தந்தை பெரியாரும், சி.டி. நாயகமும் திராவிடர் இயக்கத்தின் ஆணிவேர்கள்!
தூத்துக்குடி, பிப்.23 திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகள் மூவருக்கு முப்பெரும் விழா குலசேகரப் பட்டினத்தில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
திராவிட இயக்க சமூக நீதி முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி. நாயகத்திற்கு நன்றி பாராட்டும் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா என முத்தமிழ் விழாவாக, வள்ளியம்மாள் ஆசிரியர் பயிற்சி நிறுவன பள்ளிக்கு அருகில் உள்ள, குலசேகரப்பட்டினம் தொண்டறச் செம்மல் சி.டி நாயகம் நினைவு அரங்கத்தில் 22.02.2024 அன்று மாலை 6 மணியளவில் கொண் டாடப்பட்டது.
தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் மரு.வெற்றிவேல், தி.மு.க. உடன்குடி ஒன்றிய செயலாளர் இளங்கோ, வி.சி.க. மாநிலக்குழு உறுப்பினர் தமிழினியன், வி.சி.க. உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்நேயன், ம.ம.க. மாவட்ட தலைவர் அஸ்மத், சி.பி.எம். உடன்குடி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, கன்னியாகுமரி மாவட்ட கழக தலைவர் ம.மு. சுப்பிர மணியம், குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், நெல்லை மாவட்ட தலைவர் இராஜேந்திரன், நெல்லை மாவட்ட காப்பாளர் இரா.காசி, வள்ளியூர் குணசீலன், வள்ளியூர் நகர கழக செயலாளர் நம்பிராஜன், ப.க.துணை செயலாளர் மோகன சுந்தரம், தென்காசி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன், தென்காசி மாவட்ட மாணவர் கழக செயலாளர் அமுதன், குற்றாலம் சண்முகம், குலசேகரப்பட்டினம் கழக கிளை செயலாளர் கந்தசாமி மற்றும் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் நிர்வாகிகள். சி.டி. நாயகம் அவர்களின் கொள்ளுப் பேரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக குலசேகரப்பட்டினம் வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காவல் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் மு.முனியசாமி தலைமையில், மாவட்ட காப்பாளர் பால்.இராசேந்திரம், மாவட்ட செயலாளர் முருகன், குலசை செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் எழுச்சி மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., ம.ம.க., உள்ளிட்ட கட்சி களின் நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்றனர்.
தொடர்ந்து, தாயம்மாள் நடுநிலைப்பள்ளி, வள்ளி யம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டும் ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்துக்குள், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வருகை தந்தார். நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் மாணவிகள் வரிசையாக பள்ளி சீருடையுடன் நின்று, ஆசிரியரை கையொலி எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். பள்ளி யின் செயலாளர் ராம சுந்தர சுப்பிரமணியன், சுயமரி யாதைச் சுடரொளி சி.டி. நாயகத்தின் கொள்ளுப் பேரன் செ.ரா. இளங்கோ இருவரும் ஆசிரியரை அழைத்துச் சென்றனர். பேராசிரியர் பெருமக்களும் இதில் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் இருந்த சி.டி. நாயகம் அவர்களின் சிலைக்கு அருகில் ஆசிரியர் அவர்களை அழைத்துச் சென்றனர். ஆசிரியர் சி.டி. நாயகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பள்ளி மாணவன் ஒருவன் சி.டி. நாயகம் போலவே வேடம் அணிந்து ஆசிரியரின் எதிரில் வந்தான். ஆசிரியர், மிகுந்த உற்சாகத்துடன் அவனை அழைத்து அருகில் நிறுத்திக் கொண்டு, “சி.டி.நாயகம் போலவே இருக்கிறது வேடம்” என்று உற்சாகத்துடன் பாராட்டினார். அதைத் தொடர்ந்து ராமசுந்தர சுப்பிர மணியன், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பெரு மக்களை வரிசையாக ஆசிரியருக்கு அறிமுகம் செய்து மகிழ்ந்தார். மாணவர்களும் ஆசிரியர்களும் அனை வருமே பெண்கள் என்பதால் ஆசிரியர் மிகுந்த உற்சா கத்துடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, நிகழ்ச்சியின் மய்யக்கருவாகவும், திராவிடர் இயக்கத்தின் மூன்று முக்கிய முன்னோடிகளான தந்தை பெரியார், சி.டி. நாயகம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்கள் திறந்து வைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. முதலில் சி.டி.நாயகம் படத்தை ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். தந்தை பெரியார் படத்தை தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்கோவும், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை வள்ளியூர் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெள்ளைப் பாண்டியும் திறந்து வைத்தனர். கழகத் தோழர்கள், பள்ளி நிர்வாகிகள், மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள், பொதுமக்கள் ஆகியோர் மூன்று தலைவர்களின் படங்களையும் திறந்தபோது மிகுந்த உற்சாகமாக எழுச்சியுடன் கரவொலி செய்தனர். அதைத்தொடர்ந்து சிடி நாயகம் குறித்த ஒரு வரலாற்றுப் பெட்டகமாக ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தோழர்கள் மேடைக்கு வந்து புத்தகங்களை ஆசிரி யரிடம் பெற்றுக் கொண்டனர். திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசே கரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.
முன்னதாக கழகக் காப்பாளர் மா. பால்ராசேந்திரம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். செ.ரா. இளங்கோ, மருத்துவர் வெற்றிவேல், தி.மு.க. ம.ம.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தமதுரையில், 1938இல் முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதல் சர்வாதிகாரியாக சுயமரியாதைச் சுடரொளி சி.டி. நாயகம் அவர்கள் இருந்ததை எடுத்துரைத்தார். தந்தை பெரியார் குலசேகரப்பட்டினத்தில் உள்ள இந்த பள்ளிக்கு வருகை தந்ததையும் அது குறித்து அவர் எழுதியிருந்த ஒரு வரலாற்று குறிப்பையும் சி.டி. நாயகம் பெரியாரைப் பற்றி பேசியதையும் குறிப்பிட்டு, அரிய வரலாற்றுச் சம்பவங்களைத் தோண்டி எடுத்து மக்களுக்கு அறிவு விருந்து அளித்தார். மேலும் அவர், சி.டி. நாயகம் பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை தொடங்கி யதைப் பற்றியும், அதன் மூலம் மிகப் பெரிய சமூக மாற் றத்தை ஏற்படுத்தியதையும் சுட்டிக்காட்டினார். “இப்படிப் பட்ட அரிய வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தின் ஆணிவேர்கள். அதற்குப் பிறகு நாமெல்லாம், நமது முன்னோடிகள் எல்லாம் அந்த வேர்களின் விழுதுகள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியின் நிறைவாக தூத்துக்குடி மாவட்ட தலைவர் மு. முனியசாமி நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment