஞானிகளின் உலகளாவிய கூட்ட மைப்பான ‘என்.சி.டி. ரிஸ்க்’ மற்றும் உலக சுகாதார மய்யம் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.
அந்த ஆய்வில் உலகம் முழுவதும் 195க்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரதிநிதித் துவப்படுத்தும் 5 முதல் 19 வயதுடைய 6.3 கோடி இளம் பருவத்தினர் மற்றும் 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 15.8 கோடி மக்கள் என்று – 22 கோடிக்கும் அதிகமானோரின் எடை மற்றும் உயர அளவீடுகளை BMI (பி.எம்.அய்.) 1500 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
அவர்களது கூற்றுப்படி, உடல் பருமன் மற்றும் குறைந்த எடை ஆகிய இரண்டும் ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவுகள் என்கின்றனர்!
கடந்த 33 ஆண்டுகளில் இந்த 2 வகையான ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் உலகளாவிய போக்கு குறித்த விரிவான பார்வையை வழங்கும் இந்த ஆய்வு முடிவுகள் ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
2022-ஆம் ஆண்டில் உடல் பருமன் விகிதம் 1990-ஆம் ஆண்டை விட 4 மடங்கு அதிகரித் துள்ளதாம்!
இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 73 லட்சம் இளைஞர்கள் – சிறுவர்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1990இல் இந்த எண்ணிக்கை 3.1 கோடியாக இருந்தது.
அதுபோல 50.4 கோடி பெண்கள் மற்றும் 37 கோடி ஆண்கள் என மொத்தம் 87.9 கோடி வயது வந்தோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
இது கடந்த 1990ஆம் ஆண்டில் பதிவான 19.5 கோடியைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.
இதுபற்றி ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெற்றோர், பெரியவர்கள் அலட்சியமாகக் கருதாமல் – கவலையோடு அந்தப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்களை அளிக்க வேண்டும்.
பெற்றோர்களைவிட அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியைகள் அந்த இளம் மாணவ – மாணவிகளுக்கு அதில் உள்ள ஆபத்துகளை உணர்த்த வேண்டும்!
கண்டபடி நொறுக்குத் தீனி!
துரித உணவு என்ற Fast Food- அவை வயிற்றில் சதாதுருத்திக் கொண்டே இருப்பது அவையில்லாமல் வேறு உடல் ரீதியான குறைபாடுகள்பற்றி மருத்துவர்களிடம் கூடுதல் எடையுள்ள பிள்ளைகளை அழைத்துச் சென்று போதிய மருத்துவ நடவடிக்கையில் ஈடுபடுத்துவது அவசியம் – அவசரம்!
சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் வாரந்தோறும் அல்லது 2 வாரமோ, மாதம் ஒரு முறையோ எடை உடற்பரிசோ தனைகளுக்குட்படுத்தி, கூடுதல் எடை, குறைந்த எடைபற்றி உடனடியாக பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்து, நேரில் வரச் சொல்லி, மாணவர்களுக்கு வேண்டிய தடுப்பு முறைகளை வலியுறுத்தி அவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் கண்காணிப்பைச் செய்து – பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நமது பள்ளிகளிலும் இது கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
எடை கூடுதலும் கூடாது. குறைந்தும் இருக்கக் கூடாது.
“அளவறிந்து வாழ்வது” அது எப்போதும் இருப்பது சாலச் சிறந்தது! – உடல் நலத்திலும் முக்கியம்.
No comments:
Post a Comment