தூக்கத்தில் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். நமது உடல் அமைதியாக இருக்கும்போது மூளை மட்டும் சுறுசுறுப்பாக இருக்கிறதாம். நாம் தூங்கும்போது மூளை செல்கள் உண்டாக்கும் மின் அதிர்வுகள் இணைந்து சீரான அலைகளாகின்றனவாம். இது மூளையிலுள்ள செல்கள் அதிக செயல்பாட்டில் இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும். நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது மெதுவான மூளை அலைகள் உண்டாகின்றன. இந்த அலைகள் மூளையில் உண்டான கழிவுகளை அகற்ற உதவுகின்றன என்று வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தனித்தனியான நரம்பு செல்கள் ஒன்றிணைந்து சீரான அலைகளை உண்டாக்கி மூளையிலுள்ள அடர்ந்த திசுக்களிடையே திரவங்களை செலுத்துகின்றன. இந்த முறையில் அவற்றை சுத்தம் செய்கின்றன. ‘இவை சிறு பம்புகள் போல செயல்படுகின்றன’ என்கிறார் நோயியல் மற்றும் நோய் எதிர்ப்பு இயல் முதுநிலை முனைவரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான லி-ஃபெங் ஜியாங் -சி. ‘இந்த ஆய்வை தொடர்ந்தோமானால் அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் உள்ளிட்ட நரம்புக் கோளாறுகளை தாமப்படுத்தவும் தடுக்கவும் கூட முடியும். இந்தக் கோளாறுகளில் வளர்சிதை மாற்றத்தின் மூலம் ஏற்படும் கழிவுகளும் பயனற்ற புரதங்களும் மூளையில் தேங்கி நரம்பு சிதைவுகளுக்கு இட்டுச் செல்கின்றன’ என்கிறார் அவர்.
No comments:
Post a Comment