ராமராஜ்யம் நடக்காது!
நாடு முழுவதும் பெரியார் ராமசாமி
ராஜ்யமே நடக்கப் போகிறது
தூத்துக்குடியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை!
தூத்துக்குடி, பிப். 8- தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உடன்குடியில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி “மி.ழி.ஞி.மி.கி. வெல்வது நிச்சயம்” என்ற தலைப்பில் கடந்த 5.2.2024 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் “ராமராஜ்யத்துக்குப் பதிலாக நாடு முழுவதும் சமூக நீதிக்கு வித்திட்ட தந்தை பெரியார் ராமசாமி ராஜ்யத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், மாற்றுக் கட்சிகளில் இருந்து பலர் விலகி கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இப்பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. அவர்கள் உரையாற்றியதாவது:
“நமது தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தேர்தல் அறிக்கை குழு தனது பயணத்தை தூத்துக்குடியில் தொடங்கியிருக்கிறது. காலையில் இருந்து பல தரப்பு மக்களைச் சந்தித்து குழுவினர் நாங்கள் உரையாடியிருக்கிறோம்.
இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஒன்றியத்தில் இம்முறை ஏன் மாற்றம் வந்தே ஆக வேண்டும் என்பதை இங்கே பேசியவர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே வரவில்லை என்றால், பி.ஜே.பி.யை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஒரு நல்லாட்சியை நாம் தேசிய அளவிலேஉருவாக்கவில்லையென்றால், இன்று நாம்பார்க்கக் கூடிய இந்தியா இல்லாமல் போய்விடும்.
அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது இந்த மேடையிலே இல்லாத ஜாதியுண்டா மதமுண்டா என்று கேட்டார்கள். சகோதரர்களாக சகோதரிகளாக எந்த மாச்சர்யமும் இல்லாமல் கோபமும் இல்லாமல் அத்தனை பேரும் இங்கே தமிழர்களாக மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். ஒருவருக்கொருவர்உதவிக் கரம் நீட்டுகிறோம். அன்பு செய்கிறோம்.
இந்துக்களை அரசியல்
கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்!
ஆனால் இந்த ஒன்றியத்திலே இருக்கும் ஆட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? தொடர்ந்து மக்களைப் பிரித்தாளும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துக்களை, இந்து மக்களை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் இந்துக்களை பாதுகாக்க வில்லை. இந்துக்களை தங்களது அரசியல் கேடயமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.
பெரும்பான்மையாக இருக்கும் இந்து மக்களுக்காக இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறதுஎன்று சிந்தித்துப் பாருங்கள். எதுவும் கிடையாது.
மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் செய்கிறார்களா? ஸ்காலர்ஷிப் எல்லாம் நிறுத்தி யாச்சு. பெரும்பான்மை மக்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏதும் செய்திருக் கிறார்களா? நம் நாட்டில் சுதந்திரம் பெற்ற பிறகு இன்றுதான் அதிகம் பேருக்கு வேலையில்லாத சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதுதான் அவர்களது சாதனை. இதனால் பெரும்பான்மை இளைஞர்கள், இளம்பெண்கள் இந்துக்களாக இருப்பவர்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி விவசாயிகள், தொழிலாளர்கள் என்று எந்த துறையை சேர்ந்த மக்களாக இருக்கட்டும். அவர்களுக்கு என்று எந்த நலனையும் எந்த திட்டத்தையும் செய்ய முன்வராத ஆட்சிதான்
ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி.
போராடிய எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
நான் ஒன்றே ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். யாரிடம் கேட்கவில்லை, யாரிடமும் ஆலோசிக்க வில்லை. யாரிடமும் கேட்காமல் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் அந்த சட்டங்களை எதிர்த்து மாதக் கணக்கில் போராடினார்கள். போராட்டத் திலே பலர் உயிரிழந்தார்கள். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத பி.ஜே.பி. ஆட்சி, தேர்தல் வந்தபோது அந்த சட்டங்களை பின் வாங்கினார்கள். இந்த சட்டம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக போராடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்கிறார்கள். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது தவறு என்று நாங்கள் போராடி வெளி நடப்பு செய்தபோது… அந்த நேரத்தில் தொழி லாளர்கள் நல சட்டத்தில்திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றினார்கள்.
வழக்குரைஞர்களுக்கே புரியாத ஹிந்தியில் சட்டம்
இந்த நாட்டிலே இருக்கும் சாதாரண சாமானிய மக்களுக்கு எதிரானது. அதேநேரம் மாநில உரிமை களுக்கு எதிரானது. எந்த சட்டத்தை எடுத்துக் கொண் டாலும் மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் சட்டங்கள்தான். சென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலே புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். அதன் பெயர் எல்லாமே ஹிந்தியிலே இருக்கிறது. பாதி வழக்குரைஞர்களுக்கே புரியவில்லை. ஜட்ஜுகளுக்கே புரியவில்லையாம். பாதி ஜட்ஜுகள் புரியாமல்தான் இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும்?
இப்படிப்பட்ட சூழலிலே யாரும் இவர்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. இவர்களை எதிர்த் துக் கேள்வி கேட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
‘நாங்கள் ஒரு பழங்குடியினரை கொண்டுவந்து குடியரசுத் தலைவராக வைத்திருக்கிறோம்’ என்று பெருமையாக சொல்கிறார்கள். ஆனால் அவரை புதிய நாடாளுமன்றம்தொடங்கும்போது அழைக்கவில்லை. அப்புறம் கோயில் திறந்தார்கள், அங்கேயும் அவருக்கு அழைப்பில்லை.
முதல் முறையாக இந்த கூட்டத் தொடரில்தான் நம்முடைய குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுகிறார். காரணம் வேறு வழியில்லை., அவர் உரையாற்றி யாக வேண்டும். அதற்கு முன்னால் அவர்களுக்கு நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு அழைப்பு இல்லை, அனுமதியும் இல்லை. ஆனால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை குடியரசுத் தலைவ ராக ஆக்கியிருக்கிறோம் என்று பெருமை பேசு கிறார்கள்.
அதே பழங்குடியின மக்களுக்காக தன் வாழ் நாளெல்லாம் பாடுபட்ட கிட்டத்தட்ட 82 வயதுக்கு மேல் இருக்கக் கூடிய ஸ்டேன் சாமி என்ற பாதிரியாரை தேச விரோதி என்று சொல்லி சிறையில் அடைத்து, அவரால் தண்ணி கூட எடுத்துக் குடிக்க முடியாது. தசைகள் எல்லாம் நலிந்துவிட்டன. அந்த பிரச்சினையிலே தவித்துக் கொண்டிருந்தவரை 82 வயதில் இந்த தேசத் துக்கு எதிராக சதி செய்கிறார் என்று சொல்லி சிறையில் அடைத்தனர். அவரால் தண்ணீரை கையால் டம்ளரில் எடுத்து குடிக்க முடியாது. அவர் ஒரு ஸ்ட்ரா வாங்கு வதற்கு நீதிமன்றங்களை அணுகி போராட வேண்டியிருந்தது. இதுதான் அவர்களுக்குத் தெரிந்த நீதி நேர்மை.
இந்த ஆட்சி மறுபடியும் வந்தால் நாடாளுமன்றம் நாடாளுமன்றமாக இருக்காது. ஜனநாயகம் என்பது காணாமல் போய்விடும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நான் நாடாளுமன்றத்திலே இருந்திருக் கிறேன். பிரதமர் மன்மோகன் சிங் அவைக்கு வருவார். முடிந்தவரை அவையில் இருப்பார். ஏதாவது ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் பிரதமரே எழுந்து பதில் சொன்னதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இங்கே இருக்கிற பீட்டர் அல்போன்ஸ் அண்ணன் பார்த் திருப்பார்.
ஆனால் இப்போதைய நம்முடைய பிரதமர் என்றைக்காவது… நாம் அத்திப் பூத்தது போல் என்று சொல்வோம் இல்லையா… அதையும் தாண்டி ஏதாவது அரிதினும் அரிதாக கிடைக்கக் கூடியதாக இருந்தது என்றால் அப்போதுதான் வருவார். அவர் பேசும் நான்கு அய்ந்து நிமிடத்துக்கு மேல் நாடாளுமன்றத்தில் உட்கார மாட்டார். அவர் உட்காராத காரணத்தால் இரண்டு இளைஞர்கள் தங்களுடைய கோபத்தைக் காட்டு வதற்காக, இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பார்வையாளர் மாடத்தில் இருந்து குதிக்கிறார்கள். கால் செருப்பில் இருந்து இரு பொருட் களை எடுத்து புகையடிக்கிறார்கள். அந்த மன்றத்திலே தான் இந்த நாட்டின் முக்கியமான தலை வர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ராகுல் காந்தி அவையிலே அமர்ந்திருக்கிறார்.
யாருக்கும் பாதுகாப்பு இல்லை
இப்படிப்பட்ட ஒரு சூழலிலே யாருக்குமே பாதுகாப்பு இல்லையே, இது எப்படி நடந்தது என்று கேள்வி கேட்ட காரணத்துக்காக…. இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக மக்களவை, மாநிலங் களவை என இரு அவைகளிலும் இருக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து அவையில் இருந்து நீக்குகிறார்கள்.
நாடாளுமன்ற பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எப்படி அவர்கள் வந்தார்கள்? நல்ல பிரதமராக இருந்திருந்தால் அவர் கூட அவையிலே இருந்திருப்பார் அல்லவா? பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறதே? என்று கேள்வி கேட்டதற்காக அத்தனை பேரும் இடைநீக்கம் செய்யப்படுகிறோம்.
இதுதான் மறுபடியும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாள்தோறும் நடக்கும் ஒன்றாக மாறி விடும். கேள்வி நேரத்தில் எழுந்து கேள்வி கேட்டால் கூட இடைநீக்கம் செய்து விடுவார்கள்.
அதனால் இந்த நாட்டை,நாட்டின் ஜனநாயகத்தை, உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், கல்வியை, கல்விக்கான உரிமையை பாதுகாக்க வேண்டுமென்றால்… கல்விக் கான உரிமையை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கலைஞர் கொண்டு வந்த சட்டத்தை நிறைவேற்றித் தந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இன்று பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கித் தந்திருப்பது நாம்.
ஆனால் கோயிலுக்குள் பிரதமரே வர முடியாத, குடியரசுத் தலைவரே வர முடியாத சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது சாதாரணமாக இருக்கக் கூடிய சூழலாக மாறும்,
ஒடுக்கப்பட்டவர்கள் மறுபடியும் ஒடுக்கப்படு வார்கள். உங்கள் கைகளில் இருக்கும் உரிமைகள் எல்லாம் தட்டிப் பறிக்கப்படும். புதிய கல்விக்கொள்கை என்பது நம் பிள்ளைகள் எந்த கல்லூரிக்கு போக வேண்டும் என்றாலும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நீட் தேர்வு மூலம் நம் பிள்ளைகள் மருத்துவம் பயில முடியாமல் தடுப்பவர்கள், நம் பிள்ளைகள் கல்லூரிக்கு போய் படிக்க முடியாத சூழலை உருவாக்குவார்கள்.
அடிமை நிலையை
உருவாக்க நினைக்கிறார்கள்!
முன்பு அடிமைகளாக இருந்த நிலையை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கே அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் பேசும் போது ராமராஜ்யம் பற்றி குறிப்பிட்டுச் சொன்னார்கள். இவர்கள் உருவாக்கும் ராம ராஜ்யம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற மோடி ராஜ்யமாக ஆர்.எஸ்.எஸ். ராஜ்யமாகவே இருக்கும். பஜ்ரங் தள் ராஜ்யமாகவே இருக்கும். தமிழ்நாட்டில் நம்முடைய கனவு என்பது பெரியார் ராமசாமி ராஜ்யம். அதை நாடு முழுதும் உருவாக்கிக் காட்டுவோம்” .
இவ்வாறு தனது உரையில் கனிமொழி கருணாநிதி எம்.பி. குறிப்பிட்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறைஅமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்க்கண் டேயன், ஊர்வசி அமிர்தராஜ், ஆளூர் ஷாநவாஸ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர்பிரம்மசக்தி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment