மும்பை மூச்சுத் திணறியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 18, 2024

மும்பை மூச்சுத் திணறியது!

featured image

ராகுலின் நடைப் பயணம் இந்தியாவுக்கானது – ஆபத்தான பிஜேபி ஆட்சியை ஒன்றிணைந்து முறியடித்து “இந்தியா” கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்
இலட்சோப லட்ச மக்கள் கடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்

மும்பை, மார்ச்.18 ஊழலில் திளைத்த மக்கள் விரோத ஒன்றிய பிஜேபியை வீழ்த்தி ஓரணியில் திரளுவோம் – குமரி தொடங்கி இந்தியாவை வலம் வந்த ராகுல் காந்தியின் பயணம் இந்தியாவுக்கானது ஒன்றிடுவோம் – வென்றிடுவோம் என்று இலட்சக்கணக்கான மக்கள் கடல் முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கமிட்டார்.
மும்பை – சிவாஜி பூங்காவில், நேற்று (17.3.2024) மாலை நடைபெற்ற ‘இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின்’ நிறைவு விழாவான மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி அவர்களின் இப்பயணத்தைப் பாராட்டி இலட்சோபலட்சம் பேர் மத்தியில் உரை நிகழ்த்திய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “பா.ஜ.க.வை விட இந்திய நாட்டுக்கு வேறு ஆபத்து எதுவும் இல்லை” என்றும், “அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவைக் காபாற்றுவோம்!” என்றும் அறைகூவல் விடுத்தார்.

மும்பையில் நேற்று (17-.4.-2024), நடைபெற்ற ராகுல் காந்தி அவர்களின், ‘இந்திய ஒற்றுமை நியாயப் பயண நிகழ்வில்’ தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு :-
எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன்.
கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டில்லியை எட்டும்! ‘இந்தியா’ கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.

இன்னல்கள் கண்டும் இடராத ராகுலின் பயணம்!
ராகுல் காந்தி அவர்கள் எங்கு சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள். இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பா.ஜ.க. அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி அவர்கள் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்தியாவுக்கான பயணம் இது!
சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால் அவர் உச்சநீதி மன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் நாடாளு மன்றத்துக்குள் நுழைந்து முழங்கினார்.
இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால் தான் இது, ‘இந்திய ஒற்றுமை நியாயப் பயணம்’. (Bharat Jodo Nyay Yatra) இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பா.ஜ.க. விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று, வெளிநாட்டுப் பயணங்கள் – மற்றொன்று பொய்ப் பிரசாரம்.

ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.!
பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, ‘இந்தியா’ என்ற சொல்லையே பா.ஜ.க. தவிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். ‘இந்தியா’ கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது.

நவீன ஊழல் புரியும் பிரதமர்,
ஊழல் பற்றிப் பேசலாமா?
8,000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.க.வின் நவீன ஊழல்! இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்வி களையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம்சாட்டுகிறார்.
நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக அன்று! இந்தியாவின் உணர்வு களைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்திபயணித்திருக்கிறார். பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது.

இந்தியாவே எழுக!
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டில்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப் பதில் நிறைவுற வேண்டும்.
இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்! இந்தியாவே எழுக!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment