பெண்களின் அரசியலுக்கு அடித்தளம் அமைத்த பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

பெண்களின் அரசியலுக்கு அடித்தளம் அமைத்த பெரியார்

featured image

“ஆண்களும் – பெண்களும் மனிதர்கள்தான்;
உருவ பேதம் மனிதத் தன்மையைப் பாதிக்கக்கூடியதல்ல!” – பெரியார்

பெண்களுக்குப் பேச்சுரிமை, சொத்துரிமை என்று எந்த உரிமையும் தேவையில்லை, அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இயங்க வேண்டியவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த காலத்தில், பெண்கள் ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று பெண்களின் உரிமைகளைப் பற்றி அவர்களுக்கே விழிப்புணர்வை உருவாக்கியவர் தந்தை பெரியார்.

நாகம்மையார், கண்ணம்மாள்

 இயக்கத்தின் முக்கியச் செயல்பாடுகளான மாநாடுகளிலும், போராட்டங்களிலும் பெண்களுக்குப் பல முக்கியப் பொறுப்புகளை வழங்கியவர் பெரியார்.

1. விருதுநகரில் 1931இல் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் இந்திராணி பாலசுப்பிரமணியம்.
2. 1932இல் நடந்த தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் டி.எஸ்.குஞ்சிதம்.
3. 1933இல் தஞ்சை மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கிவைத்தவர் எஸ்.நீலாவதி.
மாநாடுகள் நடத்த அமைக்கப்பட்ட குழுக்களிலும் இந்திராணி பால சுப்பிரமணியம் அம்மையார், எஸ்.நீலாவதி அம்மையார், குஞ்சிதம் அம்மையார் எனப் பல பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.
சுயமரியாதை மாநாடுகளுடன் தனியாகப் பெண்கள் மாநாடுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. மாநாட்டுத் தீர்மானங்களிலும் பெண்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.
பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை
பதினாறு வயது வரை பெண்களுக்குக் கட்டாயக் கல்வி
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை விரைந்து முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் முக்கியமானவை.

சமரசமற்ற போராளி

பெரியார், பெண் உரிமைகளில் என்றும் சமரசம் செய்துகொண்டதில்லை. பெண்களின் அரசியல் பங்களிப்பு இல்லாமல் அவர்களுக்குச் சமூக விடுதலை சாத்தியமில்லை என்பதை பெரியார் உணர்ந்திருந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் யாரும் சிந்தித்திருக்க முடியாத பல புரட்சிக் கருத்துகளை முன்வைத்து, பெண்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்தூன்றியவர் அவர். அவர் நிகழ்த்திக் காட்டிய சுயமரியாதைத் திருமணங்கள், பல விதங்களில் பாலினச் சமத்துவத்திற்கு மைல்கற்களாயின. ஆண்களைப் போல் பெண்களுக்கும் மறுமணம் செய்யும் உரிமையை வலியுறுத்தியதுடன், அவர்கள் பிள்ளைகள் பெறும் இயந்திரங்களாக வாழ்வதையும் பெரியார் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
பெண் விடுதலைக்காக பெரியார் முதன்மையாக வலியுறுத்தியது கல்வி. பெண் கல்வியின் அவசியத்தையும் அவர்களின் பொருளாதாரத் தற்சார்பையும் அவர் பல இடங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

அணிதிரண்ட பெண்கள்

இராமாமிர்தத்தம்மையார் – தர்மாம்பாள் – இந்திராணி

பெண்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த காலத்தில் வைக்கம் போராட்டம் முதல் பல முக்கிய அரசியல் களங்களில், போராட்டங்களில் பெண்களை ஆண்களுக்கு நிகராக ஈடுபடுத்தியவர் பெரியார். வைக்கம் போராட்டத்தின்போது பெரியார் சிறை சென்ற பின் போராட்டத்தைத் தொய்வின்றி தொடர்ந்து நடத்த முக்கியப் பங்காற்றியவர் நாகம்மையார். அவருடன் இணைந்து கண்ணம்மாள் உள்ளிட்ட பல பெண்களும் இந்தப் போராட்டத்தில் துணிவுடன் பங்கேற்றனர்.
கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு பெரியார் சிறை சென்றதை ஒட்டி நாகம்மையாரும், கண்ணம்மாளும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கனிமொழி கருணாநிதி
மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

பெண்கள் செல்லவே துணியாத கள்ளுக்கடைப் பகுதியில் தொண்டர்களோடு இணைந்து போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்கள் இவர்களின் பின்னால் அணிவகுத்தனர். இந்திய அளவில் பேசப்படக்கூடிய போராட்டமாக அது அமைந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தச்சொல்லி காந்தியாரிடம் சிலர் கேட்டபோது, “மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்றார். பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று பெரியார் மேடைதோறும் பேசியதோடு மட்டும் இல்லாமல், தனது மனைவியையும், சகோதரியையும் போராட்டக்களங்களில் ஈடுபடுத்தியதால், அதுவரை வீட்டைவிட்டு வெளியில் வர அனுமதி மறுக்கப்பட்டு, வீடுகளில் அடைந்துகிடந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்கள் பின்னால் அணிவகுத்தனர்.

முத்துலட்சுமி – நீலாவதி – சிவகாமி சிதம்பரம்

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். 13 நவம்பர் 1933இல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் நடத்தப்பட்டது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், நாராயணி அம்மையார், வ.ப.தாமரைக்கண்ணி அம்மையார், டாக்டர் தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில முக்கியமான தலைவர்கள். பல பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றனர்.

அடித்தளம் அமைத்தவர்

மத நம்பிக்கையின் பெயரால் பெண்களுக்கு நிகழ்ந்த அநீதியான தேவதாசி முறையை முற்றிலும் அகற்ற, மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருடன் இணைந்து பெரியார் பணியாற்றினார். அப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறையை அகற்ற மசோதாவைக் கொண்டுவந்தபோது, அந்த மசோதா நிறைவேற பெரியார் முக்கியப் பங்காற்றினார்.
உலகெங்கிலும் குழந்தைத் திருமணங்கள் முற்றிலும் மறைய இன்னும் 300 ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறது அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கை. இந்தியாவில் 9.2% பெண்கள் மட்டுமே ஊதியமீட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக பன்னாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலும் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் அரசியலில் பெண்கள் சாதிப்பது அவ்வளவு எளிதானதல்ல. நாம் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் 33% இடஒதுக்கீட்டுக்காக நீண்ட காலம் போராடினோம்.

ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்கும் பெண்கள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க முக்கியக் காரணம் பெரியார். நம் பெண்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் அவர்களின் அரசியல் ஈடுபாட்டுக்கும் ஒரு வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பெரியார்தான்.

(“இந்து தமிழ் திசை” வெளியிட்ட “என்றும் தமிழர் தலைவர்” என்ற நூலிலிருந்து…)

No comments:

Post a Comment