தேர்தல் முடிந்து புதிய அரசுக்கான திட்டங்களை இப்பொழுதே வகுக்கிறார்களாம் – இதன் பின்னணியில் இருப்பவை என்ன?
எந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் திறந்தாலும் மோடிதானா?
வருமான வரித்துறை – சி.பி.அய் – அமலாக்கத் துறை – ஈவிஎம் இந்த நான்கும்தான் மோடியின் ஆபத்தான ஆயுதங்கள்!
ராகுல்காந்தி கூறும் இந்த ஆயுதங்களை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை!
வருமான வரித் துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறை – ஈவிஎம் ஆகிய நான்கும்தான் மோடியின் ஆயுதங்கள் என்று ராகுல் காந்தி கூறியதை எடுத் துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி – பல புதிய வித்தைகளை அவ்வப் போது செய்து, அதனை ஊடகங்களில் வெளியிட்டு, புதுப்புது வியூகங்களை வகுத்து, வாக்காளர்களை நம்ப வைப்பதில் மூளைக்கு சாயம் ஏற்றுவதில் அவருக்கே முதலிடம். இதோ ஒரு சாம்பிள்!
புதிய அரசின் திட்டங்களை வகுக்கக் கூறும் மோடி – அதன் பின்னணி என்ன?
ஒன்றியத்தில் அமையவுள்ள புதிய அரசின் முதல் 100 நாள்களுக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் அடுத்த அய்ந்தாண்டுகளுக்கான திட்டங்களைத் தயார் செய்யும் பணியைத் தொடங்குங்கள் என்று வலியுறுத்தியுள்ளார் என்று ஒரு செய்தி!
தேர்தல் தொடங்குமுன்னரே இவரால் விடப் பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளில் அவ்வளவு உறுதி அவருக்கு உண்மையாகவே இருக்குமானால், இப்படி மாநிலங் களுக்கு ஓடோடி வருவாரா?
மணிப்பூரை மறந்த – துறந்த – 140 கோடி மக்கள் தன் மக்கள் என்று வாய்முழக்கம் செய்த பிறகு, அசாமிற்குச் சென்றபோதும்கூட மணிப்பூருக்குச் செல்லாத பிரதமர், தமிழ்நாட்டிற்குத் திரும்பத் திரும்ப வந்த பகுதிக்கே மீண்டும் படையெடுப்பதுபோல வந்து பிரச்சாரம் புது வகையில் செய்து பார்க்கவேண்டிய அவசியம் உண்டா?
எந்தத் தொலைக்காட்சியின் அலைவரிசையைத் திறந்தாலும் மோடி – மோடி – மோடிதானா?
எந்தத் தொலைக்காட்சி அலைவரிசைகளைத் திறந் தாலும், நிமிடத்திற்கு ஒருமுறை ‘மோடி கியாரண் டீ’ படங்கள், பற்பலவே விளம்பர வெளிச்சங்களாகி வர வேண்டிய அவசியமே இருக்காதே!
எங்கோ இடிக்கவில்லையா – புரிகிறதா?
எப்படியானாலும் மீண்டும் நாங்கள்தான் என்று கூறும் அளவுக்கு அவருடைய கட்சியின் பழைய கூட்டணி என்.டி.ஏ.,விலிருந்த கட்சிகளே பல இப்போது இல்லை என்ற யதார்த்தத்தை மறைத்துவிட்டோ, மறந்துவிட்டோ இப்படி தைரியமாக ஒரு ‘வித்தை’யை வாக்காளர்களிடம் ‘மீண்டும் மோடிதான்’ என்று கூறி, நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபடுவாரா?
முந்தைய இரண்டு பொதுத் தேர்தல்களில் அவர் இப்படி ஒரு வித்தையைக் காட்டியது உண்டா?
அரசின் அமைப்புகள் திட்டமிட்டு, அதை அமைச் சரவை ஒப்புக்கொள்வதுதானே மரபு – அமைச்சர்களாக தனித்தனியே திட்டமிட்டு தருவது நடைமுறையா? போலி நம்பிக்கையை உலவவிட எவ்வளவு அருமை யான தந்திர வித்தை பார்த்தீர்களா?
இல்லை, இல்லை. உறுதியாக நம்புகிறார் என்றால், அது ஓட்டுப் பெட்டி தயவினாலா? தேர்தல் ஆணை யத்தின் ஒத்துழைப்பினாலா? என்று சந்தேகக் கேள்வி வாக்காளர்களிடையே கிளம்பாதா?
ராகுல் காந்தி கூறும் பி.ஜே.பி.யின் நான்கு ஆயுதங்கள்!
நேற்று (17-3-2024) மும்பையில் தனது எழுச்சி நடைப்பயணத்தை நிறைவு செய்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் முக்கிய ஆயுதங்கள் நான்கு-
1. வருமான வரித் துறை
2. சி.பி.அய்.
3. அமலாக்கத் துறை
4. EVM’s
என்று சுட்டிக்காட்டியுள்ளதற்குத் தரவு இதோ என்பதுபோல் அல்லவா நாம் மேலே காட்டியுள்ள தனது அமைச்சர்களுக்கு அவர் விடுத்தது போன்ற ஒரு புதிய வித்தைச் செய்தி!
தனது அமைச்சர்களுக்கு உத்தரவிடுகிறாரே, அதன் படி இவரால் தேர்தலில் நிற்க வைக்கப்பட்ட அத்தனை ஒன்றிய அமைச்சர்களும் தேர்தலில் வென்று விடுவார்கள் என்பது உறுதியா? முன்பே அறிவிக்கப்பட்ட வெற்றிகளா?
அவர்களுக்கும்கூட, கோஷ்டி சண்டையில் ஈடு படாமல் தங்களுக்கு அமைச்சரவையில் மீண்டும் இடம் நிச்சயம் என்ற ஒரு நம்பிக்கையை விதைக்கும் ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ வித்தை!
அதுமட்டுமா?
மோடியின் புது வியூகம்,
சிந்திப்பீர்!
கூட்டணிக்குப் போகின்ற ஒற்றை தனி மனிதர்கள் – கட்சியினருக்குக்கூட அப்படி நப்பாசை பகற்கனவுடன் – மற்றவர்கள் வராவிட்டால், நாம் சேர்ந்து அமைச்சர் கனவுடன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்று நினைத்துவிடவும் இடம் உண்டு!
இந்த புது வியூகம்பற்றி, வாக்காளர்களே சிந்தியுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18-3-2024
No comments:
Post a Comment