கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம்! வெற்றி நமதே!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம்! வெற்றி நமதே!!

 

தகவல் தொழில் நுட்பக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்!

திருச்சி, மார்ச் 3; கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாக ஏற்போம், வெற்றி நமதே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழுவின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நேற்று (2-3-2024) திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழுக் கலந்துரையாடல் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! யாருமே எதிர்பார்க்காத வகையில் பெருந்திரளாக இங்கே கூடி இருக்கின்றீர்கள்! உங்களின் உற்சாக வருகை பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது!

நம்மால் முடியும்!
சென்ற மாதம் 24-2-2024 அன்று சென்னை பெரியார் திடலில் மாநில இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் புதிதாக 110 பேருக்கு “ட்விட்டர்” கணக்கு தொடங்கப்பட்டு, சில பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அவ்வகையில் தோழர்கள் பதிவிட்டு, ஒவ்வொரு பதிவின் கீழும் “ஸிமீழீமீநீt ஙியிறி”, “மக்கள் விரோத பாஜக” என்கிற அடைமொழி கொடுக்கப்பட்டது!
சரியாக 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகு “ட்விட்டர்” கணக்கை மேற்பார்வையிட்ட போது, கழகத் தோழர்கள் 110 பேரின் பதிவுகளை, 2800 பேர் பகிர்ந்திருந்தனர் (ஷிலீணீக்ஷீமீ). இந்தப் பதிவுகளுக்குச் சுமார் 50 ஆயிரம் பேர் விருப்பம் (லிவீளீமீs) தெரிவித் திருந்தனர். மிக முக்கியமாக, “ஸிமீழீமீநீt ஙியிறி”, “மக்கள் விரோத பாஜக” என்பது “ட்ரெண்டிங்” (ஜிக்ஷீமீஸீபீவீஸீரீ) என்கிற நிலையை அடைந்தது!

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த…
ஒவ்வொரு தேர்தலின் போது பாஜக பல முழக்கங் களை முன் வைக்கும். நல்ல காலம் பிறக்கிறது என்றும், வளர்ச்சி நோக்கி வருகிறோம் என்றும், வேலை வாய்ப்புகளை கோடிக்கணக்கில் உருவாக்கு வோம் என்றும் கூறுவார்கள். ஆனால் எதையுமே அவர்கள் செய்ததில்லை. மாறாக பொய்யான வாக்குறுதி களாகவே அவை இருக்கும்!
அதுவும் சமூக வலைத்தளங்கள் வளர்ந்த பின்னர், கண்மூடி கண் திறப்பதற்குள் பொய்ச் செய்திகளைப் பரப்பிவிடுகின்றனர். உண்மைச் செய்திகள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற் காகவே இந்தப் பொய்களைப் பரப்புகின்றனர்! போர் நடக்கும் போது, ஆயுதத் தாக்குதலை விட, உளவியல் தாக்குதல் அதிகம் முக்கியத்துவம் பெறும். அதே பாணியில் தான் பாஜகவும் செயல்படுகிறது! வதந்திகளைப் பரப்புவது, மிகையான செய்திகளை உருவாக்குவது, கலவரச் சூழலை ஏற்படுத்துவது என முற்றிலும் மனித விரோத செயலைச் செய்து வருகிறார்கள்.

“கவுண்டவுன்” தொடங்கும் நேரம்!
இங்கே அரங்கம் நிறைந்து தோழர்கள் இருக்கின் றீர்கள். இதில் கைப்பேசி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாம் ஆதாரப்பூர்வமான, உறுதி செய்யப்பட்ட தகவல்களையே பதிவு செய்ய வேண் டும். அதற்குரிய செய்திகளைத் தலைமை நிலையத் தில் இருந்து தயார் செய்து தருகிறோம். நீங்கள் அதை ‘விநியோகம்’ செய்தால் மட்டும் போதுமானது.
விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க இருக் கிறார்கள். அதனைத் தொடர்ந்து “கவுண்டவுன்” தொடங்கிவிடும். தேர்தல் முடியும் வரை, ஏனைய பணிகளைத் தவிர்த்துவிட்டு, அவரவர் வாய்ப்பிற்கு ஏற்ப உத்வேகமாகச் செயல்பட வேண்டும்! உயிர் அச்சம் இருந்த கரோனா காலத்தில் கூட, தொடர்ந்து காணொலி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர்கள் நாம்!

பக்குவமாகக் கையாள்வோம்!
பொதுவாகச் சமூக ஊடகங்களில் அனைத்துத் தோழர்களுமே சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். அதே நேரம் எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, அதைப் பரப்பிட வேண் டும். அதற்கான குழு ஒன்று தலைமைக் கழகத்தால் உரு வாக்கப்படும். அதில் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், வி.சி.வில்வம் ஆகியோர் செயல்படுவர். குழுவும் விரிவாக்கம் செய்யப்படும்.
அக்குழு சொல்லும் ஒருமித்த முறையைக் கையாளுங்கள்! எதிர்வரும் 100 நாள்களில் நம் செய்திகள், இலட்சக்கணக்கில் செல்ல வேண்டும். பேருந்துகளில், இரயில் பயணங்களில், நிகழ்ச்சிகளில், திருமண வீடு களில் என எங்கிருந்தாலும் செய்திகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்!
நம்மிடம் அறிவியல் கருவிகள் இருக்கிறது, அறிவு, ஆற்றல் இருக்கிறது, நல்ல வாய்ப்பும் இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் ஊடகப் பணிகளில் திட்ட மிட்டு செய்திட வேண்டும்! சமூக ஊடகங்களில் பதி விடும் போது அல்லது பிறருக்குப் பதில் கூறும் போது கோபம், வேகம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை இருக்கக் கூடாது! பொய்யும், புரட்டும் கொண்டவர்களை நாம் பக்குவமாகக் கையாள வேண்டும். நாம் அளிக்கும் பதில்களால் மற்றவர்கள் நமது நியாயங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும்!

தனி மரம் தோப்பாகாது!
அந்தளவிற்குச் சிறப்பான தத்துவம் நம்மிடம் இருக்கிறது. உண்மையை மட்டுமே பேசக் கூடியவர்கள் நாம்! அதுவும் ஆதாரத்துடன் பேசுவோம்! சமூகத்தைக் காக்கும் பொறுப்பு மற்றவர்களை விட, நமக்குக் கூடுத லாக இருக்கிறது! நம் பணி என்பது நன்றி பாராத தொண்டு! நம் கொள்கைகள் எண்ணிக்கையைச் சார்ந் தது அல்ல; மாறாக எவ்வளவு ஆழமானது என்பதைப் பொறுத்தது!
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களின் உழைப்பை நாம் பயன்படுத்த வேண்டும்!
ஒரு கை ஓசை ஒலி தராது; தனி மரம் தோப்பாகாது! எனவே ஒருங்கிணைந்து செயல்படுவது மிக, மிக முக்கியமானது!

கற்கும்போது என் வயது 91 அல்ல, 19!
ஊடகங்களில் எளிதாகச் செயல்பட புதிய உத்திகளை நாம் கையாள இருக்கிறோம்! நானும் கூட‌ ஊடகங்களில் செயல்பட மேலும் சில செய்திகளைக் கற்க வேண்டும். எனினும் நான் விடமாட்டேன். அதுபோன்ற நிலைகளில் என் வயது 91 இல் இருந்து, 19 ஆக மாறிவிடும்.
காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது என்பார்கள். ஒருபோதும் காடு வா வா என்று சொல்லாது, வீடு போ போ என்றும் சொல்லாது. அதை நாம் கேட்க வும் கூடாது. எப்போதும் நாம் நம் பணிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் என் றென்றும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன். கற்றுக் கொண்டே இருக்கிறேன். பயிற்சி வகுப்பாக இருந்தால் கற்றுக் கொள்வதற்கு முதல் மாணவனாகப் பதிவு செய்திடுவேன்!

உலகம் ஊடகமயம்!
சமூக வலைதளங்களில் தான் இன்று உலகம் இயங்கி வருகிறது‌. தமிழ்நாட்டில் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும், மாலை 4 மணிக்கு விடுதலை நாளிதழை இணையம் வழி படித்துவிடலாம். ‌புதிய சிந்தனைகளை யார் கொடுத்தாலும், ஏற்க வேண்டும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் எனும்‌ நிலை மாறி, எப்பொருள் யார் யார் கை மூலம் வந்தாலும் பின்பற்ற வேண்டும்!

“சிக்கென” பிடியுங்கள்!
நல்ல மனிதர்களை எப்போதும் “சிக்கென” பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி காமராஜர் அவர்களைச் சிக்கென பிடித்துக் கொண்டதால் தான் தமிழ்நாட்டிற்குக் கல்வி வளர்ச்சி வந்தது! அதேபோல எம்ஜிஆர் அவர் களைப் பிடித்துக் கொண்டதால் தான், வருமான வரம்பு நீக்கம் செய்யப்பட்டு, இட ஒதுக்கீடு அளவும் அதிகரிக் கப்பட்டது. அதேபோல ஜெயலலிதா அவர்கள் மூலம், 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குச் சட்டப் பாதுகாப்பு பெறப்பட்டது. இன்றைக்குப் பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி எடுக்கும் சாதனையைச் செய்து மேலும், மேலும் சிறப்பான ஆட்சி செய்து வரும் நமது ஒப்பற்ற முதல்வர், சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பெற்றுள்ளோம்!
2024 தேர்தல் வெற்றி என்பது நம் கொள்கைக்குக் கிடைக்கும் வெற்றியாகக் கருதப்படும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், டாக்டர் கலைஞர் ஆகியோர் போராடித் தந்த உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்! எனவே அதிகக் கவனம் செலுத்தி, மனதை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வேண்டும்!

வேண்டும் திராவிட இந்தியா!
புதிய தமிழ்நாடு மட்டுமின்றி, திராவிட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இந்தியா முழுவதுமே திராவிடர்கள் தான் வாழ்ந்தார்கள் என அண்ணல் அம்பேத்கர் ஆதாரத்துடன் எழுதியுள்ளார். பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமது அடுத்த தலைமுறை வெகுவாகப் பாதிக்கப்படும். சமூகமும் அமைதியை இழக்கும். எனவே தகவல் தொழில் நுட்பக் குழுவின் கூட்டத்தின் வாயிலாக உறுதிமொழி ஒன்றை ஏற்போம்!
உண்மைகளைத் தொடர்ந்து பரப்பிடுவோம்! எதிரி களின் முகத்திரையைக் கிழித்திடுவோம்! பொய்யை அகற்றிடுவோம்! மெய்யை நிலை நிறுத்துவோம்! திராவி டம் வெல்லும்; வரலாறு சொல்லும்! கையளவு கருவியான கைப்பேசியை ஆயுதமாகக் கொண்டு செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்!! எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசினார்கள்.

பயிற்சி வகுப்புகள்!
முன்னதாகத் தொடங்கிய நிகழ்வில், கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் வாட்சப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு வலைத்தளங்களில் எளிமையாகப் பணியாற்றுவது குறித்தும், புதிய நுட்பங்கள் குறித்தும் “புரஜெக்டர்” மூலம் திரையிட்டுக் காட்டப்பட்டது. சுயபடிவம் கூட, னிஸி சிளிஞிணி மூலமே பூர்த்தி செய்யப்பட்டது.
வயது 15 தொடங்கி, 80 வரை அனைவரும் ஆர்வ முடன் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தோழர்கள் வருகை தந்தனர்! மொத்தம் 350 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது!

பங்கேற்றோர்!
செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், புதுச் சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலை மைக் கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், மதுரை வே.செல்வம், க.சிந்தனைச் செல்வன், ஆத்தூர் சு.சுரேசு, குடந்தை க.குருசாமி, திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி க.நா.பாலு, இலால்குடி ப.ஆல்பர்ட், காவேரிபட்டிணம் திராவிடமணி, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகங்களின் தோழர்கள் அனைவரும் பங்கேன்றனர்.
நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர்!

 

 

 

No comments:

Post a Comment