விலங்குகளின் உலகங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவை தங்களுடைய சுற்றுப் புறத்தை எவ்வாறு பார்க்கின்றன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் நமது கண்களுக்குத் தெரிவது மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டுள்ளோம்.
ஆனால், மனிதக் கண்களால் பார்க்க முடியாத அகச் சிவப்புக் கதிர்களையும், புற ஊதா கதிர்களையும் சில விலங்கு, பறவை, பூச்சி இனங்களால் பார்க்க முடியும் என்பதால் அவை உலகத்தைப் பார்க்கும் விதமே வித்தியாசமாக தான் இருக்கும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சூசக்ஸ் பல்கலையும், அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் பல்கலையும் சேர்ந்து விலங்குகளின் கண்களுக்குத் தெரிவது போலவே படம் எடுக்கும் ஹார்டுவேர்களையும் சாப்ட்வேர்களையும் உருவாக்கி இருக்கின்றனர். சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், வனவிலங்கு புகைப்பட ஆர்வலர்கள் ஆகியோர் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வவ்வால், கொசுக்களுக்கு அகச்சிவப்புக் கதிர்கள் தெரியும். சில பறவைகள், பட்டாம்பூச்சிகள் ஆகிய வற்றால் புற ஊதா கதிர்களை காண முடியும். இந்தப் பார்வை சக்தியின் உதவியால் தான் அவற்றால் தங்கள் இரையைக் கண்டுபிடிக்கவும், பயணம் செய்யவும், இணைகளைத் தேடி அறியவும் முடிகிறது.
இதை மனத்தில் வைத்து கேமராவும் மென்பொருளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமரா நீலம், பச்சை, சிவப்பு, புற ஊதா கதிர்கள் ஆகிய அனைத்து ஒளிகளிலும் படம் எடுக்கும். படம் எடுத்த பின்னர் ஒவ்வொரு விலங்கிற்கும் எப்படித் தெரியும் என்பதற்கு ஏற்ப மென்பொருள் கொண்டு படங்கள், காணொலிகள் உருவாக்கப்படும்.
இதைப் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட் படுத்திப் பார்த்தனர். அதில் ஒன்றாக, மயிலின் தோகையை எடுத்து அது மனிதர்கள், நாய், தேனி, பெண் மயில் ஆகியவற்றுக்கு எவ்வாறு தெரிகிறது என்பதைப் படம் எடுத்தனர்.
இது 95 சதவீத துல்லி யத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வும் பி.எல்.ஓ.எஸ்., பயாலஜி என்கின்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment