இந்தியாவில் ஜனநாயகம் 18 விழுக்காடு மட்டுமே!
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக உரிமைகள் சீரழிந்து முழுமையான எதேச்சதிகாரமே தலைதூக்கும்!
202 நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட
4,200 ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு அறிக்கை!
ஆய்வறிக்கையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை!
4,200 ஆராய்ச்சியாளர்கள் 202 நாடுகளில் நிலவும் ஜனநாயக நிலைபற்றி ஆய்வு செய்த அறிக்கையில் இந்தியாவிற்கான இடம் 18 விழுக்காடு என்றும், மீண்டும் மோடி இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயக உரிமைகள் சீரழிந்து கீழிறங்கி, மேலும் தொடர்ந்து முழுமையான எதேச்சதிகாரத் திற்கே வழிவகுக்கும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உலக நாடுகளில் ஜனநாயகம் – மக்களாட்சியின் மாண்பு தழைத்தோங்கும் விரிவான பரவலான ஜன நாயகம் (Liberal Democracy) நிலவும் நாடுகள் வரிசைப்படி எப்படி உள்ளன என்பதை, V-Demo’s Democracy Report – என்ற அமைப்பின் அறிக்கை ஒன்று – தெளிவான நிலையை ஆய்வு செய்து, உலக மக்களுக்குத் தெரிவித்துள்ள ஒன்று தற்போது வெளி யிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை இந்த அமைப்பு ஒரு சிறந்த தனிப் பணியாகவே, எடுத்து செய்து தந்துள்ளது.
202 நாடுகள் – 4,200 ஆராய்ச்சியாளர்கள்!
உலகம் முழுவதிலும் உள்ள 4,200 ஆராய்ச்சி யாளர்கள், அறிஞர் பெருமக்கள் ஒத்துழைப்புடனும் – 180 நாடுகளிலிருந்து இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – 3.1 கோடி, (310 லட்சங்கள்) எண்ணிக்கையில் புள்ளி விவரங்கள்(Data Sets), தரவுகள் அடங்கிய 202 நாடு களின் ஜனநாயகம் இந்த ஆய்வில் உட்படுத்தப் பட்டுள்ளது!
1789 ஆம் ஆண்டு தொடங்கி, 2023 ஆம் ஆண்டு வரை பல நாடுகள் இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இது!
இதற்கு பல அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டுள் ளன. இந்த அறிக்கையை ‘‘Democracy Report 2024” என்ற தலைப்பில் கோதன்பர்க் பகுதியைக் கொண்ட அமைப்பான V.Dem Institute என்ற ஆய்வகம் தயாரித்து வெளியிட்டுள்ளது!
உலக ஜனநாயகத்தில் இந்தியாவுக்குள்ள இடம் 18 விழுக்காடே!
உலக ஜனநாயக நாடுகள் நான்கு வகையாக வரிசைப் படுத்தப்பட்டுள்ளன – இதன்படி ஆட்சிகள் எப்படி நடைபெறுகின்றன என்று அளவுகோலை வைத்து இந்த நான்கு வரிசை உருவாக்கப்பட்டுள்ளது!
1. விரிவான பரந்த ஜனநாயகம்
2. தேர்தல் ஜனநாயகம்
3. தேர்தல் எதேச்சதிகாரம்(Electoral Autocracy)
4. வெளிப்படையற்ற ‘‘மூடப்பட்ட” ஜனநாயகம் (Closed Democracy)
உலக ஜனநாயகத்தில் 18 விழுக்காடு பெற்றுள்ள இந்திய ஜனநாயகம் – இதில் உலக நாடுகள் பகுதிக்குமேல் எதேச்சதிகாரத்தின் கீழ்தான் வாழ்கின்றனர்!
கருத்து – பேச்சு சுதந்திரம், ‘சுத்தமான’ ஊழலற்ற தேர்தல், கூடிப்பேசும் சுதந்திரம் ஆகிய மூன்றும் பறிக்கப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட கொடிய நிலை.
இதில் இந்தியாவில் முந்தைய நெருக்கடி காலத்தில் பறிக்கப்பட்ட சுதந்திரத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
மோடிக்கு வாக்களித்தால்…
எச்சரிக்கிறது ஆய்வறிக்கை!
நம் இந்தியாவைப்பற்றி இவ்வறிக்கை கூறுவதாவது:
‘‘மூன்றாவது தடவை தொடர்ச்சியாக மோடி தலைமைக்கு வாக்களித்தால், ஏற்கெனவே சீரழிந்து, கீழிறங்கிய ஜனநாயக உரிமைகள் மேலும் தொடர்ந்து முழுமையான எதேச்சதிகாரத்திற்கே வழிவகுக்கும்.
சிறுபான்மையினர் உரிமைகளும், சிவில் உரிமைகளும் ஏற்கெனவே பறிக்கப்பட்டுள்ளன.”
இவ்வாறு அறிக்கை கூறுகிறது!
இதற்கு விளக்கம் – ‘‘ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்” என்ற பழமொழிக்கொப்ப நேற்று (11-3-2024) நாட்டு மக்கள் பா.ஜ.க. தவிர மற்ற மற்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமலாக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ. என்கிற புதிதாகத் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் ஆகும்!
1. அசாம் போன்ற மாநிலங்களில் இப்போதே பெருமளவில் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்கள் கிளர்ச்சியாக வெடிக்கத் தொடங்கியுள்ளன!
‘வேண்டாம் மோடி!’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் முழக்கம்!
2. விவசாயிகளுக்கு முன்பு மோடி கொடுத்த கியாரண்டி – உத்தரவாதங்களை செயல்படுத்த வற்புறுத் தும் விவசாயிகளைத் தடுப்பது, தடியடி, கண்ணீர்ப் புகை பிரயோகம், சாவு இவைதான் கியாரண்டியைக் கேட்ப வர்களுக்குப் பரிசு.
எனவே, நமது முதலமைச்சர் கொடுத்த முழக்கம் – ‘வேண்டாம் மோடி'(அரசு) என்பதே ஓங்கும் – ஓங்கவேண்டிய முழக்கமாகும்!
ஊழல் முகமூடிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்மூலமும் கழற்றப்படும்வேளை – மரணப் படுக்கையில் உள்ள ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும், மதச்சார்பின்மை யும் காப்பாற்றப்படுவதற்கு ஜனநாயகத்தைக் காப்பாற்ற ‘‘வேண்டாம் மோடி (அரசு)” என்பது எங்கெங்கும் ஒலிக்கட்டும்!
ஜனநாயகம் காக்க ஒரே குரலில் ‘‘வேண்டாம் மோடி” என்பதே நாட்டின் பெருமுழக்கமாகட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12-3-2024
No comments:
Post a Comment