திருமங்கலம் தாலுகா தே.கல்லுப்பட்டியில் ஒரு சத்திரம் நீண்ட காலமாய் இருந்து வருகின்றது. அந்தச் சத்திரத்தில் நாளொன்றுக்கு 8 பேர்களுக்கு சாப்பாடு போட வேண்டுமென நியதி இருக்கின்றது. அந்தச் சாப்பாட்டுச் சீட்டுகள் இதற்குமுன் பெரிய தனக்காரர் கிராம முன்சீப் அல்லது கர்ணம் இப்படிப் பொறுப்பு வாய்ந்த மனிதர்களால் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது சீட்டுக் கொடுக்கும் அம்முறை மாறி சத்திரம் அகுதார் தம்மிஷ்டப்படி தம் இனத்தவரான பார்ப்பனர் கட்கே பெரும்பாலும் சாப்பாடு போட்டு வருகின்றார். பிராமணரல்லாத ஏழை மக்கட்கோ சாப்பாடு போடுவ தென்றால் தம் குடும்பச் சொத்து போய் விடுவது போல் நினைக்கின்றார்.
உபாத்தியாயப் பார்ப்பான் முதல் உத்தியோகப் பார்ப்பான் வரை சாப்பிட்டு வருகின்றார்கள். இது பார்ப்பனர்களுடைய இயற்கைக் குணம். இன்னும் சத்திரத்தின் ஊழல்கள் மிகைபட உள்ளன. மாத மொன்றுக்கு சத்திரத்திற்கு ரூ.85-0-0 வரையிலும் போர்டிலிருந்து உதவி வருகின்றார்கள். இப்பணத்தைக் கொண்டு எத்தனை ஏழைகட்கு அன்னம் அளிக்கலா மென்பதை யோசியுங்கள். சராசரி நான்கு பேர்கள் சாப்பிடுவதாய்க் கூடசொல்ல முடியாது. மேலும், சத்திர அதிபர் மாதத்தில் பதினைந்து நாட்கள் சத்திரத்தில் இருப்பதென்பது அரிதிலும் அரிது. அப்படி மதுரை முதலிய இடங்கட்கு பிரயாணம் செய்கின்ற காலத்து சத்திரத்தின் வேலைப்பாடுகள் எவ்வளவோ குந்தகமடை கின்றது. தவிர இவருக்கு வயதோ 65 ஆகிறது. நிரு வாகங்கள் செவ்வனே கவனிப்பதற்கு இயலாதவராய் இருக்கின்றார்.
சத்திரத்தின் சீரிய ஒழுக்கங்கள் பலவும் சிதறிப் போகின்றது. பிராமணர்கட்கும், பிராமணரல்லாதார்கட்கும் வித்தியாசமின்றி நடைபெற வேண்டிய இவ்வன்னச் சாலையில் இவ்வித ஊழல்கள் நாளடைவில் நடைபெற்று வருவதை ஸ்தல ஸ்தாபனத் தலைவர்கள் கவனிப் பாரின்றிக் கிடக்கின்றது.
நீதிக் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியினர் நிர்வகிக்கும் இக்காலத்தில் இப்பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்காமற் போனால், எக்காலத்தில் விமோசனம் கிடைக்கப் போகிறது?
எனவே, ஜில்லா போர்டு தலைவரவர்கள் நன்கு கவனித்து பிராமணரல்லாதாரில் தக்கதொரு மனிதரைத் தெரிந்தெடுத்து சத்திர நிருவாகத்தைச் சரியாய் நடத்தி வரவேணுமாய் பிராமணரல்லாதாரின் சார்பாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
– ஜஸ்டிஸ் கட்சிப் பிரசாரகர். – ‘விடுதலை’ – 7.11.1936
No comments:
Post a Comment