ஒன்றிய பிஜேபி அரசு 10 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்ட நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையிலான அரசு கொட்டி அளப்பதில் மட்டும் பஞ்சமில்லை. ஆனால் செயல்பாடோ பூஜ்ஜியத்திற்கும் கீழேதான்.
ரயில்வே செயல்திட்டங்கள் மூன்றில் 225 மாதங்களுக்கும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு திட்டத்தில் மட்டும் 276 மாத கால தாமதம். அதாவது 23 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஒன்றிய அரசின் தகவலின்படி சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே சம்பந்தப்பட்ட செயல்திட்டங்களில் தான் குறிப்பாக அதிக காலதாமதம் ஏற்படுவதையும், செயல்பாடுகள் மிகவும் மந்தமான கதியில் இயங்குவதையும் அரசின் தகவல் வெளிப்படுத்துகிறது. 150 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களின் முன்னேற்றத்தையும், ஒதுக்கப்பட்ட தொகையை மீறிய செலவினங்களையும் ஆய்வு செய்யும் அரசு அறிக்கை அது.
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் தான் காலதாமதமாகும் பெரும்பாலான திட்டங்கள் உள்ளன. 717 செயல் திட்டங்களுள் 407 திட்டங்களில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதைப்போலவே 173 ரயில்வே திட்டங்களுள் 114இல் காலதாமதம். பெட்ரோலியத் தொழிலில் 146 செயல் திட்டங்களுள் 86இல் காலதாமதம். 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத உள்கட்டமைப்புகள் சார்ந்த திட்டங்கள் பற்றிய புதிய தகவல் அறிக்கை மூலம் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
அரசு வழங்கியுள்ள தகவல் அறிக்கையின்படி, முனீராபாத் – மெகபூப் நகர் ரயில்வே செயல்திட்டத்தை நிறைவேறுவதில் மிக அதிக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 23 ஆண்டுகளாக, 276 மாதங்களாக நிறைவேறாமல் உள்ள திட்டம் இதுதான். இதைத் தொடர்ந்து 247 மாதங்களாக நிறைவேறாமல் உள்ளது – ஊதம்பூர் பாரமுல்லா ரயில்வே திட்டம். இரட்டை வழித்தடம் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு கொண்ட பேலாபூர் ரயில்வே திட்டம், அதற்குரிய காலத்தைக் கடந்து 228 மாதங்களாக நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது.
ஏறத்தாழ 823 செயல்திட்டங்களில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 346 திட்டங்களில் செலவினங்கள் திட்டமிடப்பட்ட வரம்பை மீறியவையாக உள்ளன. 242 திட்டங்களில் காலதாமதம் மட்டுமின்றி வரம்புக்கு அதிகமான செலவு ஏற்பட்டுள்ளதையும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திட்டமிடப்பட்டதற்கு மாறாக காலதாமதமும், செலவினங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனவரி மாதமே நிறைவேறியிருக்க வேண்டிய 159 செயல்திட்டங்களில் மேலும் அதிக காலதாமதம் நேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 159 செயல்திட்டங்களுள் 38 திட்டங்கள் மிகப்பெரிய திட்டங்களாகும். அவற்றின் மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும்.
தகவல் அறிக்கையின்படி, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை சார்ந்த செயல்திட்டங்கள் 717.
இவை துவக்கப்பட்டபோது ரூபாய் 3,97,255.47 கோடி ஒதுக்கப்பட்டது. பிறகு இதுவே ரூபாய் 4,14,400.44 கோடியாக மதிப்பிடப்பட்டது. மதிப்பு உயர்வு 4.3 சதவிகிதம் என்று கூறப்பட்டது.
பிப்ரவரி 2023 வரை இந்த திட்டங்களுக்கென செலவிடப்பட்ட தொகை ரூ.2,33,007.06 கோடி திட்டமிடப்பட்ட தொகையின் 56.2 சதவிகிதம் இது.
திட்டங்களில் கால தாமதம் ஒருபுறம் – கால தாமதத்தால் செலவினம் கூடுதல் – பல மடங்கு மக்களின் வரிப் பணம் பாழ் – இவற்றிற்கெல்லாம் பொறுப்பு ஏற்றே தீர வேண்டியது மோடி தலைமையிலான ஒன்றிய பிஜேபி அரசே!
‘வாயால் வடை சுடுவது என்பார்களே – அது நூற்றுக்கு நூறு துல்லியமாகப் பொருந்துவது இன்றைய ஒன்றிய பிஜேபி அரசுக்கே!
வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் கவனமாக இருந்து பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை – இல்லவே இல்லை.
No comments:
Post a Comment