மலைபோன்ற சோதனைகளை பனிபோல்  கரைய வைத்து இலட்சியப் பணியினைத் தொடர்வோம்! - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 18, 2024

மலைபோன்ற சோதனைகளை பனிபோல்  கரைய வைத்து இலட்சியப் பணியினைத் தொடர்வோம்! - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

featured image
அன்னையார் மறைவிற்குப் பிறகு இயக்கப் பொறுப்பேற்று 
47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்
நான் பற்றிய கரங்கள் என்னை விடவில்லை – 
அவர்களது கரங்களையும் நான் விடவில்லை!
மலைபோன்ற சோதனைகளை பனிபோல் 
கரைய வைத்து இலட்சியப் பணியினைத் தொடர்வோம்!
இயக்கப் பொறுப்பேற்று 46 ஆண்டுகள் முடிவுற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழகத் தலைவர் ஆசிரியர்  அறிக்கை!
அன்னை மணியம்மையார் மறைந்த நிலையில், இயக்கப் பொறுப்பேற்று, 46 ஆண்டுகள் நிறைவு பெற்று, 47 ஆம் ஆண்டில் (18.3.2024) அடியெடுத்து வைக்கும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அரிமா நோக்கோடு விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
1973 டிசம்பர் 24 அன்று அய்யா நம் அறிவு ஆசான் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார் (இது நம் கலைஞர் எழுத்தோவியச் சொற்கள்). நாம் அனை வரும் தொடருகிறோம்!
அன்னையார் யார்? 
நோயுடன் ஒரு பக்கமும் – ஆரியத்துடன் மறுபக்கம் போராடியவர்!
அதன்பிறகு அவரது முதல் நம்பிக்கையான நம் அன்னையார் (ஈ.வெ.ரா.மணியம்மையார்) பழிகளைப் புறந்தள்ளி, தலைவர் தந்தை பெரியார் காட்டிய வழிபற்றியே சிந்தித்து, வற்றாது வழிந்த நம் கண்ணீரைத் துடைத்து, வழிகாட்டி வீரம் செறிந்த களமாடி, கடமை யாற்றி, குறுகிய நான்காண்டு காலத் தலைமைமூலம் அரவணைத்தும், கொள்கை எதிரிகளை அனாயசமாக மருண்டோடிடச் செய்தும், ‘இரட்டைக் குழல்தான்’ என்ற அண்ணாவின் சொற்றொடருக்கு அரும்பொருள் பொழிப்புரையாக இயக்கத்தை பாரறியச் செய்து, இந்தியத் துணைக் கண்டத்தையே திருவிடம் நோக்கி திரும்பிப் பார்க்கும் நிலைக்கு அடித்தளமிட்டார்!
அவரது வாழ்வு – ‘‘நோயுடன் ஒரு பக்க போராட்டம்; ஆரியத்துடன் மறுபக்க களமாட்டம்” என்ற சளைக்காத, சலிக்காத போராட்டத்திற்குப் பிறகு, அவர் வரலாறாகி, இன்றும் அய்யா போலவே வாழ்ந்து கொண்டே உள்ளார்!
46 ஆண்டுகள் முடிந்து 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் பயணம்!
எளியவனாகிய என்னால், சுமக்க முடியாத சுமையும், அடக்க முடியாத ஆறாத் துயரமும் எம்மை வாட்டிய நிலையிலும், தயக்கத்தோடு – ஆனால், அய்யா, அம்மா தந்த பயிற்சியினால் தன்னம்பிக்கை யோடு, இயக்கம் என்ற எம் கொள்கை உறவுகளின் வற்றாத பாசம் நிறைந்த அன்பின் பலத்தோடும் எம் பயணம் தொடங்கி 46 ஆண்டுகள் முடிந்து, (இன்று – 18-3-2024) 47 ஆம் ஆண்டு தொடங்குகிறது! அரிமா நோக்கோடு ந(க)டந்து வந்த பாதையை நோக்குகிறோம்.
வில்லிலிருந்து புறப்படும் கணைபோல…
வில்லிலிருந்து புறப்படும் கணை, அது போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரும்வரை அதன் வேகம் குறையாது என்பது எப்படி உண்மையோ, அப்படியே அய்யா என்ற வில்லிலிருந்து, நாணேற்றி, நம்மைப் பக்குவப்படுத்தியவர் நம் அன்னையார்! அய்யாவிற்குப் பின் பல சோதனைகளையும், வேதனை களையும் போக்கி, கள வெற்றிகளை – ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமன வெற்றிக்குக் களம் பல கண்டவர் நம் அன்னையார்!
அரசியலின் வாடைக் காற்றான காவி விஷக்காற்று, சமூகநீதிக்கான தென்றல் பூமியை வறண்ட பூமியாக்கிட வழிவிடாத ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சியும், எழுச்சியும் தமிழ்நாடு ‘‘பெரியார் மண்” என்பதை அதன் ஒப்பற்ற நம் முதலமைச்சரின் ‘திராவிட ஆட்சி யின்’மூலம் உலகத்திற்குப் பறைசாற்றிக் கொண்டுள்ள மாண்புடன், வெற்றிப் பாதையில் வீரத்துடனும், விவேகத்துடனும் வீறுகொண்டு பறந்து, எதிரிகளை மிரளச் செய்கிறது!
இது போதும் எம்மை வயதை மறந்து உழைக்க வைக்கும் சக்தி – ‘‘வைக்கம் தந்த மாவீரரின் வாரிசுகள் நாம்” என்று வையகத்திற்குக் காட்டிடவே!
தொண்டுக்கு வயது இல்லை!
தொண்டுக்கு வயதில்லை – உழைப்பு – நமது வரலாற்றுத் தலைவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அந்த வழிமுறையில், பயணத்தைத் தொடர, உங்களின் ஆதரவும், அன்பும் என்றும் உங்கள் தோழனாகிய இந்தத் தொண்டனுக்குத்  தொடரும் என்ற நம்பிக்கை உண்டு!
கடந்த ஆண்டில் மிகுந்த மன நிறைவைத் தந்தவை – உழைப்பதற்கான ஊக்கமூட்டியவை நமது நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பல பரிமாணங்களில் தொண்டாற்றிய, தொண்டாற்றும் நம் இயக்கத்திற்குப் பலமான அடித்தளத்தைத் தந்து – தந்தை பெரியாரோடு இணைந்து உழைத்த தொண்டறச் செம்மல்களின் நூற்றாண்டு, அதற்கும் மேலான பல ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இந்த ஓராண்டில் பல நூறாண்டு வரலாறு இளைய தலைமுறைக்கு நினை வூட்டப்படுவதோடு, இயக்கத்திற்கு நல்ல வலிமையை ஏற்படுத்தியுள்ளது என்பது எம்மை மேலும் அலுப்பு சலிப்பின்றி பணியாற்ற கட்டளையிடுகிறது!
இயக்க முன்னோடிகளின் 
நூற்றாண்டு விழாக்கள்!
1. திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் தளபதி அர்ச்சுனன் நூற்றாண்டு விழா!
2. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
3. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
4. சிந்து சமவெளி திராவிட நாகரிகமே என்று தொல்பொருள் ஆய்வு செய்து உலகிற்கு ஜான்மார்ஷல் அறிவித்த நூற்றாண்டு!
5. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முக நாதன் நூற்றாண்டு விழா!
6. சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை
கே.ஆர்.சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா!
7. ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா
8. திருமதி. சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா
9. நிலவு கணேசன் நூற்றாண்டு விழா
10. நீதிக்கட்சியின் முன்னோடி சி.டி.நாயகம் நூற்றாண்டு விழா
11. உடையார்பாளையம்  ஆசிரியர் வேலாயுதம் நூற்றாண்டு விழா
12. தமிழ் மறவர் வை.பொன்னம்பலனார் நூற் றாண்டு விழா
13. சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா!
14. முதுபெரும் கொள்கையாளர் பத்தமடை பரம சிவம் (வயது 94) பராட்டு விழா.
இப்படி வேர்களுக்கு விழுதுகளின் நன்றி கலந்த பாராட்டு நிகழ்ச்சிகளை பல்வேறு கால நெருக்கடியிலும்  நடத்தி, அதில் கலந்துகொண்டதும் ஒரு புத்தாக்கமாகும்!
இயக்கத் தோழர்கள்,
பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்!
இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்களும், மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப் பாளர்களும் அவரவர்களுக்கு அளித்த இயக்கப் பணிகளை மிகுந்த உற்சாகத்துடனும், பொறுப்புடனும் செய்துவருவதும், இளையர்கள் நம் பாசறையில் கற்றுத் தேறி வருவதற்கு வாய்ப்பாக ஏராளமான பயிற்சிப் பாசறைகள் ஆங்காங்கு நடத்தி வைக்கப்பட்டு, மேலும் அமைப்புகளையும் நன்கு புதுப்பித்து, பிரச்சார கூட் டங்கள் அமைத்து, இளைஞரணியினரும், மாணவர் கழகத்தினரும், , விவசாய – தொழிலாளரணியினரும், மகளிர் அணியினரும், பாசறையினரும், பகுத்தறி வாளர் கழகத்தினரும், அதன் துணை அமைப்பினரும்  ஒருவருக்கொருவர் போட்டியாகி, புது உற்சாகத்துடன் இயக்கத்திற்கு வலிவையும், பொலிவையும் நாளும் இணைப்பதால், என்றும் உழைத்தே தீரவேண்டும் என்ற எம் உறுதி மேலும் வல்லமை பெறுகிறது!
நான் பற்றிய கரங்கள்…
பிற்போக்கு மதவெறி சக்திகளைத் தவிர, அனைத் துக் கட்சி, இயக்கத்தவரும் நம் இயக்கத்தை – ‘விடுதலை’ ஏட்டை ஒரு கருத்துக் கலங்கரை வெளிச் சமாகவே கருதி, கைலாகு கொடுத்து மகிழ்ச்சி தெரிவிப் பதைக் கண்டு நாளும் வளருகிறோம் – இலக்கு நோக்கிய நம் பயணம் இலகு ஆகிறது என்ற நம்பிக்கை மீது, அச்சமின்றி, அடக்கத்தோடு பயணிக்கிறோம்!
நமது பல சுயமரியாதைச் சுடரொளிகளை இயற்கை நம்மிடையே இருந்து பறித்தாலும், அவர்களுக்கு  வீர வணக்கம் தெரிவித்து, சுணக்கம் ஏதுமின்றி நமது கொள்கை, இலட்சியப் பயணம் தடைபடாத ஜீவநதி போல ஓடிக் கொண்டே இருக்கிறது.
நான் பற்றிய கரங்கள் என்னைவிடவில்லை. அவர்களது கரங்களையும் நாமும் விடவில்லை.
கழகத் தோழர்களுக்கும், முதலமைச்சருக்கும் 
எமது பாசம் குறையா நன்றி!
சோதனைகள் மலைபோல் வந்தாலும், அவற்றைப் பனிபோல் கரைய வைத்து, இலட்சிய இலக்கை அடைய பாதை மாறாமல், நம் பயணம் தொடரும் என்ற உறுதியோடு, உங்களுக்கும், நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சருக்கும் எமது பாசம் குறையா நன்றி! நன்றி!!
இவ்வளவுப் பணிகளை அடுக்கடுக்காக இடை யறாமல் செய்ய முக்கிய காரணம் நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்களாகிய துணைத் தலைவர் முதல் அனைத்துப் பொறுப்பாளர்களின் அயராத – ‘முகம் சுளிக்காத ஒத்துழைப்பு’க்கான ஒருங்கிணைப்புக் கான பணிகளே! ‘‘எள் என்பதற்குமுன் எண்ணெய் ரெடி” என்பார் எம் பொறுப்பாளர்கள் என்பதே எமது உழைப்பின் உற்சாகத்திற்குக் காரணம். அவர்கள் என்றும் நமது நன்றிக்குரியவர்கள்!
சுயமரியாதை இயக்க 
நூற்றாண்டு விழா!
நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்கள் கழகத் தலைமை ஏற்ற பின்னர், சுயமரியாதை இயக்கத் தின் பொன்விழாவான 50 ஆம் ஆண்டு விழாவை 1975 இல் தஞ்சையில் வெகு சிறப்போடு நடத்தினார்.
அதன் பிறகு நெருக்கடிகால அறிவிப்பினால், இயக்கத்திற்குக் கடும் சோதனை வந்ததையும் வென்று காட்டினார்!
அடுத்த ஆண்டு 2025 இல் தந்தை பெரியார் தொடங்கி, உலகில் எங்குமில்லா மாற்றத்தின் தனித்தன் மையான சுயமரியாதையை முன்னிறுத்தி, பல களங் களில் களமாடி வெற்றி பெற்ற நிலையில், அதன் நூற்றாண்டை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட் டில், இந்தியாவின் தலைநகர் உள்பட உலகின் மற்ற நாடுகளிலும் பெரியார்  பன்னாட்டு அமைப்பின் ஒத்துழைப்போடு நடத்திடவேண்டிய மகத்தான வரலாற்றுக் கடமை நமது பொறுப்பாக – நாம் நடத்தி மகிழத்தக்க அரிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது!
அதற்குள் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் பெரு நகரம், கிராமம், சிற்றூர், பேரூர், பட்டிதொட்டியெல்லாம் நமது இயக்கமும், அதன் சூறாவளிப் பிரச்சாரமும் கொடிகட்டிப் பறக்கவேண்டும்; இன்ன பிற திட்டங் களும், செயல் மலர்களாகப் பூத்துக் குலுங்கவேண்டும்!
இத்தலைமுறை இளையர்களுக்கும் சரி, இயக் கத்தின் மூத்த தோழர்களுக்கும் சரி இந்த நூற்றாண்டு விழாப்பற்றி பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்யவேண்டும்.
‘பெரியார் உலகம்’ பணிகள் விளம்பரமின்றி தொடக்க வேலைகள் முடிக்கப்பட்டு, பணிகள் ஒரு கட்டத்தை அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது!
‘‘தன்னை யறிந்து இன்புற வெண்ணிலாவே – ஒரு
தந்திரம் நீ சொல்லாயோ வெண்ணிலாவே” –
என்று வள்ளலார் வெண்ணிலாவைக் கேட்டார்!
‘‘தன்னை அறிந்து, மானமும், அறிவும் பெற்றோனே மனிதர்” என்பார் எம் தந்தை பெரியார்!
அவரது எளிய தொண்டன் நான் என்பதோடு, இன்னமும் அவரைப் படித்துக்கொண்டே, பாடம் பெறும் ஒரு வாழ்நாள் மாணவனும்கூட!
என்னை உலகறிவது முக்கியமல்ல; அது எனக்குரிய முக்கிய தேவையுமல்ல; மாறாக, என்னை நான் முழு மையாக அறிய, நான் ஒரு முழுப் பகுத்தறிவுவாதியாகி, பழுத்த சுயமரியாதைக்காரனாய் ஆகி விட்டேனா? என்பதே முக்கியம்
விளைவு – விளம்பரம்பற்றி கவலைப்படாது, ஒரு வினைஞனாகவே இறுதி மூச்சு உள்ளவரை என் பணியை ஓயாமல் செய்யவேண்டும் என்ற உள்ள உறுதி உடையவன்.
அதற்கு ஒரே காரணம், நான் பாடம் கற்ற பள்ளி ஈரோட்டுப் பள்ளி;  எனக்கு நிரந்தர ஆசிரியர் இருமனமில்லா அருமனம் படைத்த எம் ஆசான், அறிவுத் தந்தை, நன்றி பாராத தொண்டின் இலக்கணம் நம் தலைவர் பெரியாரல்லவா?
அவரது ஆணை ஒன்றே எனது வாழ்க்கைச் சட்டம்!
கடமையாற்றும்போதும், களமாடும்போதும் கலங் கரை வெளிச்சம் என்று என்றும் அவரை உள்ளத்தில் பதிய வைத்து, உழைத்து வருபவன்.
எமது பயணங்கள் முடிவதில்லை  –
பாதை மாறுவதில்லை!
எதிர்பார்ப்பு இல்லாததால், ஏமாற்றமும் இல்லை தானே!
இலக்கு மட்டுமே எமக்கு நோக்கு!
நன்றி தோழர்களே,
நன்றி! நன்றி!!
உங்கள் தோழன், தொண்டன்,
சென்னை தலைவர்,
18-3-2024 திராவிடர் கழகம்

No comments:

Post a Comment