கேள்வி 1: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி உங்கள் கருத்து?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1 : தி.மு.க. தேர்தல் அறிக்கை “இந்தியா” கூட்டணி அரசு அமையும் வகையில் அதற்கு வாகான வெளிச்சமாய் உள்ளது. 21.3.2024 ‘விடுதலை’யில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையைப் படியுங்கள்!
—
கேள்வி 2: பா.ஜ.க. கூட்டணியில், அ.ம.மு.க. ஒரு தொகுதி போதும் என்றாலும், இரண்டு தொகுதியில் நிற்கவேண்டும் என்று பா.ஜ.க. வற்புறுத்தியுள்ளதே?
– சொ.ரமேஷ், கள்ளக்குறிச்சி
பதில் 2 : போட்டியிட – ‘நோட்டாவை’த் தாண்ட வேட்பாளர்களைத் தேடும் பரிதாப நிலை. இதில் உள்கட்சி கோஷ்டி சண்டைகளுக்கும் அங்கே பஞ்சமில்லை!
வாக்கு சதவிகித எண்ணிக்கையைவிட இப்படி ஜாதி, மதம், வட்டாரம், செல்வாக்கு பழைய கணக்குடன் தொகுதி அளிப்பு நடைபெற்றுள்ளது. (இதன் பின்னணியே பா.ம.க.வுக்கு 10 இடம். இது மற்றொரு உதாரணம்.)
—
கேள்வி 3: நாடாளுமன்றத் தேர்தலே நடைபெறவில்லை; அதற்குள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே, இது எப்படி?
– கே.தயாளன், செங்கல்பட்டு
பதில் 3 : ஓட்டுப் பெட்டி ஒருவேளை கர்ப்பம் அடைந்திருந்தால்தான் இப்படிப் பேச முடியும். 400 என்பது சிறீமான் 420 பேச்சுதான் – புரிகிறதா?
—-
கேள்வி 4: மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்ன தி.மு.க. அதனை நிறைவேற்றவில்லையே என்கிற ஆதங்கம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறதே?
– மு.செல்வம், கீழ்வேளூர்
பதில் 4 : தி.மு.க.வின் கொள்கை அதுதான். ஆனால், நிதி நெருக்கடி – இயற்கைப் பேரிடர் எல்லாம் இக்கட்டாக உள்ளன!
இலக்கு நோக்கிப் பயணம் செய்ய இன்னும் காலம் இருக்கிறது. விளக்கி அவர்களுக்கெல்லாம் சொல்ல வேண்டும்.
—
கேள்வி 5: தமிழ்நாட்டில், பா.ஜ.க.விற்கு இரட்டை இலக்கு எண்ணிக்கையில்தான் வாக்குகள் கிடைக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறாரே?
– மு.இராமலிங்கம், மதுரை
பதில் 5 : அது அவரது ஊகமா? விருப்பமா? இப்போது அவர் எந்தக் கட்சியோடு இருக்கிறார் என்பதை அறிவோம். என்றாலும், இதை அலட்சியப்படுத்தலாம். மேலும் தி.மு.க. கூட்டணியினர் பலமாக – கடுமையாக இந்த 30 நாளும் உழைக்க இதுவே ஓர் உந்து சக்தியாக அமையலாம்.
—
கேள்வி 6: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறதே, தி.மு.க.?
– கி.மணி, பெங்களூரு
பதில் 6 : தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது சிறந்த அரசியல் ஆளுமைக்கான அருமையான சாட்சியம். வயது, இனவெறியற்ற வாய்ப்புகள்.
—
கேள்வி 7: நாடாளுமன்றத் தேர்தலை முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நடத்துவதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா?
– கு.கவுதமி, செய்யாறு
பதில் 7 : நிச்சயமாக, மோடி கட்சிக்காக தமிழ்நாட்டில் கரடியாகக் கத்தினாலும் வெற்றி பெற முடியாது. முதலில் இங்கு பிரச்சாரத்தை முடிக்க வேண்டும்; பிரச்சாரத்திற்குக் குறுகிய கால அவகாசத்தை பிறருக்குத் தர வேண்டும் என்ற உள்நோக்கம்தான்.
—
கேள்வி 8: பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீண்ட இழுபறிக்குப் பின் சேர்ந்துள்ளதே?
– ந.சண்முகம், கும்மிடிப்பூண்டி
பதில் 8 : அதன் பழைய வரலாறும் இப்படித்தான். உண்மை உருவத்தைக் காட்டியுள்ளது. பேசிய சமூகநீதி காணாமல் போயுள்ளது!
—
கேள்வி 9: எதிர்க்கட்சிகளின்மீது மீண்டும் அமலாக்கத் துறையின் பாய்ச்சல் தொடங்கியுள்ளதே?
– எஸ்.கார்த்தி, வந்தவாசி
பதில் 9 : தோல்வி பயம். கடைசி நாள்வரை மோடி அரசில் இவை தொடர்ந்தாலும் அதிசயம் அல்ல!
—
கேள்வி 10: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற அம்சங்களை அகில இந்தியா அளவிற்கு எடுத்துச் சென்றால், இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மேலும் பெருகும் அல்லவா?
– க.இளங்கோ, கன்னியாகுமரி
பதில் 10 : நிச்சயம் எடுத்துச் செல்லும்! அது வெல்லும்! ஆட்சி மாற்றம் உறுதி! அவாளுக்கு ஏமாற்றமும் உறுதியோ உறுதி!
No comments:
Post a Comment