இந்தியாவின் பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி அவர்கள் அண்மைக் காலமாக அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வந்து நாப்பறை கொட்டுகிறார்.
ஒரு குறுகிய குறிப்பிட்ட காலத்தில் ஒரு பிரதமர் தமிழ்நாட்டிற்கு இத்தனைத் தடவை வந்தது என்பது – இதற்குமுன் எப்பொழுதுமே நடந்ததில்லை.
காரணம் வெளிப்படை; தமிழ்நாட்டில் தனது கட்சி வரும் தேர்தலில் ஓர் இடம் கூடப் பெறப் போவதில்லை என்று துல்லியமாக – திடமாக அறிந்த காரணத்தில் முண்டிப் பார்க்கலாம் என்ற முயற்சியின் வெளிப்பாடு இது.
வரட்டும் – பிரதமர் மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள எந்த ஒரு குடிமகனும் இந்தியாவுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம் – அந்த உரிமை பிரதமருக்கு உறுதியாக உண்டுதான்.
இப்பொழுது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால், இயற்கை யின் சீற்றத்தால் பெரும் வெள்ளத்தில் தத்தளித்த தமிழ்நாட்டுக்குச் சல்லிக் காசு கொடுக்காத பிரதமர் குறைந்தபட்சம் ஆதரவாக நான்கு வார்த்தைகளைக்கூட உதிர்க்காத பிரதமர் – வெறும் அரசியல் ஆதாயத்திற்காக நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதிற் கொண்டு ‘வீராவேசமாக’ பேச்சுக் கச்சேரி நடத்துவதுதான் மக்களுக்கு வேதனையையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
அப்படிப் பேசிவரும் பிரதமர் – ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இன்ன இன்ன திட்டங்களை எல்லாம் சாதித்துக் கொடுத்து இருக்கிறது – இதனால் இத்தனை ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று ஆதாரத்தோடு புள்ளி விவரங்களோடு ஒரு பிரதமர் பேசுவாரேயானால் – அதனை வரவேற்கலாம்.
ஆனால், அதற்கு மாறாக அபாண்டங்களையும், இல்லாத தும் பொல்லாததுமாகப் பேசவது, தவறான தகவல்களைச் சொல்லுவது, கடுமையான சொற்களால் முதலமைச்சரையும், திமுகவையும் கீழிறங்கி வசைப்பாட்டுப் பாடுவது எல்லாம் – எதிர்விளை வைத்தான் ஏற்படுத்தும் என்பதை ஜூன் 4இல் வெளியாகும் தேர்தல் முடிவு பறைசாற்றும்.
‘தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ் துடைத்து எறியப்படும்!
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி என்ற தலைக்கனம் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்று பேசி இருக்கிறார். இவற்றில் வெற்றுச் சொற்களும், வீரபிரதாப முழக்கங்களும் இருக்கின்றனவே தவிர “சரக்கு” ஏதும் இல்லையே!
“தி.மு.க – காங்கிரசின் – இந்திய கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது, அவர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வெறும் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களுடைய கொள்கை களைப் பார்த்தால், அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் அவர்களுடைய முதல் இலக்கு” என்று கன்னியாகுமரியில் ‘கர்ச்சனை’ செய்துள்ளார்.
பிரதமரின் பேச்சில் அவதூறு இருக்கிறதே தவிர, ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? இதே பாணியில் பிஜேபி யைப் பற்றியும், பிரதமரைப் பற்றியும் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? திருப்பி பதிலடி கொடுத்தால், இவர்களின் நிலை என்னவாகும்.
ஊழலைப் பற்றிப் பிரதமர் பேசுகிறாரே!
பிஜேபி ஒன்றிய ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சி.ஏ.ஜி. அறிக்கை அதிகார பூர்வமாக அடித்துச் சொல்லியிருக்கிறதே – இதுவரை ஆளும் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு உண்டா?
2ஜி ஊழல்பற்றிப் பேசி இருக்கிறார் பிரதமர். இதில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க. தான் என்று பேசி இருக்கிறாரே – இதன்மீது பிரதமர் மீது தி.மு.க. நினைத்தால் வழக்குத் தொடுக்கலாமே!
2ஜி வழக்கில் குற்றமற்றவர் என்று மானமிகு ஆ. இராசா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒரு பிரதமர் இப்படி ஒரு பொதுக் கூட்டத்தில் அபாண்டமாக சட்ட விரோதமாகப் பேசுகிறார் என்றால் இந்தப் பேச்சை நேரில் கேட்ட – ஏடுகளில் படித்த பொது மக்கள் பிரதமர் மோடியைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
“தி.மு.க. தமிழ்நாட்டின், பண்பாட்டின் எதிரி – சாதாரண எதிரி அல்ல – நமது கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி திமுக” என்கிறார் பிரதமர்.
எதை மனதிற் கொண்டு பிரதமர் பேசுகிறார் என்பதை தமிழ்நாட்டில் கடைகோடியில் இருக்கும் எந்த ஒரு குடிமகனும் புரிந்து கொள்வார். பிறப்பில் பேதம் பேசும் மனுதர்மத்தையும் வேதங்களையும் புராணங்களையும் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டி புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அல்லவா – அதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கிறார்.
அயோத்தியில் ராமன் கோயில் திறப்பு விழாவுக்குச் செல்லவிருந்த தமிழ்நாட்டு மக்களை அரசு தடுத்ததாம். அதனை உச்சநீதிமன்றம் கண்டித்ததாம்! கோயபல்சுகள் தோற்கும் அளவுக்கு நமது பிரதமர் பேசுவது அந்தோ பரிதாபம்! பிரதமர் மோடி பேசட்டும் – இந்தத் திசையில் திருப்பித் திருப்பிப் பேசட்டும். தமிழ்நாட்டு மக்களின் தனித் தன்மையான திராவிட மண்ணின் தனித்தத்துவத்தில் அவை எல்லாம் பொசுங்கி சாம்பலாகிப் போய் விடும் என்பது நினைவில் இருக்கட்டும்!
இதற்காக தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் ஒரு நூற்றாண்டு காலம் மக்களைப் பக்குவப்படுத்தியிருக்கிறது – சிந்தனையைச் செழுமைப்படுத்தியிருக்கிறது.
இது ஒன்றும் அயோத்தியல்ல; “இராவண லீலா” நடத்திய பூமி – இதைப் போன்ற எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிச் சவாரி செய்த மக்கள் தமிழ்நாட்டு மக்கள்.
பிரதமர் மோடி இப்படி எல்லாம் அடிக்கடி வந்து தமிழ்நாட்டில் பேசட்டும் – ஏற்கெனவே ஆளுநரே அந்தக் ‘கைங்கரியத்தை’த் தான் செய்து கொண்டு இருக்கிறார்.
இவை எல்லாம் தமிழ்நாட்டு மக்களை உற்சாகப்படுத்தும் – எதிர் சக்திகளின் முகவரிகளைக் கண்டு தக்கப் பாடம் கற்பிக்கும் என்பது தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றை உணர்ந்தவர்களுக்குப் பட்டப் பகலில் சூரியனை போல பளிச்சென்று தெரியும். பிரதமர் மோடி அவர்களுக்கு “நன்றி! நன்றி!!”
No comments:
Post a Comment