இந்தியாவினுடைய ஜனநாயகத்தை அழித்துவரக் கூடிய பாரதீய ஜனதா கட்சியை – அதன் கொள்கையை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்காக ‘இந்தியா’ கூட்டணி வலுவாக கிளர்ந்து நிற்கிறது
மக்களிடையே இந்தக் கருத்தியலை
இன்னும் வேகமாக எடுத்துச் சொல்வோம்!
நூறு விழுக்காடு விவிபிஏடி-யில் விழக்கூடிய ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படவேண்டும்!
சிறப்புப் பொதுக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்புரை
சென்னை, மார்ச் 8 வட இந்தியாவில் ‘இந்தியா’ கூட்டணி உடைந்துவிட்டது; சிதைந்துவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். இன்றைக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், டில்லி, மகாராட்டிரம் என்று பல்வேறு வட மாநிலங்களில் பா.ஜ.க. என்ற இந்தியாவினுடைய ஜனநாயகத்தை அழித்துவரக் கூடிய அந்தக் கட்சியை, அதன் கொள்கையை வேரடி மண்ணோடு சாய்ப்பதற் காக ‘இந்தியா’ கூட்டணி வலுவாக கிளர்ந்து நிற்கிறது. மக்களிடையே இந்தக் கருத்தியலை இன்னும் வேகமாக எடுத்துச் சொல்வோம்; நூறு விழுக்காடு விவிபிஏடி-யில் விழக்கூடிய ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட வேண் டும் என்றார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள்.
‘‘தேர்தல் பத்திரமும் –
உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!’’
கடந்த 4.3.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்ற தலைப்பில் நடைபெறுகின்ற இந்த சிறப்புப் பொதுக் கூட்டத்தில் எனக்கு முன் உரையாற்றிய நம்முடைய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் பூங்குன்றனார் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பரப்புரைக் கூட்டம் பெரியார் திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின்ற தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பானதொரு உரையை வழங்கு வதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நெஞ்சம் நிறைந்த சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே,
தேர்தல் பத்திரங்கள் குறித்து, ஒரு சிறப்பான சட்ட ரீதியான பார்வையை அளித்து அமர்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத் துறை தலை வரும், மூத்த வழக்குரைஞருமான மரியாதைக்குரிய வழக்குரைஞர் விடுதலை அவர்களே,
இந்தக் கூட்டத்தில் வருகை தந்திருக்கின்ற பெரியோர் களே, தாய்மார்களே, சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக நமது நாட்டில் அரசமைப்புச் சட்டத்தினுடைய பல்வேறு பண்புகளும், அதேபோல, ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கவேண்டிய மாண்புகளும் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு பொதுநிலை நோக்கர்களும்
கவனித்து வருகிறார்கள்!
இதை நாமும் கவனித்து வருகின்றோம் என்பதைத் தாண்டி, உலகளாவிய அளவிலே, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அழைக்கப்படக் கூடிய, நமது நாட்டினுடைய நடப்புகளை பல்வேறு பொதுநிலை நோக்கர்களும் கவனித்து வருகிறார்கள்.
அந்த அடிப்படையில்தான், உலக பத்திரிகைச் சுதந்திரம் குறியீட்டில், 180 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்தியா 161 என்ற நிலைக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கக்கூடிய ஒரு சூழலைப் பார்க்கின்றோம்.
‘‘டெமாக்ரட்டிக் இண்டக்ஸ்சில்…’’
‘தி எகானமிக்’ என்ற புகழ்பெற்ற இதழ், அதனுடைய நுண்ணறிவுப் பிரிவு – இந்தியாவில் இருக்கக்கூடிய ஜனநாயகத்தைப்பற்றி, மோடி ஆட்சியில் இருக்கக்கூடிய ஜனநாயகத்தைப்பற்றி ஆய்வு செய்ததில், ‘‘டெமாக்ரட்டிக் இண்டக்ஸ்சில்” இந்தியா 51 ஆவது இடத்திலிருந்து 53 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது என்று அந்த ஆய்வு சொல்லப்படக் கூடிய ஒரு நிலையைப் பார்க்கின்றோம்.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக, ஒவ்வொரு ஜன நாயக நிறுவனங்களும் நம்முடைய நாட்டில், சிதைக்கப் பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில், ஒன்றாகத்தான் இந்தத் தேர்தல் பத்திரங்களை நாம் பார்க்கவேண்டும்.
இந்தத் தேர்தல் பத்திரங்களைப் பற்றி எனக்கு முன் இங்கே உரையாற்றிய நம் மூத்த வழக்குரைஞர் விடுதலை அவர்கள், விளக்கமாக அதைப்பற்றிய தகவல் களை சொல்லியிருக்கிறார்.
நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகுதான்…
அய்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அரசமைப்புச் சட்டத்தின் 19 ஆவது பிரிவுக்கு விரோதமானது என்று சொல்லி, இந்தத் தேர்தல் பத்திரங்களைத் தடை செய்திருக்கிறது.
இந்தத் தடை இப்போதாவது வந்ததே என்றுதான் நாம் ஆறுதல் அடையவேண்டி இருக்கிறதே தவிர, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகுதான், இந்த முடிவு வந்திருக்கிறது.
‘‘காஸ்ட் ஆஃப் டெமாக்ரசி பொலிட்டிக்கல்ஸ் பைனான்ஸ் இன் இந்தியா!’’
உண்மையிலேயே சொல்லவேண்டுமானால், ‘‘காஸ்ட் ஆஃப் டெமாக்ரசி பொலிட்டிக்கல்ஸ் பைனான்ஸ் இன் இந்தியா” என்ற சிறப்பான ஒரு நூலை வைஷ்ணவ் என்பவர், தேவேஷ்கபூர் என்பவரோடு சேர்ந்து எழுதியிருக்கின்றார்.
தேர்தல் பத்திரத் திட்டம் –
ஜனநாயக விரோத நடவடிக்கை!
அந்த நூலில் மிகத் தெளிவாக, இந்தத் தேர்தல் பத்திரங்கள், நிச்சயமாக ஒரு ஜனநாயக நாட்டிற்குத் தேவையான ஒரு வெளிப்படைத் தன்மையை முற்றிலு மாக மறுத்து, அதில் உள்ள விவரங்களை பொதுமக்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யாருமே, அதாவது பணம் கொடுத்தவரும் சரி, அதனைப் பெற்றவர்களும் சரி – மூத்த வழக்குரைஞர் விடுதலை அவர்கள் இங்கே விரிவாகச் சொன்னார். அதில் உள்ள தொடர்பு என்ன என்பதுகூட யாருக்கும் தெரியாத வகை யில், இது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகத்தான் இந்தத் தேர்தல் பத்திர விவகாரம் அமைந்திருக்கிறது.
இதனை மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ ஏன் அதையும் தாண்டி, ஊராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் போட்டியிடவேண்டும் என்றால், அவரைப்பற்றிய முழுமையான விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படவேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும்பொழுது, அவருடைய முழு விவரங்களையும் குறிப்பிடப்படவேண்டும். அவரு டைய சொத்துபற்றிய விவரங்கள் மட்டுமல்ல; அவரு டைய குடும்பத்தினருடைய சொத்துகளின் விவரம்பற்றி யும் தெரிவிக்கவேண்டும். கடன் வாங்கியிருந்தால், எந்த வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கிறீர்கள்; எத்தனை இடங்களில், அசையும் சொத்து, அசையா சொத்துகள் இருக்கின்றன என்கின்ற விவரங்கள் அனைத்தையும் குறிப்பிடவேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.
எனவேதான், வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட வுடன், பத்திரிகைகளில் நீங்கள் செய்திகளைப் படித்திருப்பீர்கள். இந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடிய இந்த வேட்பாளரின் சொத்து மதிப்பு இவ்வவளவு என்கிற விவரங்கள் வெளிவரும். அது ஒரு திறந்த புத்தகமாக இருக்கும்.
தேர்தல் ஆணையம் ஏன் முகமூடியைப் போட்டுக்கொண்டது?
இப்போது மிகப்பெரிய ஒரு கேள்வி என்னவென்றால், ஒரு தனி வேட்பாளர் போட்டியிடும்பொழுது, அவர் அனைத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய தேர்தல் ஆணையம், ஏன் ஓர் அரசியல் கட்சி மட்டும் பெறக்கூடிய அந்த நன்கொடைகள்பற்றிய முழு விவரங்களையும் தெரி விக்கவேண்டியதில்லை என்று தேர்தல் பத்திரம் என்று சொல்லக்கூடிய முகமூடியைப் போட்டு அரசியல் கட்சி களை மறைத்ததற்கான நடவடிக்கையை எடுத்ததற்கு என்ன காரணம்?
இதுகுறித்து நம்முடைய மூத்த வழக்குரைஞர் விடுதலை அவர்கள் சொன்னார்கள்.
பாரதீய ஜனதா கட்சியினுடைய கையாளாக, ஏவலாளாக தேர்தல் ஆணையம்!
‘‘ஒரே ஓர் அரசியல் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு வரக்கூடிய நிதிகள் அனைத்தும் ‘மூடு மந்திரமாக’ இருக்கவேண்டும்; அது வெளிப்படை யாகத் தெரியக்கூடாது” என்று பாரதீய ஜனதா கட்சியினுடைய கையாளாக, ஏவலாளாக இருந்து தேர்தல் ஆணையம் கொண்டு வந்ததுதான் இந்தத் தேர்தல் பத்திரத் திட்டம் என்று நாம் சொன்னால், அது மிகையாகாது. அதற்கு எடுத்துக் காட்டாக பலவற்றை சொல்லலாம்.
முதலில் ஒரு கூட்டணியைப்பற்றி இங்கே நான் சொல்ல விரும்புகின்றேன். கூட்டணி என்று சொல்வது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஒரு பக்கமும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கம் அல்லது இன்னொரு கட்சியின் தலைமையிலான வேறொரு கூட்டணியைப்பற்றியோ நான் இங்கே சொல்ல வரவில்லை.
மூன்று துறைகளின் கூட்டணியோடு பா.ஜ.க.!
நான் சொல்லக்கூடிய கூட்டணி என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் – அமலாக்கத் துறை – சி.பி.அய். இவற்றிற்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒரு கூட்டணி.
இந்தக் கூட்டணி, இந்தத் தேர்தல் பத்திரங்களை நிலைநாட்டுவதற்காக, அந்தத் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, பாரதீய ஜனதா கட்சிக்கு அதிகமான நிதிகளை சேகரித்துக் கொடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற கூட்டணிதான் ஈ.டி.- சி.பி.அய்.- தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கூட்டணி என்று சொன் னால், அது மிகையாகாது.
எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டுமென்றால், 2018-2019 ஆம் ஆண்டு நிதியாண்டிலும், அதேபோல, 2022-2023 ஆம் ஆண்டு நிதியாண்டிலும் ஏறத்தாழ 30 பெரு நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு அளித்த நன்கொடை 335 கோடி ரூபாய். இந்த நன்கொடையை அளிப்பதற்கு முன்பாக, மேற்சொன்ன 30 நிறுவனங்கள், ஒன்று அம லாக்கத் துறையாலோ அல்லது சி.பி.அய்யின் சோத னைக்கோ இலக்காகி இருக்கின்றன. அதற்குப் பிறகு 335 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ.க. விற்கு அளிக்கிறார்கள். ஆக, இந்தக் கூட்டணியினுடைய வேலை என்னவென்பதுபற்றி புரிந்துகொள்ள முடிகிறது
நான்கு மாதத்திற்குள்ளாக, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 9 கோடி ரூபாய் பி.ஜே.பி.க்கு!
இதுமட்டுமல்லாமல், 30 நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறையோ, சி.பி.அய்.யோ வந்து போன நான்கு மாதத்திற்குள்ளாக, தேர்தல் பத்திரங்கள் வாயி லாக, 9 கோடி ரூபாயை பி.ஜே.பி.க்கு அளித்திருக்கின் றார்கள் என்கிற தகவல் வெளிப்படையாகவே தெரி கின்றது.
அதேபோன்று, 30 நிறுவனங்களில், மூன்றே மூன்று நிறுவனங்கள் மட்டும்தான், காங்கிரஸ் கட்சிக்குத் தேர் தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடைகளை வழங்கி யிருக்கின்றன. மற்ற 27 நிறுவனங்கள் அனைத்தும் பா.ஜ.க.விற்குத்தான் நன்கொடைகளை வழங்கியிருக் கின்றன என்பதை இங்கே எடுத்துச் சொல்ல விரும்பு கின்றேன்.
அதேபோல, 2022-2023 ஆம் ஆண்டில், இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் ஏதோ ஒரு பத்திரிகையாளர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்கிற அடிப்படையில் இல்லை. பா.ஜ.க.வால் அளிக்கப் பட்டு இருக்கின்ற, தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தான்.
2023 இல் மட்டும் பா.ஜ.க.விற்குத்
தேர்தல் பத்திரங்கள் மூலமாக கிடைத்த நன்கொடை ரூ.1,300 கோடி!
2023 ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடை பெற்றன. அந்த ஆண்டில் மட்டும் பா.ஜ.க.விற்குத் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கிடைத்த நன்கொடை 1,300 கோடி ரூபாய்.
மொத்தம் 6,500 சொச்சம் கோடி ரூபாய் என்று சொன்னார்கள் அல்லவா – அதில், 2023 ஆம் ஆண்டு மட்டும் கிடைத்த தேர்தல் பத்திரங்கள்மூலமாக வந்த கள்ளத்தொகை ரூ.1,300 கோடி.
இதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இங்கே நம்முடைய மூத்த வழக்குரைஞர் விடுதலை அவர்கள் சொன்னார்கள்.
மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களை வெளியிடவேண்டிய பாரத ஸ்டேட் வங்கி, யார் யாரெல்லாம் இந்தப் பத்திரங்களை வாங்கினார்கள் என்கிற விவரங்களை உச்சநீதிமன்றத்தில் அளிக்கவேண் டும். மார்ச் 13 ஆம் தேதி, இந்த விவரங்கள், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வரும்பொழுது அளிக்கப்படும் என்று சொன்னார்கள்.
இன்றைக்குப் பெரியார் திடலில் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த நேரத்தில், வந்திருக்கக் கூடிய செய்தி என்ன தெரியுமா?
ஜூன் 30 ஆம் தேதிவரையில்
அவகாசம் வேண்டுமாம்!
பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மனுவில், எங்களால் மார்ச் 13 ஆம் தேதிக்குள், தேர்தல் பத்திரங்களை யாரெல்லாம் வாங்கிச் சென்றார்கள் என் கிற விவரங்களை அளிக்க முடியாது. ஜூன் 30 ஆம் தேதிவரையில் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏன்?
பா.ஜ.க.வைக் காப்பாற்றுவதற்காகத்தான் காலஅவகாசம் கேட்கிறது பாரத ஸ்டேட் வங்கி!
மார்ச் 13 ஆம் தேதிக்குள் அந்த விவரங்கள் வெளிவந்துவிட்டால், பா.ஜ.க. எவ்வளவு அசுத்தமான கட்சி, பா.ஜ.க. பெரிய மார்பைக் காட்டி, எங்களுக்கும், ஊழலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னாலும், ஊழலில் மூழ்கித் திளைத்திருக்கின்ற, இந்தியாவினுடைய முதன்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடும். அதனால், பாரத ஸ்டேட் வங்கி, பா.ஜ.க.வைக் காப்பாற்றுவதற்காக ஜூன் 30 ஆம் தேதிவரை தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது. இந்த நாட்டில் ஏன் ஜனநாயகம் மோசமாக இருக்கின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
‘வி-டெம்‘ நிறுவனத்தின் ஆய்வு!
‘வி-டெம்’ என்ற ஒரு நிறுவனம் மிகத் தெளிவாக ஒரு ஆய்வுக் குறிப்பில், ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஜன நாயகமாக இருக்கக்கூடிய இந்தியா – இன்று தேர்ந் தெடுக்கப்பட்ட சர்வாதிகாரமாக, எதேச்சதிகாரமாக மாறியிருக்கின்றது” என்று சொல்லக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கின்றோம்.
ஊழல்வாதிகள் ‘ஞானஸ்தானம்’ அளிக்கப்பட்டு, ‘புனித’ நீர் தெளிக்கப்பட்டு, ‘புனித’ர்களாகிவிடுகிறார்கள்
பாரதீய ஜனதா கட்சியினுடைய பிரதமர் அல்லது அந்தக் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள், ‘‘இவர்கள் ஊழல்வாதிகள், இவர்கள் மிகப்பெரிய ஊழலில் சிக்கியிருக்கிறார்கள்; இவர்கள்மீது விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும்” என்று ஒரு பெரிய பட்டியலைப் போடுவார்கள்.
அந்தப் பட்டியலை வெளியிட்டு, அடுத்ததாக அமலாக்கத் துறை வரப் போகிறது; சி.பி.அய். வரப் போகிறது என்று சொன்னவுடன், அந்தப் பட்டியலில் உள்ள நபர்கள், மோடி ஜிக்கு முன் கீழே விழுந்தால், உடனே அவருக்கு ‘ஞானஸ்தானம்’ அளிக்கப்பட்டு, ‘புனித’ நீர் தெளிக்கப்பட்டு, அவர் ‘புனித’னாகிவிடுகிறார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பொதுச்செயலாளர் சுஃப்ரியோ பட்டாச்சார்யாவின் ஆய்வு
இப்படி ஓர் ஆளல்ல, இரண்டு ஆள் அல்ல. ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச்செயலாளர் சுஃப்ரியோ பட்டாச்சார்யா அவர்கள் ஓர் ஆய்வு செய் திருக்கிறார் – அந்த ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினால் ஊழல்வாதி என்று சுட்டிக்காட்டப்பட்ட ஒரு எம்.எல்.ஏ., அல்ல; இரண்டு எம்.எல்.ஏ., அல்ல; ஒரு எம்.பி., அல்ல; இரண்டு எம்.பி., அல்ல. ஏறத்தாழ 740 எம்.எல்.ஏ.,க்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் காவிக் கட்சியில் சேர்ந்தவுடன், ‘ஞானஸ்தானம்’ பெற்று, ‘புனிதர்களாக’ மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.
அருமைச் சகோதரர்களே, ஜனநாயகத்தினுடைய நிறுவனங்களையெல்லாம் சிதைத்து வருகிறார்கள் என்று நான் குறிப்பிட்டேன். இன்றைக்கு மிக முக்கிய மான ஒன்றை இங்கே சொல்கிறேன்.
டில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!
இன்றைக்கு நாடு முழுவதும் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகின்றது. அதனால்தான், டில்லியில் நடை பெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
அது என்ன தீர்மானம் என்றால், ஈவிஎம்மில் பதிவாகக்கூடிய வாக்குகள், விவிபிஏடி-என்று சொல்லக் கூடிய ஒப்புகைச் சீட்டுப் பெட்டியில் போய் விழுகிறது. நூறு விழுக்காடு விவிபிஏடி-யில் விழக்கூடிய அந்தச் சீட்டுகள் எண்ணப்படவேண்டும் என்பதுதான் டில்லி யில் நானும், தோழர் திருமாவளவன் அவர்களும், இந்தியா கூட்டணியினுடைய அனைத்துத் தலைவர் களும் பங்குகொண்ட அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.
தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்தின்மீது ஏன் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதற்கான ஒரு தகவலைச் சொல்லி என்னுரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன்.
‘பெல்’ நிறுவன இயக்குநர்களில் ஏழு பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்!
இந்தத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கக்கூடிய பொறுப்பு ‘‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” என்று சொல்லக்கூடிய ‘பெல்’ நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ‘பெல்’ நிறுவனத்தினுடைய ‘‘சுயாட்சியான இயக்குநர்களில்” ஏழு பேர் பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள். அதில் கட்டாரியா என்பவர் பா.ஜ.க.வினுடைய ராஜ் கோட் மாவட்டத் தலைவராக இருக்கக்கூடியவர்.
சிவ்நாத் யாதவ் என்பவர், பா.ஜ.க.வினுடைய உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைத் தலைவராக இருந்தவர்.
சியாமாசிங் என்பவர், பா.ஜ.க.வினுடைய பீகார் மாநிலத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.
பி.வி.பார்த்தசாத் என்பவர், பா.ஜ.க.வினுடைய இதர பிற்படுத்தப்பட்டவருக்கான அணியின் தேசிய செய லாளராக இருந்தவர். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத் தின் பா.ஜ.க. துணைத் தலைவராகவும் இருந்தவர். திருப்பதி நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தவர்.
இப்படியாக, ஏழு இயக்குநர்கள், சுயாட்சியான இயக் குநர்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
பிறகு எப்படி நாம் வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்ப முடியும்?
இதையும் தாண்டி இன்றைக்குத் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதில் யாருக்கும், எந்தவிதமான அய்யப்பாடும் இருக்க முடியாது.
பா.ஜ.க.வை வேரோடும்,
வேரடி மண்ணோடும் சாய்ப்போம்!
அதேநேரத்தில், வட இந்தியாவில் இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது; சிதைந்துவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். இன்றைக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், டில்லி, மகாராட்டிரம் என்று பல்வேறு வட மாநிலங்களில் பா.ஜ.க. என்ற இந்தியாவினுடைய ஜனநாயகத்தை அழித்துவரக் கூடிய அந்தக் கட்சியை, அதன் கொள்கையை வேரடி மண்ணோடு சாய்ப்பதற் காக இந்தியா கூட்டணி வலுவாக கிளர்ந்து நிற்கிறது. மக்களிடையே இந்தக் கருத்தியலை இன்னும் வேகமாக எடுத்துச் சொல்வோம் என்று சொல்லி, இந்த வாய்ப்பைத் தந்தமைக்காக நன்றி சொல்லி விடைபெறுகின்றேன்.
– இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment