‘திராவிட மாடல்’ ஆட்சி பிரிவினை ஆட்சியா?
திராவிடர் இயக்க அடிப்படைக் கொள்கையே மனிதப் பிரிவினைக்கு எதிரான சமத்துவக் கொள்கை!
‘வடகலை-தென்கலை’ என்று சண்டையிடுபவர்கள் யார்?
கண்ணாடி வீட்டிலிருந்து திராவிடர் இயக்கக் கற்கோட்டை நோக்கிக் கல்லெறிவது புத்திசாலித்தனம் அல்ல!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
திராவிடர் இயக்க அடிப்படைக் கொள்கையே மனிதப் பிரிவினைக்கு எதிரான சமத்துவக் கொள்கைதானே – அதுதானே திராவிடப் பண்பாடு; மனுதர்மத்தை ஒழிக்கும் இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்; வடகலை- தென்கலை என்று சண்டையிடுபவர்கள் யார்? கண்ணாடி வீட்டிலிருந்து திராவிடர் இயக்கக் கற்கோட்டை நோக்கிக் கல்லெறி வது புத்திசாலித்தனம் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ஏடான ‘தினமணி’ நாளேட்டுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ‘திராவிட மாடல்’ ஆட்சி பிரிவினையைத் தூண்டும் ஆட்சி என்று ஆதாரமற்ற, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்க் குற்றச்சாற்றினைக் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் தக்க பதிலடி!
அதற்கு நேற்று (17-2-2024) ‘திராவிட மாடல்’ ஆட்சி யின் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது உரையில்,
‘‘இதைவிடச் சிறந்த நகைச்சுவை வேறு இருக்க முடியாது.
பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்குச் சொந்தக் காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினை வாதிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக உள்ளது!
‘அனைவருக்கும் அனைத்தும்’ கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள்தான் பிரிவினைவாதிகள்; இந்த வகையில் சிறுபான்மையினரின் நலத்தினைப் பாது காப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக நமது அரசு உள்ளது” என்று கூறி, நீண்ட தரவுகளோடு கூடிய விளக்கத்தை அளித்துள்ளார்.
‘‘நாங்கள் வெங்காயம் சாப்பிடும் பரம்பரையல்ல” என்றும், ‘‘பணத்தை உண்டியலில் போடாதீர்கள் – அர்ச்சகரின் அர்ச்சனைத் தட்டில் போடுங்கள்” என்றும் பச்சையாக தனது வருணத்தை வெளிப்படையாகச் சொன்னவரா, பிரிவினைப்பற்றிப் பேசுவது?
திராவிடர் இயக்க அடிப்படைக் கொள்கையே – சமத்துவக் கொள்கைதானே!
அந்த அம்மையார் மெத்தப் படித்தவர், மகிழ்ச்சிதான்! பெண் கல்வி, பெண் சமத்துவம், சம உரிமை, திராவிடர் இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம் – திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற திராவிடர் இயக்க அடிப்படைக் கொள்கையே மனிதப் பிரிவினைக்கு எதிரான சமத்துவக் கொள்கை தானே – அதுதானே எமது திராவிடப் பண்பாடு.
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற மனித குலத்தின் ஒற்றுமையை வற்புறுத்திடுவதோடு, ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பரந்து விரிந்த மானுடப் பரப்பையே தம்முள் அடக்கிய தத்துவம் – பண்பாட்டுப் பரப்பு, பாதுகாப்பு இயக்கம் வேறு எங்கு உண்டு திராவிட இயக்கத்தைப்போல, அம்மையார் கூறுவாரா?
அவர் சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு – பி.ஜே.பி.யின் ‘எஜமான்’ போன்றது அதுதான். அதன் ஆணைப்படி உருவாகியுள்ள பரிவார்களில் ஒன்று அரசியல் வடிவம் பெற்ற பா.ஜ.க. – அது கூறியது என்ன?
மனுதர்மத்தை ஒழிக்கும் இயக்கம் திராவிடர் இயக்கம்!
ஆர்.எஸ்.எஸ்., இன்றைய அரசமைப்புச் சட்டத்திற் குப் பதில் மனுஸ்மிருதி – மனுதர்மம்தான் அரசமைப்புச் சட்டமாக்கப்பட வேண்டும் என்றும், ‘‘ஹிந்துராஷ்டிரம் அமைப்பதே எங்கள் இலக்கு” என்றும் கூறி, இன்றும் அதே வேலையைப் பகிரங்கப்படுத்துகிறதே – அந்த மனுதர்மம்தானே வேத மதமான ஆரிய ஹிந்து மதத்திற்கு அடிப்படையானது. ஹிந்து மதத்தில் ‘நாலு வர்ணம்’, அதற்குக் கீழே அவர்ணஸ்தர் என்றும், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்றும் பிரித்து வைத்து – தீண்டாதே, நெருங்காதே, பார்க்காதே என்ற பிரிவினை இன்றும் இருக்கிறதே! அதற்கும் கீழே எல்லாப் பெண்களும் என்பதை மறுக்க முடியுமா?
அதை ஒழிக்கும் இயக்கம் அல்லவா திராவிடர் இயக் கம்; அழிக்கும் ஆட்சி அல்லவா ‘திராவிட மாடலான’ சமத்துவபுர ஆட்சி!
மனுதர்மம், பெண்களைக்கூட ‘‘நமோ சூத்திரர் களாக்கி” கீழுக்கும் கீழானவர்களாக ஆக்கி, எல்லா உரிமைகளையும் பறித்து பிரித்து வைத்துள்ளதற்கு அம்மையார் என்ன பதில் கூறுவார்?
வடகலை- தென்கலை என்று சண்டையிடுபவர்கள் யார்?
ஆண் – பெண் பேதத்தைத்தான் அவர்களது மதமான ஹிந்து மதம் முன்பு ஷண்மதம் – என்றாக்கி, அதில் ஒரு பிரிவை வைஷ்ணவம் என்று பிரித்து, அதிலும்கூட வடகலை – தென்கலை என்று ஆக்கி, யானை போன்ற மிருகத்திற்கு எந்த நாமம் (வடகலை நாமம் – தென்கலை நாமம்) போடுவது என்ற வழக்கு 100 ஆண்டுகளுக்குமுன் பிரிவு கவுன்சில் வரை – அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை சண்டையிடுபவர்கள் திராவிடர் இயக்கத்தவர்களா?
மனுதர்மம் – அதைவிட ‘‘நான்கு ஜாதிகளை நானே சிருஷ்டித்தேன்” என்று கூறியதோடு, பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறியதாக எழுதப்பட்டிருப்பது – ‘‘பெண் களும், சூத்திரர்களும் எப்படி பிறந்தார்கள்” என்று கொச் சைப்படுத்தியுள்ளதே – இதைப் பாடப் புத்தகமாக பி.ஜே.பி. அரசு வைக்கும் நிலையில் -பிரிவினைவாதிகள் யார்? நிதி யமைச்சர் அவர்கள் பதில் கூறட்டும்!
மனித உடல் உறுப்புகளைக்கூட பேதப்படுத்தி பிரித்து, வர்ணாஸ்ரம ஜாதிய அமைப்பு – வலங்கை – இடங்கை என்று கைகளைப் பிரித்தது.
கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டை நோக்கி கல்லெறிய வேண்டாம்!
கால்களை வலது கால், இடது கால் என்று பிரித்ததே அதைவிடக் கேவலம் உண்டா? வலது காலுக்குத் தனி மரியாதை காட்டுவது எந்த மதம்?
பதில் அளிப்பாரா அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
கண்ணாடி வீட்டிலிருந்து திராவிடர் இயக்கக் கற்கோட்டை நோக்கிக் கல்லெறிவது புத்திசாலித்தனம் அல்ல, புரிந்துகொள்வீர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18-2-2024
No comments:
Post a Comment