பெங்களூரு, பிப். 4- ஸநாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில், ‘‘டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றைபோல ஸநாத னத்தை ஒழிக்க வேண்டும்”என பேசினார்.
இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகளும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன.
உதயநிதி பேச்சுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாட்டின் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த பஜ்ரங் தள நிர்வாகி பரமேஷா, பெங்களூருவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘‘உதயநிதி ஸ்டாலினின் பேசிய கருத்தால் இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலும், மத உணர்வை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருக் கிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பிரீத்.ஜே முன்னிலையில் நேற்று (3.2.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஸநா தனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் வருகிற மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். இதேபோல அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பத்திரி கையாளர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோரும் அதே நாளில் நேரில் ஆஜராக வேண்டும்’ எனக்கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment