திரைப்படப் பாடல்களில் தந்தை பெரியாரின் சிந்தனைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

திரைப்படப் பாடல்களில் தந்தை பெரியாரின் சிந்தனைகள்!

featured image

எம்.ஆர்.மனோகர்

பெரியார் சிந்தனைகள் வெளிப்பட்ட திரைப்படங்கள் பற்றி இதற்கு முன்பே ஒரு ஞாயிறு மலரில் எழுதியிருந்தோம். இந்த இதழில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் வெளிப்பட்ட பெரியார் சிந்தனைகள் குறித்து பேசுவோம் வாருங்கள். பல புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் மட்டுமே அல்ல, உச்சத்தைத் தொட முடியாமல் கால வெள்ளத்தில் கரைந்துப் போன சில மறக்கப்பட்ட கவிஞர்கள்கூட தங்கள் பாடல்களில் பதிவு செய்துள்ள கருத்துகள் நமக்கு பெரியார் சிந்தனைகளை நினைவூட்டுவது வியப்பளிக்கிறது. பட்டியலிட்டால் ஒரு இதழ் போதாது. சில பாடல்களையாவது கவனிப்போமா?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆவேசமாக குரல் கொடுத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
“பகலும் இரவும்மாடாய் உழைத்து
பட்டினி கிடந்து ஓடாய் இளைத்து
பயந்து பயந்து காலங்கழித்து
நலிந்த எளியோரை வலியவர் பார்த்து
போன ஜென்மத்தின் வினையென்றும்
விதியென்றும் சொல்லி வச்சாங்க – அவங்க
பொழச்சிக்கிட்டாங்க – அதைப்
புரிஞ்ச மக்களும் நல்ல சமயத்தில்
முழிச்சிக்கிட்டாங்க – ஆமாம்
முழிச்சிக்கிட்டாங்க” (படம்: “புதுமைப்பெண்”)
மூடநம்பிக்கைகளையும் இதன் மூலம் சாடியுள்ளார்.
“திருடாதே” படத்தில் “திருடாதே… பாப்பா திருடாதே…” என்று துவங்கும் பாட்டில்.
“கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது” என்கிறார்.
தன் பாடல்கள் பலவற்றை முற்போக்குச் சிந்தனைகளை முழங்கவே பயன்படுத்திய பட்டுக்கோட்டையார். உலக மக்களின் சுயநலப் போக்கை “பதிபக்தி” படப்பாடல் ஒன்றில் இவ்வாறு வெளிப்படுத்தினார்.
“இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டுநீ
ஒருநாளும் நம்பிடாதே”
“நாடோடி மன்னன்” பாடல் ஒன்றில் பாடுபடும் பாட்டாளி வர்க்கத்தின் வலியையும் தன்னம்பிக்கையையும் இந்த வரிகள் உணர்த்துகின்றன.
“காடு வௌஞ்சென்ன மச்சான் – நமக்கு
கையும் காலும்தானே மிச்சம்?” என்று மனைவி கேட்க,
“காடு வெளையட்டும் பெண்ணே – நமக்கு
காலமிருக்குது பின்னே” என்கிறான் கணவன்.
“அரசிளங்குமரி” படப் பாடலில்
“தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா” என்று ஆவேசமாய் முற்போக்கு முரசு கொட்டி சமூகச் சீர்திருத்தத்திற்கு விதை விதைத்துள்ளார். அதே பாடலில் –
“வேப்பமர உச்சியில் நின்னு
பேய் ஒன்னு ஆடுதென்று
விளையாடப் போகுபோது சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே…”
என்று மூடநம்பிக்கைகளைத் தாக்கியுள்ளார் பட்டுக்கோட்டையார்.
“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் கலைஞர் வாலி

“ஏன் என்ற கேள்வி – இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்றும்,
“பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே” என்கிறார்.
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக வைரமுத்து
“புதுமைப் பெண்”ணில் எழுதியுள்ளார்.
“புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்
நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது
பெருவிரல் துடைத்து விடும்” என்று.
“பச்சை விளக்கு” படப் பாடலை யாரால் மறக்க முடியும்?

“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர்
என்பது மாறாதோ…?”
இன்று ஒருவன் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு…!”
“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே…
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய் வரலாம்”
என்கிறது “சாந்தி நிலையம்” படப் பாடல்.
போய் வந்து விட்டோமே! தந்தை பெரியாரின் “இனி வரும் உலகம்” அல்லவா நினைவூட்டப்படுகிறது?
“நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான். இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான். நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்…”
இவை கண்ணதாசன் எழுதிய வரிகள்-
“ஒன்று எங்கள் ஜாதியே… “ என்று துவங்கும் பாடலில். படம் “பணக்கார குடும்பம்” (1964).
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய “நல்ல தம்பி” படப் பாடல் காலத்தால் அழியாதது.
“விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி…”
அஞ்ஞானத்தை அழிக்கப் போறேண்டி…”
அந்தப் பாடல் முழுவதுமே பெரியார் சிந்தனைகள்தான்.
“பட்டனைத் தட்டி விட்டா
தட்டில ரெண்டு இட்லியும்
காப்பி நம்ம பக்கத்தில் வந்துடணும்…
இப்படி பலப்பல கனவுகள். இன்று நனவானவை.
1958இல் வெளிவந்த “நாடோடி மன்னன்” படத்தில் லட்சுமணதாஸ் என்ற பாடலாசிரியர் எழுதியுள்ளார்.
“கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதிலேதான் இன்பம் என் தோழா…” என்று.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி அவசியம் என்று பெரியார் வலியுறுத்தியது நினைவுக்கு வராதா?
கே.ஆர்.ராமசாமி நடித்த “செல்லப்பிள்ளை” படத்தில் ஒரு பாடல்-
“… இதம் பல பேசி எலக்ஷன் ஜெயிக்கிறான்
பதவிக்கு வந்ததும் பச்சோந்தியாகிறான்…”
எழுதிய கவிஞர் உடுமலை நாராயணகவி.
கு.சா.கிருஷ்ணமூர்த்தி என்ற பாடலாசிரியர்

“எளியோரைத் தாழ்த்தி
வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா?”
படம்? “தை பிறந்தால் வழி பிறக்கும்” (1958).
துப்புரவுப் பணியில் ஈடுபடும் பெண் பாடுகிறாள் –
“ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்க
ரொம்பத் தாழ்ந்தவங்க – ஆனா
நாங்கதான் இல்லேன்னா
எந்த வேலைதான் ஆகுமுங்க?…”
“புதுயுகம்” என்ற 1954ஆம் ஆண்டின் படத்திற்காக இப்படி எழுதியவர் கா.மு.ஷெரீஃப்.
“குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்…
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலைநிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா…”
என்று மருதகாசி எழுதினார். “நீலமலைத் திருடன்” (1957) படத்திற்காக. சுயமரியாதையை வலியுறுத்திய பெரியாரின் நினைவுகள் வராதா இந்தப் பாட்டைக் கேட்டால்?
எல்லோருக்கும் எல்லாம் என்று முழங்கினார் பெரியார். “கறுப்புப் பணம்” (1964) படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் அதைத்தான் சொன்னார்.
“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை – நீங்கி
வரவேண்டும் இந்நாட்டில் பொதுவுடமை…” என்று.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் “தூக்கு மேடை” என்ற படப் பாடல் ஒன்றில்-
“எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்றார் பாட்டிலே
எங்கள் மக்கள் வாழ்கிறார் மண்ணாங்கட்டி வீட்டிலே…”
என்று நலிவுற்ற மக்களின் வலியைப் பதிவு செய்தார்.
இசை – சங்கர் கணேஷ். பாடியவர்கள் – ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்.
ஆலங்குடி சோமு “விளக்கேற்றியவள்” (1965) என்ற படத்திற்காக எழுதிய பாடல் –
“கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு…
….” ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு – உன்னை
அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதைவிடு”…
பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் பெரியாரின் சிந்தனையை இது வெளிப்படுத்திற்கு. இசை டி.ஆர்.பாப்பா, எம்.ஜி.ஆர். நடித்த பாடல் காட்சி இது. அவர் நீக்கப்பட்ட பின் ஆதித்தன் எனும் நடிகரை வைத்து படமாக்கப்பட்டது.
வலைதளத்தில் எம்.ஜி.ஆர் வாயசைப்புடன் உள்ள முழு பாடல் காட்சியையும் பார்க்க முடியும். திரையில் எவரும் பார்க்கவில்லை.
பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்து “கூண்டுக்கிளி” (1954) படத்திற்காக விந்தன் எழுதினார்.
“கொஞ்சும் கிளியான பெண்ணைக்
கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா? தப்பா? – என்று.
இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனும் திரைப்படங்களுக்கு பல பாடல்கள் எழுதியிருப்பது பலருக்குத் தெரியாது. “பிரசிடெண்ட் – பஞ்சாட்சரம்” படத்தின் ஒரு பாடலில் அவர் எழுதிய வரிகள்.
“பட்டதாரி கூட்டத்திற்கு வேலையில்லை – உழைக்கும்
பாட்டாளி கூட்டத்திற்கு மதிப்பும் இல்லை!
கெஞ்சிக் கேட்டாலும் கொடுக்கிற மனுஷரில்ல – இவரை
கீழோராய் மதிப்பதில் தவறுமில்லை…”
இப்படித்தான் பல திரைப்படப் பாடல்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் புதைந்துள்ளன – வைரக்கற்கள் போல்.

No comments:

Post a Comment