பழ.பிரபு
மனித அறிவு வளர்ச்சி என்பது எல்லை களுக்குள் சுருக்க முடியாத விரிந்து பரந்துப்பட்ட வளர்ச்சியாகும். உலகில் தோன்றிய உயிரினங் களுள் மனித இனத்தை வேறுபடுத்திக் காட்டுவது அறிவு வளர்ச்சி ஒன்றேயாகும் . எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் – ஏன்? எதற்கு ? எப்படி ? என்று மனித இனம் சிந்தித்ததின் விளைவாகவே அறிவியல் யுகத்தின் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்; .அதேநேரத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் முன்னோர்கள் கூற்று என்கிற பெய ராலும், அறிவியலை புறந்தள்ளி சிந்தனையை மழுங்கடித்து மனிதனை நம்பவைக்கும் பொய்கள் காலம் காலமாக பரப்பப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலத்தில் அவ்வாறு பரப்பப்படும் பொய்களில் ஒன்று கருங்காலி மாலை குறித்தானதாக இருக்கிறது. கருங்காலி மாலை அணிந்தால் நல்வாய்ப்புகள் வரும், பணம் சேரும், தீய சக்திகள் விலகும், ஆன்மிக பலம் பெருகும் என அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு இட்டுக்கட்டி பரப்பி வருகின்றனர். சமூக ஊடகங்களில் திரைப் பிரபலங்கள் கருங்காலி மாலை அணிந்துள்ள ஒளிப்படங்களைப் பகிர்வதும் சில ஜோசியர்கள் கருங்காலி மாலை குறித்து சிலாகித்துப் பேசுவதுமான பல பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
கருங்காலி மரம் குறித்தோ – பரப்பப்படும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்தோ – ஆராயாமல் ஒரு கூட்டம் கருங்காலி மாலையை வாங்க அலைகின்றது. மக்களின் இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி மற்றொரு கூட்டம் இதில் ஆன்மிகத் தன்மையை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கின்றது.
இயற்கையில் ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எவ்வாறு நாவல் மரம், அத்தி மரம், மருத மரம் போன்றவற்றிற்கு மருத்துவ குணங்கள் காணப்படுகிறதோ அதே போன்று தான் கருங்காலி மரத்திலும் சில மருத்துவ குணங்கள் காணப்படுகிறது – அதைத்தவிர இந்த மரத்தால் நல் வாய்ப்பு வரும்’ போன்ற கூற்றுக்கெல்லாம் அறிவியல் ரீதியாக எந்தச் சான்றுகளும் இல்லை
கருங்காலி மரம், தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மர வகைகளில் ஒன்றாகும்.மரங்களின் வைரம் பாய்ந்த பகுதி பொதுவாக பழுப்பு நிறத்தில் இருக்கும்.
ஆனால், இந்தக் கருங்காலி மரத்தில் வைரம் பாய்ந்த பகுதி கறுப்பு நிறத்தில் இருப்பதனால் இதற்கு, `கருங்காலி’ என்று பெயர் வந்தது. கறுப்பு நிறத்தில் இருக்கும் இதன் மய்யப்பகுதி இரும்பைப் போன்று உறுதித் தன்மையோடு இருக்கும். எளிதில் உடையாது என்பதோடு எடையும் அதிகமாக இருக்கும் என்பதாலும் சிற்பங்கள் , அரிசி குத்த பயன்படுத்தப்படும் உலக்கை, சாமி சிலைகள் , இசைக் கருவிகள் செய்யப் பயன்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து மர வகைப் பொருள்களும் கதிர்வீச்சுகளை எதிர்கொள்ளும் தன்மையுடையவை. அதேபோல் தான் இந்த மரமும் – மருத்துவ ரீதியாகவும், பன்னாட்டுப் பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் மிகவும் முக்கியமான ஒரு மரமாக கருங்காலி திகழ்கிறது. ஆனால் நல் வாய்ப்புத் தரும், தெய்வ சக்தி வாய்ந்தது என்பது போன்று பரப்பப்படும் செய்திகளுக்கு அறிவியல் ரீதியாக எந்தச் சான்றும் இல்லை. இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக உண்மையை உரத்துச் சொல்வது அறிவி யலை நேசிப்பவர்களின் பணியாக உள்ளது.
No comments:
Post a Comment