திமிங்கலங்கள் மட்டுமல்ல சிறிய மீன்களும்கூட சிக்கின! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

திமிங்கலங்கள் மட்டுமல்ல சிறிய மீன்களும்கூட சிக்கின!

தேர்தல் பத்திரம் என்ற முகமூடியில் பெரிய திமிங்கலங்கள் மட்டுமல்ல; சிறிய மீன்களையும்கூட விட்டு வைக்கவில்லை மோடி அரசு;
உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியபின், தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை சமர்ப்பித்த ஸ்டேட் வங்கி, யாரால் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று அடையாளம் காண உதவிடக்கூடிய வரிசை எண்களை மறைத்திருக்கிற நிலையில், தேர்தல் பத்திரங்கள் மட்டுமின்றி, முந்தைய தேர்தல் அறக் கட்டளை உள்பட பல்வேறு வழிகளிலும், ஆட்சியி லிருக்கிற பாஜகவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வந்த நிதிகள், அவற்றை அளித்தவர்களுக்கு, அதன்பின் கிடைத்த கைமாறு, அல்லது அளிப்பதற்கு முன் விடுக்கப்பட்ட ‘ரெய்ட்’ போன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை, ஊடகங்களில் அவ்வப்போது வெளியான செய்திகளின் அடிப்ப டையில் அது தொகுத்திருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் சோம் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வரி ஏய்ப்புக்காக 2020இல் கைது செய்யப்பட்டனர். கீழமை நீதிமன்றங்களால் இருமுறை பிணை மறுக்கப்பட்டபின், ஜபல்பூர் உயர் நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கியது. அவர்கள் பிணையில் வெளிவந்த 10 நாட்களில், சோம் டிஸ்டிலரீஸ் நிறுவனம் பாஜகவிற்கு ரூ.1 கோடி நிதியளித்தது. அடுத்த சில மாதங்களில் இரு தவணைகளாக மேலும் ரூ.1 கோடி அளித்தது.
அகமதாபாத்தைச் சேர்ந்த குழாய் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரால் நிறுவனத்தில் 2021 நவம்பரில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் அந்நிறு வனம் பாஜகவிற்கு ரூ.1 கோடி நிதியளிக்கிறது. மும்பையைச் சேர்ந்த யுஎஸ்வி என்ற மருந்து நிறுவனத்தில் வருமானவரிச் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்த மாதத்தில் அந்நிறுவனம் பாஜக விற்கு ரூ.9 கோடி நிதியளிக்கிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த சிறீ சிமெண்ட் நிறுவனம் 2020-2022 காலத்தில் பாஜகவிற்கு ரூ.12 கோடி நிதியளிக்கிறது. அதற்கடுத்த ஆண்டில் அந்நிறுவனம் நிதியளிக்கவில்லை. அவ்வாண்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டு, ரூ.23 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு என்று குற்றம் சாட்டப்படுகிறது.

சங்கி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை வாங்கும் முயற்சியிலிருந்த சிறீ சிமெண்ட்ஸ், இந்த நெருக்கடிகளால் அதனை அதானிக்கு விட்டுக்கொடுக்கிறது. சரியாகச் சொன்னால், அதானிக்கு விட்டுத்தரச் சொல்லி, இந்நிறுவனத்துக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி உணவு நிறுவனத்தில் வருமானவரிச் சோதனை நடந்து வழக்கு நடந்துகொண்டிருக்கிற நிலையில், அந்நிறுவனத்திடமிருந்து ரூ.5.78 கோடி நிதியை பாஜக பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டின் எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ் நிறுவனத்தில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்ட 4 மாதங்களில் ரூ.1.05 கோடியும், அடுத்த ஆண்டில் ரூ.6 கோடியும் பாஜகவிற்கு அடுத்த ஆண்டில் மேலும் ரூ.5 கோடியில் பெரும்பகுதியை பாஜகவிற்கு வழங்கக்கூடிய ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளைக்கு அந்நிறு வனம் வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த அய்ஆர்பி இன்ஃ ப்ராஸ்ட்ரக்ச்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் 2013-2014 இல் பாஜகவிற்கு ரூ.2.3 கோடி நிதியளித்துள்ளது. அடுத்த ஆண்டில் அந்நிறுவனத்தில் சிபிஅய் சோதனை நடக்கிறது. அந்த நிறுவனம் பாஜக விற்கான நன்கொடையை ரூ.14கோடியாக உயர்த்தித் தருகிறது!
இந்த நிறுவனமும், இதன் துணை நிறுவனங்களும் சேர்த்து 2013-2024 காலத்தில் பாஜகவிற்கு ரூ.84 கோடி நிதியளித்திருக்கின்றன. கைமாறாக, ஹாப் பூர்-மொராதாபாத் நெடுஞ்சாலை ஒப்பந்தம் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடந்தி ருப்பதாக பின்னர் சிஏஜி அறிக்கை வெளிப் படுத்துகிறது.

2019-2020இல் பாஜகவிற்கு வெறும் ரூ.2.5 லட்சம் நிதியளித்திருந்த அய்தராபாத்தின் யசோதா மருத்துவமனைகள் குழுமத்தில் வருமான வரித் துறை சோதனைகள் நடத்தப்பட்ட பின், ரூ.10 கோடி நிதியளிக்கப்படுகிறது. அகமதாபாத் தைச் சேர்ந்த சிரிபால் இண்டஸ்ட்ரீஸ், 2019-2020இல் பாஜகவிற்கு ரூ.2.25 கோடி நிதியளித்துவிட்டு, அடுத்த இரண்டாண்டுகளுக்கு நிதியளிக்கவில்லை. அதன்மீது வருமான வரித்துறைச் சோதனை நடத்தப்பட்டு, கணக்கில் வராத ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டதாக அறி வித்தவுடன், அந்நிறுவனம் பாஜகவிற்கு ரூ.2.61 கோடி நிதியளிக்கிறது.

அசாமைச் சேர்ந்த மகாலட்சுமி குழுமத்தின் மீது முறைகேடுகளுக்காக 2012 – 2016இல் சிபிஅய் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அதன் உரிமையாளர் நவீன் சிங்கால் வீட்டில் 2020இல் வருமானவரித்துறை சோதனை நடத்தப் பட்டதையடுத்து, அவர் பாஜகவிற்கு ரூ.2.85 கோடி நிதியளிக்கிறார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் ரூ.9.20 கோடி நிதியை பாஜகவிற்கு அவர் அளித்ததைத் தொடர்ந்து, சிபிஅய்யால் முறைகேடுகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது நிறு வனத்திற்கு, வடகிழக்கு இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்திற்கான உரிமம் அளிக்கப்படுகிறது.

போலியான வங்கிச் சான்று அளித்ததற்காக தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தால் 2016இல் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்ட எஸ்.என். பவே நிறு வனத்திற்கு 2019இல் 8 ஒப்பந்தங்கள் அளிக் கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அந்நிறுவ னம் பாஜகவிற்கு ரூ.3.47 கோடி நிதியளிக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த அக்ரோசெல் இண்ட ஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் ஆண்டுதோறும் பா.ஜ.கவிற்கு நிதியளித்து வருகிறது. அந்த நிறுவ னத்திற்கு கட்ச் பகுதியில் முறைகேடாக 18 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 2018இலிருந்து 2023 வரையான காலத்தில் பாஜகவிற்கு நிதியளித்துள்ள நிறுவனங்களில் குறைந்தது 30 நிறுவனங்களின்மீது ஒன்றிய அரசின் அமைப்புகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை மொத்தம் ரூ.335 கோடி நிதியளித்துள்ளன. அதில் ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ரெய்டுக்கு முன்பாக பாஜகவிற்கு நிதியளித்ததே இல்லை.

4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித்துள்ளன. ஏற்கெனவே பாஜகவிற்கு நிதியளித்துக் கொண்டிருந்த 6 நிறுவனங்கள், ரெய்டுக்குப் பின் முன்பைவிட மிக அதிமான தொகையை பாஜகவிற்கு அளித்துள்ளன.
இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
கடுகத்தனை அளவுகூட நாணயமின்றி கொல்லைப்புறமாகக் கொள்ளையடித்து, மலை விழுங்கி ‘மகா தேவர்களாக’ பிஜேபி ஆட்சி நாட்டை நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே முடிவு – வரும் மக்களவைத் தேர்தலில் வட்டியும் முதலுமாகச் சேர்த்துத் தக்க பாடம் கற்பிப்பதே!
மக்களே விழிப்புணர்வு கொள்க!
விபரீத ஆட்சியை வீழ்த்துக!
கரணம் தப்பினால் மரணம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment