அன்னை மணியம்மையார்பற்றி தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

அன்னை மணியம்மையார்பற்றி தந்தை பெரியார்

 

என் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக் கையான வாரிசு மணியம்மை. (25.9.1949)
மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவிற்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.

– விடுதலை 15.10.1962

«««
எனது காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆப்ரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும், நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக் கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரிது.
(தந்தை பெரியார் 89ஆம் பிறந்தநாள் மலர்) – விடுதலை (17.9.1967)
«««
ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது. செப் டம்பர் பிறந்தால் 94ஆம் ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன். நான் சென்னைக்கு வந்தால் ‘உண்மை’ மாத இதழையும், சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன்.
சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக் கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக் கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப் போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில்தான் நடைபெறு கின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப் பண்ணை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட்டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டி யிருக்கிறது. நான் சென்னைக்கு வந்தால், மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.

– விடுதலை’ – தலையங்கம் – 19-7-1972

«««
இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக – என்ன நோக் கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் – வெறுப்புக்கும் ஆளாகி) செய் தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன். இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது, எல்லாம் அந்த அம்மாதானே! என்னை நேரிடையாக எதிர்க்கத் துணி வில்லாத இவர்கள் அந்த அம்மா மீது குறை கூறுகிறார்கள்.

– விடுதலை 13.2.1972

No comments:

Post a Comment