ஹிந்து அல்லாதார் ஹிந்து கோவிலுக்குள் நுழையக் கூடாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

ஹிந்து அல்லாதார் ஹிந்து கோவிலுக்குள் நுழையக் கூடாதா?

“தமிழ்நாட்டில் அனைத்துக் கோவில்களிலும் கொடி மரத்துக்கு அப்பால் ஹிந்து அல்லாதார் அனுமதிக்கப் படுவதில்லை என்பதை குறிக்கும் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும் – ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத ஹிந்து அல்லாதவரை அனுமதிக்கக் கூடாது” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடவுள் ஒருவர் தான் – அவர் எங்கும் நிறைந்திருப்பவர் தூணிலும் இருப்பார் – துரும்பிலும் இருப்பார் – சர்வ சக்தி வாய்ந்தவர் என்றெல்லாம் கூறிக்கொண்டு கடவுளை ஒரு மத அட்டைப் பெட்டிக்குள் திணிப்பதை நினைத்தால் நகைச் சுவையாகத் தான் இருக்கிறது.
உருவமற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு – மற்றொரு பக்கத்தில் கோவிலை கட்டுவதும் – கடவுளுக்கு மனம் போன போக்கில் உருவங்களை வடிப்பதும் – எத்தகைய முரண்பாடு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; இன்னொரு மதத்தைச் சார்ந்தவர் ஒரு கோவிலுக்குள் நுழைந்து விடுவதாலேயே ஆச்சாரம் கெட்டுவிடும் – ஆண்டவன் சக்தி போய்விடும் – சம்பந்தப்பட்ட மதக்காரர்களின் மனம் புண்படும் – என்பதெல்லாம் மனிதன் ஜோடித்த கதையே அல்லாமல், இது உண்மைக்கோ அல்லது அறிவுக்கோ பொருத்தமானதா என்பது மிக முக்கியமான கேள்வி ஆகும்.

பாரதத்தில் ஒரு பாகமாக கூறப்படும் உத்தர கீதை என்ன சொல்கிறது? துவிஜர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர் என்று கூறப்படும் பார்ப்பனர்களுக்கு தெய்வம் அக்கினியில்; முனிவர் களுக்கு தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்தவர்களுக்கு தெய்வம் சிலையில்; சம பார்வை உள்ளவர்களுக்கு எங்கும் தெய்வம் – என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் கோவில் என்பது புத்தி குறைந்தவர்களுக்கு என்று பொரு ளாகாதா? சாத்திரங்களையும், இதிகாசங்களையும், புராணங் களையும் தூக்கிப் பிடிக்கும் பெரிய மனிதர்கள் உத்தர கீதையில் சொல்லப்பட்டுள்ள இவற்றிற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
வழிபாடுகளில்கூட வேத காலத்தில் பஞ்சபூத வணக்கம் – ராமாயண காலத்தில் பாரத காலத்திலும் வீரர் வணக்கம் தான் – புராண காலத்தில் சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்கள்; வேத காலத்துக்குரிய ஆச்சாரம் யாகம் – ராமாயண காலத்து ஆச்சாரம் தவம் – பரத காலத்துக்குரிய ஆச்சாரம் தீர்த்த யாத் திரை – புராண காலத்துக்குரிய ஆச்சாரம் கோவில் பூஜைகள். (ஆதாரம் கால்டுவெல் எழுதிய பரத கண்ட புராதனம்)
இருக்கு வேதத்தில் உள்ள 1028 பாட்டுகளிலும் சிவன் என்றோ பார்வதி என்றோ துர்க்கை அல்லது காளி என்றோ பெயருடைய எவரும் தென்படவில்லை. அப்பொழுது பிள்ளையாரும் சுப்பிரமணியனும் இல்லை. வீரபத்திரனும் வைரவனும் – அய்யனாரும் அப்போது இல்லை. அக்காலத்திலே லிங்கம் என்றால் என்ன என்று தெரியாது. ராமனும் கிருஷ்ணனும் இல்லை. லட்சுமணனும் இல்லை அனுமானும் இல்லை – பத்து அவதாரங்கள் அப்பொழுது கிடையாது – கைலாயமும் வைகுண்டமும் அப்போது இல்லை – (ஆதாரம் மேற்கண்ட நூல் பக்கம் 19)

உண்மைகள் இவ்வாறு இருக்க, கோவில் என்றும் சம்பிரதாயம் என்றும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களே குறிப்பிட்ட மத கடவுளின் கோவிலுக்குள் நுழைய அனுமதி உண்டு – மற்ற மதக்காரர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்வதெல்லாம் அசல் கேலிக்கூத்து அல்லவா? ஹிந்து மத கோவிலில் கூட ஒரு காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், சாணார்கள் போன்றவர்கள் நுழைய அனுமதி கிடையாதே, மக்கள் போராட்டத்திற்குப் பிறகு தானே அந்தக் கதவுகள் திறக்கப்பட்டன. வெகு காலத்திற்கு முன்பு கூடப் போக வேண்டாம். ஏன் குடியரசுத் தலைவராய் இருந்த மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்ற போதும் அஜ்மீர் பிரம்மா கோவிலுக்கு சென்றபோதும் தடுக்கப்பட்டது உண்டே!

அவர் ஹிந்து மதத்துக்காரர் இல்லையா?
நாட்டின் முதல் குடிமகன் – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காவலன் – முப்படைகளின் தலைவன் என்ற சிறப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக ஹிந்து கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதே! இதற்கு உயர்நீதிமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது? ஹிந்து ஆன்மீக கொழுந்துகள் என்ன பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள்? இன்னொன்றையும் இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மற்ற மத வழிபாட்டு இடங்களில் இது போன்ற தடைகள் கிடையாது; வேளாங்கண்ணி மாதா கோவிலுக்குள் எந்த மதத்தினரும் சென்று வரலாமே – சென்று வந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

அதே போல நாகூர் தர்காவிற்குள்ளும் சகல மதத்தினரும் நுழைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் – ஆகா எங்கள் மதக் கோவி லுக்குள் நுழைந்தால் ஆச்சாரம் கெட்டுவிடும் – கடவுள் சக்தி குறைந்துவிடும் என்று கதறவில்லையே! ஹிந்து மதத்தில் மட்டும் ஏன் இந்த நிலை – நீதிபதிகள் கவனத்துக்கு வரவில்லையா? பழனி கோயிலில் ஒரு காலகட்டத்தில் பண்டாரத்தார்கள்தான் பூசாரிகளாக இருந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு இன்றைக்குப் பார்ப்பனர்கள் அந்த இடத்தை ஆக்கிர மித்து இருக்கிறார்களே – இதற்கு என்ன பரிகாரம்? சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஏன்? அதே நிலை மதுரை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கும் ஏற்பட்டால் யார் தடுக்க முடியும்?

No comments:

Post a Comment