ஜில்லா ஜட்ஜுகள் பிராமணர்கள்;
சப் ஜட்ஜுகள் பிராமணர்கள்;
ஜில்லா முனிசிப்புகள் பிராமணர்கள்;
கலெக்டர்கள் பிராமணர்கள்;
டிப்டி கலெக்டர்கள் பிராமணர்கள்;
அட்வகேட் ஜெனரல் பிராமணர்;
அரசாங்கக் காரியதரிசிகள் பிராமணர்கள்;
கைத்தொழில் இலாக்கா டைரக்டர் பிராமணர்.
இன்னமும் 1000, 2000, 3000 ஊதியம் உள்ள எந்த இலாகாவை எடுத்துக் கொண்டாலும் பிராமணர்கள் பெரும்பான்மையாய் நிறைந்து கொண்டு பனகால் ராஜா அப்படிச் செய்தார், பாத்ரோ இப்படிச் செய்தார், சிவஞானம் பிள்ளை ஒன்றும் செய்யவில்லை என்பதாக வலியார் வைத்துத் தூற்றிக் கொண்டு பொது ஜனங்களையும் ஏமாற்றி இவர்களைச் சர்க்காருக்குக் காட்டிக் கொடுத்து அங்கும் உத்தியோசம் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.
இதை அறியாமல் சில பிராமணரல்லாதார் இந்தப் பிராமணர்கள் தின்று கழித்த எச்சிலையைத் தங்களுக்குப் போட மாட்டார்களா என்று அவர்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியே நடந்து கொண்டிருந்தால் பிராமணரல்லாதார் கதிதான் என்னாவது?
இதை ஒருவரும் கவனிப்பாரில்லையே.
நம்மைச் சிலர் உத்தியோக ஆசை பிடித்தவர் என்று சொன்னாலும் சரி, ஒத்துழைப்பவன் என்று சொன்னாலும் சரி, ஜஸ்டிஸ் கட்சிக்காரன் என்று சொன்னாலும் சரி.
இவ்விதம் ஒரு வகுப்பு நம்மைத் ‘தீண்டாதார்’, ‘வேசி மக்கள்’ என்று சொல்லிக் காலில் வைத்து அழுத்திக் கொண்டு அதிகாரங்களையும் பதவிகளையும் பெற்றுக் கொணடு போக, மற்றவர்கள் கீழே போய்க் கொண்டிருப்பதென்றால், இது பிராமணரல்லாத சமூகத்திற்கே அவமானகரமான காரியம் என்றே சொல்லுவோம்.
அதிலும் நமது சர்க்காருக்கும் பிராமணரல்லாதார் என்றால் மிகவும் அலட்சியமாய் மதிக்கும்படியாகிவிட்டது.
இதற்குப் பிராமணரல்லாதாரிலேயே பிராமணர்களுடன் சுற்றித் திரியும் சில சமூகத் துரோகிகள் காரணமாயிருந்தாலும், பிராமணரல்லாதாருக்குள்ளும் சில கட்டுப்பாடுகளும் ஒற்றுமையும் தேவையிருக்கிறது.
கடுகளவு தியாக புத்தியோடு பிராமணரல்லாதார் கலந்து வேலை செய்வார்களானால் இந்தச் சர்க்காரை ஆட்டி வைக்கலாம்.
ஆனாலும் நமது பிராமணர்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
என்றாலும், இது முடியாத காரியமல்ல. நமது பாமர ஜனங்களுக்கு நாம் செய்ய வேண்டிய பிரச்சாரம் எவ்வளவோ பாக்கியிருக்கிறது.
பிராமணரல்லாதார்களுக்கு இனி ஒவ்வொரு வினாடியும் மிகுந்த விலை உயர்ந்ததாகும். ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் இனி உறங்கக் கூடாது.
மகாத்மாவின் நிர்மாணத் திட்டமாகிய கதர், தீண்டாமை விலக்கு ஆகிய இரண்டுமே பிராமணரல்லாதாரின் ஜீவநாடியாகும். இதன் மூலமாகத்தான் கடைத்தேற முடியும்.
உத்தியோக வேட்டையில் பிராமணரைப் பின்பற்றும் பிராமணரல்லாதாருக்கு இதன் மகிமை தெரியாது.
ஆதலால் உண்மை பிராமணரல்லாதாரே! எழுங்கள்!!
கிராம பிரச்சாரம் செய்யுங்கள்!
கிராமமெங்கும் “திராவிட”னையும் “குடிஅரசை”யும் பரவச் செய்யுங்கள்.
– ‘குடிஅரசு’ – 23.5.1926 – தலையங்கம்,
தொகுதி 2 – ப.292
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
No comments:
Post a Comment