ஜார்சுகுடா (ஒடிசா), பிப்.11- பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் (ஓபிசி) பிறக்கவில்லை; பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்தி, மக்களை அவர் தவறாக வழி நடத்துகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் ஜார்சுகுடா பகுதியில் 8.2.2024 அன்று நடைபெற்ற ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப் பயணத்தில்’ பேசிய ராகுல் காந்தி, ‘ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர் என பிரதமர் மோடி மக்களிடம் கூறி வருகிறார். ‘காஞ்சி’ என்ற பொதுப் பிரிவைச் சேர்ந்த ஜாதியில் அவர் பிறந்தார். அவர் குஜராத் முதலமைச்சராகப் பொறுப் பேற்றதும், தன்னுடைய ஜாதியை ஓபிசி பட்டியலில் இடம்பெறச் செய்தார். இதனால், பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி பிரிவை சாராதவர்’ என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி ‘டெலி’ ஜாதியைச் சேர்ந்தவர் எனக் கூறிய ராகுல் காந்தி, பின்னர் ‘காஞ்சி’ ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெளிவுபடுத்தினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதியை அடைய முடியாது. பிரதமர் மோடி இந்தக் கணக்கெடுப்பை தவிர்த்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும்போது, நாட்டில் ஏழைகள், பணக்காரர்கள் என இரு ஜாதிகள் உள்ளதாக குறிப்பிடும் பிரதமர், இதில் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
No comments:
Post a Comment