தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதான் தரவில்லை – ஆறுதல் வார்த்தைகளாவது சொன்னாரா?
பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி!
தோல்வி பயம் வந்துவிட்டது பிரதமர் மோடிக்கு –
வெற்றி பெறப் போவது ‘இந்தியா’ கூட்டணியே!
சாக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
சாக்கோட்டை, பிப்.29 தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக் களுக்கு நிவாரண நிதி தராவிட்டாலும், ஆறுதல் வார்த்தைகளையாவது சொன்னாரா? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால், எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கும். வரும் தேர்தலில் பி.ஜே.பி. தோற்பது உறுதி – ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றே தீரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (28-2-2024) சாக்கோட்டைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
எம்.ஜி.ஆரையும் – ஜெயலலிதாவையும்
பிரதமர் மோடி திடீரென்று புகழ்வது ஏன்?
செய்தியாளர்: முன்பு, பிரதமர் மோடி தமிழ் நாடு பின்தங்கி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று இன்றைக்குத் தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவர், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் திடீ ரென்று புகழ்ந்து பேசுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அவருக்குத் தோல்வி தமிழ்நாட்டில் நூறு சதவிகிதம் உறுதி என்பதை அவருடைய பயணத்தில் உணர்ந்துவிட்டார்.
அதனுடைய அறிகுறி, அதனுடைய எதிரொலி தான் அவருடைய குழம்பிய பேச்சாகும்.
கடைசி நேரத்தில் இப்படி சொன்னாலாவது வாக்கு கள் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார். ஏனென்றால், அவருடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மோடி ஆட்சியினால் வேதனைதான் மிஞ்சியிருக்கிறதே தவிர, சாதனை ஏதுமில்லை என்று அவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.
அப்படியே அவர் இவற்றைச் சொன்னாலும், தமிழ்நாட்டில் அது எடுபடாது. ஆகவேதான், ரயில்வே ஸ்டேஷன் ரிப்பேரையெல்லாம் கணக்கில் காட்டுகிறார். கதவு போட்டது, வாசற்படி வைத்தது – அதற்காக நாங்கள் எத்தனைக் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம் பாருங்கள் என்கிறார்.
மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்காக ஒரு செங்கல்லை மட்டும் வைத்துவிட்டுப் போனார்கள். அந்தத் திட்டம் இதுநாள் வரையில் நிறைவேற்றப்படவில்லை.
இராமன் பாலம் என்று சொல்லி
முட்டுக்கட்டை போட்ட பா.ஜ.க.வினர்!
ஒன்றியத்தில் கடந்த ஆட்சியில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கி, அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு இன்னும் 23 கிலோ மீட்டர்தான் மீதமுள்ளது என்ற நிலையில், இவருடைய கட்சியான பா.ஜ.க.வினர் இல்லாத இராமன் பாலத்தைச் சொல்லி, அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட் டனர்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியிலேயே, இராமன் பாலம் என்ற ஒன்று இல்லை என்பது தெளிவாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே சொல்லப்பட்டது.
கலைஞரும், சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகி யோராலும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு போன்றவர்களுடைய முயற்சியினாலும் தொடங்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை – பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய திட்டத்தை, தமிழ்நாடு பொருளாதாரம் மட்டுமல்ல; இந்தியாவின் பொருளாதாரம், தென்கிழக்கு ஆசியாவினுடைய பொருளாதாரம் வளரக்கூடிய ஒரு திட்டத்தை, நிறைவேற்றவிடாமல், கடைசி நேரத்தில் பாழாக்கினார்கள் பா.ஜ.க.வினர்.
இராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டனர்!
அத்திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தடை ஆணை பெற்ற பிறகும், அந்த வழக்கினை அவர்களால் நடத்த முடியவில்லை. காரணம், இராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள்.
அதற்குப் பிறகாவது, அவர்கள் கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்றினார்களா?
எந்தத் தூத்துக்குடி பக்கம் பிரதமர் மோடி போயிருக் கிறாரோ, அந்தத் தூத்துக்குடி பகுதி வளம்பெறும் திட்டம் – எந்தத் திருநெல்வேலிக்குச் சென்று மோடி முழங்கினாரோ, அந்தத் திருநெல்வேலி வளம் பெறும் திட்டம் அது.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து
ஓர் ஆறுதல் வார்த்தைச் சொல்லியிருக்கிறாரா?
குறைந்தபட்சம் மனிதாபிமானம் உள்ள ஒரு பிரதமராக இருந்தால், புயல், மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை – அதையும் குறைத்திருக் கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த புயல், மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஓர் ஆறுதல் வார்த்தைச் சொல்லியிருக்கிறாரா?
நிவாரண நிதி கொடுக்கிறாரா, இல்லையா என்பது வேறு; பாதிக்கப்பட்ட மக்களைச் சந் திக்கக்கூட அவருக்கு மனிதாபிமானம்கூட இல்லையே!
மனிதாபிமானம் இல்லாதவர்களை தமிழ்நாடு எப்படி நடத்தும் என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.
இவர்கள் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. பிரிந்தது என்பதற்கு என்ன காரணத்தைச் சொன்னார்கள்? யார் காரணம் என்று சொன்னார்கள்?
இது இப்படி இருக்கையில், திடீரென்று பிரதமர் மோடி இன்றைக்கு எம்.ஜி.ஆர். ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சி என்று சொல்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலின்போது பிரச் சாரத்திற்கு வந்தபொழுது மோடி என்ன சொன்னார்?
அ.தி.மு.க. ஊழல் ஆட்சி என்று பிரதமர் மோடியும் சொன்னார், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொன்னார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதே!
‘நோட்டா’வைவிட கூடுதலாக வாக்குகள் வாங்குவதற்காக, இப்படியொரு உத்தி!
அவர்களுடைய நிலை இப்பொழுது என்ன வென்றால், ‘நோட்டா’வைவிட கூடுதலாக வாக்குகள் வாங்குவதற்காக, இப்படியொரு உத்தி யைக் கையாண்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப் பாராட்டினால், வாக்குகள் கிடைக்காதா? என்பதால்தான்.
எனவே, இதன்மூலமாக தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஏமாற்றத்தை அவர் சந்தித்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகின்றது.
யாத்திரை, பாத யாத்திரை, நீதி யாத்திரைகளால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் உண்மை. பி.ஜே.பி.யினுடைய இறுதி யாத்திரைக்குத் தமிழ் நாடு வழிகாட்டும்.
மே மாதத்தில் ஒன்றியத்தில்
ஆட்சி அமைக்கப் போவது
இந்தியா கூட்டணிதான்!
புதுவை மற்றும் தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங் களிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி உறுதி. இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, மே மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது இந்தியா கூட்டணிதான் என்பதில் சந்தேகமேயில்லை.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி – அகிலேஷ் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில், டில்லியிலும் இந்தியா கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அவர்களின் அரசியல் கணக்குத்
தப்புக் கணக்காக ஆகிவிட்டது
யார் யாரையெல்லாம் பிரித்து, இந்தியா கூட்டணியை உடைத்து, நாம் சுலபமாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று அவர்கள் அரசியல் கணக்குப் போட்டார்களோ, அந்த அரசியல் கணக்குத் தப்பாக ஆகிவிட்டது. அதனை பிரதமர் மோடி புரிந்துகொண்டார்.
ஆகவேதான், என்ன செய்வது என்று புரியாமல், இப்படி ஏதாவது சொல்லிப் பார்க்கலாம் என்று சொல் கிறார். அதனால் ஒரு பயனும் இல்லை.
நாங்கள் (பா.ஜ.க.) 370 இடத்தில் வெற்றி பெறுவோம்; 470 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் கணக்குச் சொல்கிறார்கள். அது மக்களை ஏமாற்றுவதற் காகச் சொல்லுகின்ற தந்திரம் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஏனென்றால், தலைநகரமான டில்லியிலேயே இவர் களால் வெற்றி பெற முடியாது.
மோடியின் ”உத்தரவாதம், உத்தரவாதம்” என்று தொலைக்காட்சிகளில் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுக்கிறார்கள். அதனால் ஒரு பயனும் அவர்களுக்கு விளையப் போவதில்லை.
விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதனை எதிர்த்து ஓராண்டிற்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் நாட்டையே நிலைகுலைய வைத்தது.
விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா பிரதமர் மோடி?
அதனால் பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. அப்பொழுது சில வாக்குறுதிகளைக் கொடுத்தார் பிரதமர் மோடி.
குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுப் போம் – விவசாயிகளின்மீது போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்று.
ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதால், அரியானா, பஞ்சாப், சண்டிகார் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் ”டில்லி சலோ” என்று முழக்கமிட்டு, டில்லி நோக்கி வரத் தொடங்கியபொழுது, அவர்களைத் தடுப்பதற்காக முள்வேலி அமைத்து, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதுதான் பதிலா? இதில் 6 விவசாயிகள் பலியாகி இருக்கின்றனர்.
இதற்கு முன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்த லில் பா.ஜ.க. எத்தனை சதவிகித வாக்குகளை வாங்கி யிருக்கிறது தெரியுமா? 37 சதவிகித வாக்குகள்தான். மீதமுள்ள 63 சதவிகித வாக்குகள் அவர்களுக்கு எதி ராகத்தான் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சிக்கும் வாக்கு வித்தியாசம் மிக மிகக் குறைவுதான்.
இப்பொழுது எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஒன்றாக இணைந்துவிட்ட பிறகு, மோடிக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது, இதைத் தாண்டி அவரால் வெற்றி பெற முடியாது என்பது.
இருந்தாலும், பிரச்சாரத்தினால் எதையாவது செய்ய முடியுமா? என்பதற்காக, ‘கோயபல்ஸ்’ பிரச்சாரம் போன்று அவர் செய்து பார்க்கிறார், அதனால்தான் இந்தத் தடுமாற்றம் அவருக்கு.
400-க்கும் மேற்பட்ட இடங்களில்
இந்தியா கூட்டணி வெற்றி பெறும்!
செய்தியாளர்: இந்தியா கூட்டணி எத்தனை இடங் களைப் பிடிக்கும்?
தமிழர் தலைவர்: எத்தனை இடங்கள் என்றால், 400 இடங்களுக்குமேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
காரணம் என்னவென்றால், மக்கள் ஆதரவு இருப் பதினால்தான்!
ஆருடம் சொல்லவில்லை. ஆலமரத்து ஜோசியர் அல்ல நாங்கள் – ஜோதிடத்தை நம்புவர்கள் அல்ல நாங்கள். அறிவுப்பூர்வமாக இதனைச் சொல்கிறோம்.
காஷ்மீரில், மூன்று எதிர்க்கட்சிகளும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். உத்தரப்பிரதேசத்திலும் அப்படித்தான்.
இப்பொழுது நவீன முறையை பா.ஜ.க.வினர் கையாளுகிறார்கள்; அது என்னவென்றால், வெற்றி பெற்று வந்தவர்களை நாம் விலைக்கு வாங்கலாமா? என்று நினைக்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்கள், வருவார்கள் என்று நினைத்துத்தான் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வரமாட்டார்கள் என்பது தெளிவு.
இதேபோன்று வாஜ்பேயி, அத்வானியும் இரண்டாவது முறை தாண்டி வரக்கூடிய சூழ்நிலையில் என்ன சொன்னார்கள் என்றால், ”இந்தியா ஒளிர்கிறது”, ”இந்தியா ஒளிர்கிறது” என்று சொல்லி பிரச்சாரம் செய்தார்கள். அதேபோன்றுதான் இன்றைக்கும் பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்கிறார்கள்.
நாங்கள் சொல்வது அறிவுப்பூர்வமான கணக்கு – அரசியல் கணக்கு!
ஆனால், அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. நான் சொல்வது அறிவுப்பூர்வமான கணக்கு – அரசியல் கணக்கு. அரசியலுக்கு அப்பாற்பட்ட நாங்கள் உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல், ஆசாபாசங்கள் இல்லாமல் கணக்குப் போட்டுச் சொல்கிறோம்.
வடகிழக்குப் பகுதி, தென்னாட்டில் அவர்களுக்குக் கதவு சாத்தி நீண்ட நாள்கள் ஆயிற்று. அதனை பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டார்.
தென்னிந்தியாவில் பா.ஜ.க.விற்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது!
ஆந்திராவில் போக முடியவில்லை; தெலங்கானாவில் உள்ளே உழைய முடியவில்லை. கேரளாவில் முடியவில்லை; கருநாடகாவில் தோல்வியைத் தழுவினார்கள். தமிழ்நாடு என்பது எழுதப்பட்ட சுவரெழுத்து. ஆகவே, அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.
எனவேதான், தென்னிந்தியாவில் பா.ஜ.க.விற்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.
இதனால், அவருக்கு ஏற்பட்ட ஆத்திரம் எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால், மேடையில் அமர்ந்திருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரையோ, மாநில அமைச்சர்களின் பெயரையோ கூட அவர் சொல்வதற்குத் தயாராக இல்லை.
ஆத்திரம், அறிவுக்குத் தடையாக இருக்கிறது!
குறைந்தபட்ச அரசியல் நாகரிகம் என்னவென்றால், மேடையில் இருந்தவர் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர். அந்தத் துறையின் மாநில அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் பெயரை சொல்லவேண்டும். ஆனால், பிரதமர் மோடி சொல்லவில்லை. மற்ற நேரங்களில் மாநில அமைச்சர்களின் பெயரைச் சொல்லியிருக்கிறார். அவரின் ஆத்திரம், அறிவுக்குத் தடையாக இருக்கிறது.
ஆகவே, எந்த அளவிற்கு அவர் நிலை தடுமாறிப் போயிருக்கிறார் இந்தப் பயணத்தில் என்பதற்கு, இவையெல்லாம் சான்றாவணங்கள். இவையெல்லாம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.
கடைசியாக அவர்கள் திரிசூலத்தை நம்பியிருக்கிறார்கள். திரிசூலத்தில் ஒரு முனை – சி.பி.அய்.; இரண்டாவது முனை – வருமான வரித் துறை; மூன்றாவது முனை – அமலாக்கத் துறை.
நேற்றுகூட அகிலேஷ் யாதவ்மீது சி.பி.அய். விசாரணைக்கான சம்மன்.
அதேபோன்று, டில்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்படுகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.
ஆகவேதான், திரிசூலத்தை நம்பி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பேரவைத் துணைத் தலைவரே இல்லாத ஒரு ஜனநாயகத்தை உலகத்திலேயே மோடி அரசுதான் நடத்தியிருக்கிறது.
ஆகவே, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடுமைகளை இன்றைக்கு சாதாரண மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்; விவசாயிகளும் உணர்ந்திருக்கிறார்கள்; அறிவு ஜீவிகளாக இருக்கக்கூடியவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
கடைசி சம்மன் யாருக்கு? என்பதுதான்மிகவும் முக்கியம்!
இதனால், இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருப்பதால்தான், பிரதமர் மோடிக்குக் கோபமும், ஆத்திரம் எழுகிறது. அதனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலருக்கு சம்மன் வரும். ஆனால், கடைசி சம்மன் யாருக்கு என்பதுதான் மிகவும் முக்கியம்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment