கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,பிப்.8- திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு Ôஉங்களில் ஒருவன்Õ தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாவது,
விமானத்திலிருந்து கடிதம்
மேகங்களின் மீது மிதப்பது போன்ற உணர்வுடன், வானில் பறக்கின்ற விமானத்திலிருந்து இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன்.
ஸ்பெயின் நாட்டுப் பயணத்தை நிறைவு செய்து, நெஞ்சத்தில் தேங்கியிருக்கும் நினைவுகளுடன் தமிழ்நாட்டுக்குத் திரும்பும் நிலையில், தரையிறங்குவதற்கு முன்பாக என் இதயத்தில் உள்ளவற்றை அன்பு உடன் பிறப்புகளான உங்களிடம், உங்களில் ஒருவ னான நான் இறக்கி வைத்துவிட வேண்டும் என்ற பேரன்பின் வெளிப்பாடே இந்த மடல்.
ஜனவரி 28 அன்று தொடங்கிய பயணத்திலிருந்து பிப்ரவரி 7-ஆம் நாள் தாய்மண் திரும்பும் வரையிலான பயண நாட்களின் எண்ணிக்கை பத்து. அதில் கிடைத்திருப்பது தமிழ்நாட்டிற்கான முதலீடு எனும் முத்து.
2021 மே 7-ஆம் நாள், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல், தமிழ்நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கி, முந்தைய பத்தாண்டுகாலத்தில் படுபாதாளத்தில் தள்ளப்பட்ட பொருளாதார நிலையைச் சீர் செய்வதே திராவிட மாடல் அரசின் முதன்மை நோக்கமாக அமைந்தது.
ரூ.3440 கோடி முதலீடு
ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொரு ளாதார வளர்ச்சி இலக்குக்கேற்ப, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 2022-ஆம் ஆண்டில் அய்க்கிய அரபு நாடுகளில் துபாய், அபுதாபி ஆகிய இடங்களுக்கான பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
2023-ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்தேன். 2024-இன் தொடக்கத்தில் அய்ரோப்பாவின் நான்காவது பொருளாதார நாடான ஸ்பெயின் நாட்டி லிருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க் கும் நோக்கத்துடன் பயணத்தை மேற் கொண்டேன்.
இங்கு மொத்தம் 9 நிறுவனத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதன் பலனாகவும், தமிழ்நாடு அரசின் தொழிற் கட்டமைப்பின்மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் போடப் பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன.
பனி மூட்டத்தை விலக்கிக் கொண்டு சூரியக் கதிர்கள் வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஸ்பெயின் நாட்டின் அதிகாலைப் பொழு தினைப்போல, தமிழ்நாட்டின் தொழில் துறையில் முன்பு சூழ்ந்திருந்த இருளும் பனியும் விலகி, வெளிச்சக் கதிர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் அரசின் அயராத முயற்சியினால் பாயத் தொடங்கியிருக்கின்றன.
வெறுப்பை விதைத்துத் தேர்தல் இலாபம் தேடும் அரசியல் இல்லை
டொலிடோ நகரத்தின் அழகை இரசித்த துடன், அதன் பழைமைமிக்க வரலாற்றுச் சிறப்பையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘மூன்று பண்பாடுகளின் நகரம்’ என்ற சிறப்புப் பெயர் டொலிடோவுக்கு உண்டு. முதலில் யூதர்கள், பிறகு கிறிஸ்தவர்கள், அதன்பின் முஸ்லிம்கள் என மூன்று மதங்களைச் சார்ந்த மன்னர்களின் படையெடுப்பு நிகழ்ந்திருந் தாலும், மூன்று மதங்களின் மக்களும் அவரவர் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு, ஒற்றுமையாக வாழ்ந்த – வாழ்ந்து வருகிற பெருமை டொலிடோ நகரத்திற்கு உண்டு. கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் ரோமானிய அரசாட்சியின் அரண்மனையாக இருந்த இந்தக் கோட்டை, 15-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னரால் மீண்டும் பொலிவு பெற்றுள்ளது. பழைமை மாறாத கோட் டையும், அதன் மதில்களும் டொலிடோ நகரத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. தொன்மை மாறாத கட்டடக்கலைகளைக் காப்பாற்றி, அடுத்த தலைமுறையினருக்குக் கலைச்செல்வமாக ஒப்படைக்கும் தொலை நோக்குப் பார்வையை அந்நாட்டில் காண முடிந்தது.
வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இன்றைய ஆட்சியாளர்கள் அதை இடித்துத் தகர்த் திடவும் இல்லை, மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்துத் தேர்தல் இலாபம் தேடும் அரசியலும் அங்கு இல்லை. மூன்று மதத்தினரின் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நகரமாக டொலிடோ இன்றும் திகழ்வதைக் காண முடிந்தது. இந்தப் பண்பாட்டுப் பெருமையும் பன்முகத்தன்மையும்தான் இந்தியாவுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியது என்பதை நாம் மறந்துவிட முடியுமா?
கோட்டைகள் போலவே பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரிய ஆலயங்களான கதீட்ரல்களும் பழைமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் கட்டிய கோயில்கள் பலவும் திராவிடக் கட்டடக் கலையின் சின்னங்களாக விளங்குவதுபோல, அய்ரோப் பியக் கட்டடக் கலையின் அடையாளங்களாக இந்த ஆலயங்கள் திகழ்கின்றன.
அருங்காட்சியகம்
வரும் வழியில், “இது என்ன இன்னொரு கோட்டை?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். “இது கோட்டை அல்ல, பிராடோ மியூசியம்” என்று தெரிவித்தனர். ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக 1819-ஆம் ஆண்டில், அரண்மனை போன்ற இந்த அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது. 12-ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் பிராடோ அருங் காட்சியகம் அமைந்துள்ளது.
நாங்கள் அங்கே சென்றிருந்தபோது இளைய தலைமுறையினர் பலரும் அருங் காட்சியகத்தைப் பார்வையிடுவதைக் காண முடிந்தது. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு. நாம் அதனைச் சொல்லத் தவறியதால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம், நம் வரலாற் றைத் திரிக்கும். பண்பாட்டைச் சிதைக்கும். மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும். வதந்திகளைப் பரப்பும். அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்தும்.
விரட்டி அடிப்பார்கள்
உண்மை வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொண்டால்தான், வரலாற் றைச் சிதைக்க நினைக்கும் வதந்தியாளர் களை, அவர்கள் தங்களின் வாக்குரிமையால் விரட்டி அடிப்பார்கள். அடுத்தடுத்த தலை முறையினருக்கும் ஆபத்துநேராமல் தடுப் பார்கள்.
வெற்றிக்கான வியூகம்
நம்முடைய உடனடி களப்பணி என்பது நாடாளுமன்றத் தேர்தல் களம்தான். அதற்காக அமைக்கப்பட்ட மூன்று குழுக் களுமே தங்களுடைய பணியைத் தொடங்கி, சிறப்பாகத் தொடர்வதை அறிந்து கொண் டேன். தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நடத்தும் குழு முதல் சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நல்லமுறையில் நிறைவு செய்துள்ளது.
தி.மு.க.வினரின் தேர்தல் பணிகளை ஒருங் கிணைக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து அண்ணா அறிவாலயத்தில் விரிவான ஆலோசனை நடத்தி, கள நிலவரத்தை எடுத்துரைத்து, வெற்றிக்கான வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறது.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக் களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. தலைமையின் சொல்லை உத்தரவாக – கட்டளையாக ஏற்றுச் செயல்பட்டு வருவது மகிழ்வைத் தருகிறது. இது எப்போதும் தொடர வேண்டும்.
ஓயாமல் உழைக்கக்கூடியவன்
உங்களில் ஒருவனான நான் எளியவன். உங்களால் வழங்கப்பட்ட கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவன். அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரிடம் கற்றுக்கொண்டதை வைத்து ஓயாமல் உழைக்கக்கூடியவன். இந்த இயக் கத்தைத் தோளிலும், அதன் தொண்டர்களை நெஞ்சத்தில் சுமந்து பயணிப்பவன். உங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் இடம் பெற்றிருக்கும் உங்களில் ஒருவன். தலைவன் வெளிநாடு சென்றிருந்தாலும், தலைமையின் உத்தரவை நிறைவேற்றுவோம் என்கிற இந்த உணர்வும், தி.மு.க.வினர் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் ஒற்றுமையும் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்திட முடியாது.
தேர்தல் களத்தில் வெற்றி
தனிப்பட்ட என்னுடைய – உங்களுடைய மகிழ்ச்சியைவிட, இந்தியாவின் ஜனநாயகத் திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தகர்த்து நாட்டைக் காப்பாற்றும் போது ஏற்படும் மகிழ்ச்சியே முதன்மையானது.
ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும். தமிழ் நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்!
-இவ்வாறு அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment