'பாரத ரத்னா' என்ற பட்டத்தைக்கூட அரசியல் ஆயுதமாக கையாளுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 10, 2024

'பாரத ரத்னா' என்ற பட்டத்தைக்கூட அரசியல் ஆயுதமாக கையாளுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

featured image

மாநில கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிரான
ஒரு சூழலைத் தெளிவாக எடுத்திருக்கின்றன!
அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ‘இந்தியா கூட்டணி’ ஆட்சி அமைக்கும்!
புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

புதுக்கோட்டை, பிப்.10 ‘பாரத ரத்னா’ என்ற பட்டத்தைக் கூட அரசியல் ஆயுதமாக கையாளுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! மாநில கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு சூழலைத் தெளிவாக எடுத்திருக்கின்றன! ‘இந்தியா கூட்டணி’ அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (9-2-2024) புதுக்கோட்டைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:

மூன்று பிம்பங்கள் நாடெங்கும் உருவாக்கப்பட்டிருக்கின்றன!
செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது; இப்போது பா.ஜ.க.வோ, அ.தி.மு.க.வோ கூட் டணியை அமைக்கவில்லை. இப்போது பா.ஜ.க.வின் வளர்ச்சியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இந்தத் தேர்தல்களில் மூன்று பிம்பங்கள் நாடெங்கும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
ஒன்று,
மீண்டும் மோடி பிரதமராக வருவார். அவர்தான் ஆட்சி அமைப்பார் என்பதைத் திட்டமிட்டு, ஊடகங்கள் மூலமாகவும், மற்ற மற்ற பிரச்சாரங்கள்மூலமாகவும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. நடக்கக் கூடியது என்னவென்றால், இந்த முறை மோடி ‘மீண்டு வருவாரா?’ என்பதுதான் கேள்வியே தவிர, ‘மீண்டும் வருவார்’ என்கிற பிரச்சினை இல்லை.

காரணம் என்னவென்றால், இது எங்களுடைய ஆசை இல்லை; அல்லது மேலெழுந்தவாரியான, மேலோட்டமான கணிப்பும் அல்ல.
ஏற்கெனவே தென்மாநிலங்களில் அவருக்கு இட மில்லை; கணக்குத் திறக்கவில்லை. மணிப்பூருக்கே அவர் போவதற்குத் தயாரில்லை. மணிப்பூர் இந்தியா விற்குள்தான் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க அவருக்கு எதிராக இருக்கின்றன.
அதேபோல, காஷ்மீருக்கு எப்பொழுது தேர்தல் நடத்தப் போகிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்ட தற்கு, ”நடத்துவோம்” என்று சொன்னார்களே தவிர, அதற்கு அவர்கள் தயாராக இல்லை. அங்கிருக்கும் மக்கள் இவர்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள். இதே நிலைதான் இந்தியா முழுவதும்.

கருத்துக் கணிப்புகள் ஆதாரமற்றவை என்பது தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது!
இன்றைக்கு வெளியூர் ‘முரசொலி’யில்கூட, ”மிக அதிகமாக 400 இடங்களைப் பெறுவோம்; பா.ஜ.க. மட்டும் 370 இடங்களைப் பெறும்” என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பதையொட்டி வருகின்ற கருத்துக் கணிப்புகள் ஆதாரமற்றவை என்பது தெளி வாகவே சொல்லப்பட்டுள்ளது.
அவர்களுடைய ஒரே கணிப்பு என்னவென்றால், மீண்டும் நாங்கள் வருவோம் என்று அவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்றால், தோற்றுப் போனாலும், எதிர்க் கட்சியினரை மிரட்டி விலைக்கு வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வருகின்ற தேர்தலில் சாத்தியமில்லை.
எனவேதான், முதலில் அந்த பிம்பம் உண்மையானது அல்ல; அது சரிந்துகொண்டு வருகிறது.
ஆகவேதான், அவர்கள் வேறு குறுக்குவழிகளைக் கையாளலாம் என்று நினைக்கிறார்கள்.

‘பாரத ரத்னா’ என்ற பட்டத்தைக்கூட அரசியல் ஆயுதமாகத்தான் கையாளுகிறார்கள்!
பீகாரில், பிற்படுத்தப்பட்டவர்களுடைய வாக்கு களைக் கவரவேண்டும் என்பதற்காக ‘பாரத ரத்னா’ என்ற பட்டத்தைக்கூட அரசியல் ஆயுதமாகத்தான் கையாளுகிறார்களே தவிர, திறமை என்பதற்காகக் கையாளவில்லை.
இதற்குமுன், 37 சதவிகித வாக்குகளை வைத்துத் தான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இப்பொழுது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகி இருக்கின்றன.
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், மீண்டும் மோடி பிரதமராக வருவதற்குரிய வாய்ப்பு இல்லை. முதல் பிம்பம் உடைக்கப்பட்டு இருக்கிறது என்று மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
அதன் காரணமாகத்தான், வாக்காளர்களை நம்ப முடியாவிட்டாலும், தேர்தலில், வேட்பாளராக இராமனையே நிறுத்துவதைப்போல, ஒரு பிம்பத்தை அவர்கள் உருவாக்கி வெற்றி பெறலாம் என்று நினைக் கிறார்கள்.

மாநில கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு சூழலைத் தெளிவாக எடுத்திருக்கின்றன!
இரண்டாவது பிம்பம் என்னவென்றால்,
‘இந்தியா’ கூட்டணி உடைந்துவிட்டது; உடைந்து விட்டது என்று ஊடகங்கள்மூலமாக பொய்ப் பிரச் சாரத்தை செய்கிறார்கள். எங்கோ ஒருவர் – நிதிஷ்குமார் போனார் என்பதை வைத்து அந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.
எல்லா இடங்களிலும், இருக்கின்ற மாநில கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு சூழலைத் தெளிவாக எடுத்திருக்கின்றன.
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘இந்தியா கூட்டணி’ அதிகமான இடங்களைப் பெற்று ஒன்றியத் தில் ஆட்சியை அமைக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பு கள் இருக்கின்றன.

கதவு திறப்பதிலேயே
அவர்களுக்குள் பிரச்சினை!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற என்.டி.ஏ. கூட்டணியில் ஏற்கெனவே இருந்தவர்களே காணாமல் போய்விட்டனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த அமித்ஷா, கதவு திறந்தே இருக்கிறது என்கிறார். மூடியே இருக்கிறது என்றார் அந்தக் கூட்டணியில் இருந்தவர்.
ஆகவே, யார் கதவு திறந்தது? யார் கதவு மூடியது? என்பதிலேயே அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கிறது. ஆனால், கணக்குத் திறக்கமாட்டார்கள் என்பதில் பிரச்சினையே கிடையாது.

தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன!
மூன்றாவது பிம்பம் என்னவென்றால்,
மோடி பிரச்சாரத்திற்குப் போனால், எல்லோரும் ஓட்டு போட்டுவிடுவார்கள்; பூக்களைத் தூக்கி வீசுவது போன்று, ஓட்டுகள் விழும் என்பது பொய் என்று இமாச்சலப் பிரதேசம் தெளிவாகக் காட்டியிருக்கிறது. மற்ற மற்ற இடங்களிலும் வடபுலத்திலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
கருநாடகா, தெலங்கானா போன்ற தென்மாநிலங்களி லும் அவர்களுக்குக் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன.
அவர்கள் வெற்றி பெற்ற மாநிலங்களான இராஜஸ் தான் போன்ற மாநிலங்களில்கூட வாக்கு வித்தியாசம்
2 சதவிகிதமே தவிர அதிகம் இல்லை.
ஆகவே, இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது, இப்பொழுது இருக்கின்ற எதார்த்த நிலை, உண்மை நிலை என்னவென்றால், மீண்டும் மோடி பிரதமராக வருவதற்கு வாய்ப்பில்லை என்பதுதான்.

ஊடகச் செய்திகளை வைத்து,
தேர்தல் முடிவுகள் வரப் போவதில்லை!
காரணம் என்னவென்றால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் கொடுமையினால், மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
இந்தத் தலைவர் போனார், அந்தத் தலைவர் ஒத்து ழைக்கவில்லை என்ற ஊடகச் செய்திகளை வைத்து, தேர்தல் முடிவுகள் வரப் போவதில்லை.
விலைவாசி ஏற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப் பின்மை, வறுமை ஒழிப்புத் திட்டமில்லை; கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை – சமூகநீதிக்கு எதிரான சூழல் – இவற்றையெல்லாம் பார்த்ததினால்தான், நிச்சயமாக அவர்கள் மேற்கொண்டுள்ள மூன்று பிம்பங்கள் உடைக்கப்படும்.
என்னதான் பிரச்சாரத்தின் மூலமாக எங்கு பார்த்தாலும் மோடி, மோடி என்று சொன்னாலும்கூட, அவர்கள் ஓடி வந்தாலும், தேடி வந்தாலும் – நாடி வரப்போகக்கூடிய ஆட்சி – எதிர்க்கட்சி ஆட்சிதான், இதுதான் என்னுடைய கருத்து.

உண்மையான, சரியான வீரன் யார்?
செய்தியாளர்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி என்ன சொன்னார் என்றால், காங்கிரஸ் 50 இடங்களில்கூட வெற்றி பெறாது என்று சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: இதுபோன்று அவர் எதிர்மறையாகவே சொல்லிக் கொண்டிருக்கட்டும்.
எப்பொழுதுமே போர் முனையில் இரண்டு விஷயங்களைப் பார்க்கவேண்டும்.
எதிரியினுடைய பலம் மிக அதிகம் என்று நினைத்துக் கொண்டு போராடுகின்றவர்தான் உண்மையான, சரியான கணிப்புள்ள வீரன்.
”எதிரி தோற்றுவிடுவார்; நான்தான் வெற்றி பெறுவேன்” என்று சொல்கிறவர்கள் வெற்றி பெற்றதாக இதுவரை போர் வரலாற்றில் இல்லை.
அதீதமான, கற்பனையான, தலைக்கணமான ஒரு நிலைதான் அது. அப்படிப்பட்டவர்கள் சரிந்திருக்கிறார்களே தவிர, சாதித்தது இல்லை..

கருத்துத் திணிப்பே தவிர,
கருத்துக் கணிப்பு அல்ல!
செய்தியாளர்: கருத்துக் கணிப்புகள் மீண்டும் பா.ஜ.க.தான் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்று சொல்லியிருக்கிறதே?
தமிழர் தலைவர்: கருத்துக் கணிப்புகளை பொதுவாகவே நாங்கள் ஏற்பதில்லை.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், முதலாளிகள் வைத்திருக்கின்ற தொலைக்காட்சிகளால் வெளியிடப்படுகின்றன.
அது கருத்துத் திணிப்பே தவிர, கருத்துக் கணிப்பு அல்ல.
இரண்டாவது, நாங்கள் நாள்தோறும் மக்களைப் பார்க்கிறவர்கள். அரசியல் நடப்புகளைப் பார்க்கிறவர்கள்.
கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்ட காயங்கள் – மக்களுடைய காயங்கள் இன்னும் ஆற்றப்படவில்லை.
மோடி உத்தரவாதம் என்று சொன்னாலே, மக்கள் சிரிக்கிறார்கள்.
ஏனென்று கேட்டால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்களே, அது என்னாயிற்று?
ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தைப் போடுவோம் என்று சொன்னார்களே, அது என்னாயிற்று?
அதனால், அவர்கள் கொடுத்த உத்தரவாதங்கள் நீரின்மேல் எழுதிய எழுத்துகளாகியுள்ளன.
ஆகவே, கருத்துக் கணிப்புகள் என்பது கணிப்பு அல்ல – திணிப்புகள்தான்.
ஊடகக்காரர்களாகிய நீங்களே சொல்கிறீர்கள், இன்னும் கூட்டணி அமையவில்லை என்று.
கூட்டணியே அமையவில்லை; ஆனால், பா.ஜ.க. கூட்டணி இத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னால், அது கணிப்பா? திணிப்புதான்.
அவர்களுடைய தந்திரங்கள் என்னவென்றால், சில இடங்களில் மட்டும் இவர் வெற்றி பெறுவார் என்று சொல்லி, மற்ற இடங்களில் அவர்தான் வருவார் என்று சொல்லி, ஒரு தவறான நம்பிக்கையை ஊட்டுவதற்கான முயற்சிகள். அது நடக்கப் போவதில்லை.
இதுவரையில் பல கருத்துக்கணிப்புகள் வந்திருக்கின்றன. அதற்கு மாறாகத்தான் முடிவுகள் வந்திருக்கின்றன.
எனவே, மக்கள் கணிப்புதான் மிகவும் முக்கியம். நாங்கள் பேசுவது மக்கள் கணிப்பு; அவர்கள் சொல்வது கருத்துக் கணிப்பு.

1971 ஆம் ஆண்டு ஃபார்மூலாதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் வரவிருக்கிறது!
செய்தியாளர்: திராவிட மண்ணான தமிழ்நாட்டில், இராமனையும், லட்சுமணமனையும் வணங்குகிறார்களே, நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா, இந்த மாற்றங்கள் வரும் என்று?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1971 ஆம் ஆண்டு இராமனை வேட்பாளராக ஆக்கினார்கள்; அந்தத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதே ஃபார்மூலாதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் வரவிருக்கிறது.

மாநிலங்களுக்கான நிதியை தராமல்
ஒன்றிய அரசு கழுத்தை நெரிக்கிறது
செய்தியாளர்: தமிழ்நாட்டில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ஆசிரியர்கள் எல்லாம் போராட்டம் நடத்தப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தேர்தல் நேரத்தில், நெருக்கடியைக் கொடுத்தால், அரசாங்கம் கீழிறங்கி வரும் என்று நினைக்கிறார்கள். அதனால், அவர்களுடைய உரிமைகளுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.
ஆனால், நிதியைப் பொறுத்தவரையில், ஒன்றிய அரசு கழுத்தை நெரிக்கிறது என்று ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் டில்லிக்குச் சென்று கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிலை சரியானால், இந்தப் பிரச்சினையும் சரியாகிவிடும்!
யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது!
செய்தியாளர்: தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதியில், தி.மு.க.காரர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?
தமிழர் தலைவர்: கூட்டணிப் பேச்சுவார்த்தைதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. யூகங்களுக்குப் பதில் அளிக்க முடியாது.
செய்திகளுக்குத்தான் பதில் அளிக்கலாமே தவிர, யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது.
ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளைச் சொல்வதற்கு முழு உரிமை உண்டு. முடிவு என்னவென்று தெரிந்தால்தான், இந்தக் கேள்வியைக் கேட்கலாம்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment