பெங்களூருவில் தேசிய அறிவியல் நாள் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

பெங்களூருவில் தேசிய அறிவியல் நாள் மாநாடு

featured image

தந்தை பெரியாரின் பகுத்தறிவுபெண்ணுரிமை குறித்து துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை

பெங்களூரு, மார்ச் 8- தேசிய அறிவியல் நாளையொட்டி கடந்த பிப்ரவரி 28 அன்று கருநாடகத் தலைநகர் பெங்களூரில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பும், நெகிலா யோகி டிரஸ்டின் மானவ பந்துத்வா வேதிகே மற்றும் அகில கருநாடக விசார வாதிகளா டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு நாள் மாநாடு ஒன்றை நடத்தின.
பெங்களூரு குமார பூங்கா கிழக்கிலுள்ள காந்தி பவன் மகாதேவ தேசாய் அரங்கில் காலை 10 மணியளவில் மாநாடு தொடங் கியது. புகழ்பெற்ற எழுத்தாளரும், கருநாடகா சாஹித்ய அகாடமியின் தலைவராக இருந் தவருமான அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித் துறை அமைச்சர் சத்தீஷ் ககோலி மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட் டமைப்புத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், நெகிலா யோகி டிரஸ்ட் தலைவர் பேராசிரியர் ஹெ.ஆர்.சுவாமி, பகுத்தறி வாளர் சங்கத் தலைவர் நடேகர் உள்ளிட்ட பெருமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, ஜவகர் லால் நேரு ஆகியோரின் படங்கள் அடங்கிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை முதலே பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத் தாளர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
காலையில் நடந்த தொடக்க விழாவுக்குப் பிறகு, மதிய உணவு அனைவருக்கும் வழங் கப்பட்டது. காலை முதலே நிகழ்ச்சிகளின் இடையில் புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துகளையும், ஒடுக்கப்பட்டோர் உரிமை களையும் முன்னிறுத்தும் பாடல்களை வெவ் வேறு குழுவினரும் தொடர்ந்து இசைத்தனர்.

மதியம் முதல் அமர்வாக தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும், பெண்ணுரிமையும் என்ற தலைப்பிலான இரண்டாம் அமர்வு தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை நிகழ்த்தினார்.
45 நிமிடங்கள் உரையும், அதனைத் தொடர்ந்து கேள்வி-பதிலுமாக அந்த அமர்வு நடந்தது. இயல்பாக குழந்தைப் பருவம் முதலே எழுந்த பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை, அவரது கேள்வி கேட்கும் மனப் பான்மை, அதையே ஓர் இயக்கமாக அவர் மாற்றிய பாங்கு ஆகியன குறித்து எடுத்து ரைத்தார். பெரியாரின் பெண்ணியம் எப்படி தனித்தன்மையானது என்பதையும், அதைத் தன்னுடைய குடும்பத்திலிருந்து தொடங்கி, எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பதை யும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தில் அமைந்த உரைக்கு, கன்னட மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்த விவரக் குறிப்புகளின் திரையிடல் அவர்கள் புரிந்து கொள்ளவும் எளிமையாக அமைந் தது. இந்த அமர்வை வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஒருங்கிணைத்தார். அமர்வுக்கு, பகுத்தறிவுச் சிந்தனையாளரும், மறைந்த எழுத்தாளருமான பெரியார் பெருந் தொண் டர் வேமண்ணா அவர்களின் மகன் பாவேந் தன் தலைமை ஏற்றார். கேள்வி-பதில் பகுதி யில் தந்தை பெரியார் குறித்தும், திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் எழுப் பப்பட்ட கேள்விகளுக்கு ச. பிரின்சு என்னா ரெசு பெரியார் பதிலளித்தார்.
உரைக்குப் பின்னரும் பல்வேறு அமைப் பினரும், தோழர்களும் பேரார்வத்துடன் வந்து தந்தை பெரியார் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள விழைந்தனர். அடுத்தடுத்த அமர்வுகளில் சாவித்திரி பாய் பூலே பற்றி மகாராட்டிர அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதியின் டாக்டர் சவிதா ஷேத், ஜவகர்லால் நேரு பற்றி ஆய்வாளர் டாக்டர் பிரதீப் மால்குடி ஆகியோரும், நவீன மருத்துவ வளர்ச்சி – பகுத்தறிவுப் பார்வையில் என்ற தலைப்பில் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோரும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment