தென் மாநிலங்களுக்கான பொருளாதார கூட்டணியை உருவாக்க தீவிரமான ஆலோசனை நடத்துவதற்கு சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. இது காலங்கருதி மிகச் சரியாக மேற்கொள்ளப்படும் முடிவு என்பதில் அய்யமில்லை.
“தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வட இந்தியாவுக்கு ஒன்றிய அரசு திருப்பி விடுவதால் தென்னிந்தியாவுக்கு மிகப் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும்” என்று கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. சுரேஷ் கூறினார். குறிப்பாக கருநாடகா நிதி விநியோகத்தில் அநீதியின் கொடூரத்தை எதிர் கொண்டுள்ளது. 2-ஆவது பெரிய ஜி.எஸ்.டி. பங்களிப்பு மாநிலமாக கருநாடகா இருந்தும் தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது. இது அநீதி இல்லை என்றால் வேறு எதுதான் அநீதி என்ற வினாவை அவர் எழுப்பியுள்ளார். ‘நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி தேவை, வளர்ச்சிப் பணி களுக்கும், வறட்சி நிவாரணத்திற்கும் நிதி கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு எதையும் கண்டு கொள்வதில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.
இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்தது. கருநாடக முதலமைச்சர் சித்தராமையா இதற்கு விளக்கம் தெரிவிக்கவேண்டும் என்று பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தார் சித்தராமையா. இந்த நிலையில் கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி தென் மாநிலங்களுக்கான நிதிபங்கீட்டு உரிமையை எழுப்ப பொருளாதார கூட்டணி ஒன்றை உருவாக்கும் முடிவில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் “ஒன்றிய அரசு தென் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை முறையாக வழங்குவதில்லை தங்களிடமிருந்து நிதியை வாங்கி அதனை வட மாநிலங்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்” எனத் தொடர் குற்றச்சாட்டுகள் கூறி வரும் நிலையில், ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வை முறையாகப் பெற, அனைத்துத் தென் மாநில நிதி அமைச்சர்களைக் கொண்ட பொருளாதாரக் கூட்டணியை உருவாக்க ஆலோசனை நடந்து வருகிறது.
விரைவில் தென் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பெங்களூரு அல்லது சென்னையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கருநாடக, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒத்த கருத்துள்ள தலைவர்கள் ஆட்சியில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் மட்டும் ஒன்றிய அரசின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும் ஒடிசா முதலமைச்சர் போல் தனது மாநில நலனுக்காக ஒன்றிய அரசோடு இணக்கமாக உள்ளேன் என்று கூறிவருகிறார். இந்த நிலையில் தென் மாநில பொருளாதார கூட்டணி குறித்து விரைவில் ஆந்திர முதலமைச்சர்கள் ஜெகன் மோகனின் கருத்து என்ன என்பதை அறிய தென் மாநில அரசியல் பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
எது எப்படியாக இருந்தாலும் ஒன்றிய பிஜேபி அரசின் ஓர வஞ்சனையை எதிர்த்து இந்தியாவின் தென் பகுதியில் உள்ள முக்கிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஒன்று சேர்ந்து பாசிச பா.ஜ.க. அரசின் ஓர வஞ்சனையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியிருப்பது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ்நாடு ஜி.எஸ்.டி. வரித் தொகையாக ரூபாய் ஒன்று கொடுத்தால் ஒன்றிய பிஜேபி அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா தான் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையிலேயே அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
அதே நேரத்தில் உ.பி.யை ஆளும் பிஜேபி அரசு ஜி.எஸ்.டி. தொகையாக ஒரு ரூபாய் கொடுத்தால் 2.73 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து 6.23 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வருவாய் ஒன்றிய அரசு வசூலித்துள்ளது. ஆனால் 4.75 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளது. பிற மாநிவங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு குறைவாகத்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. ஆனாலும் கடுமையான நிதி நெருக்கடியை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது.
கடந்த 2014-2015 நிதி ஆண்டு முதல் 2022-2023 வரையிலான நிதி ஆண்டு வரை ஒன்றிய அரசின் நேரடி வரியில் உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், வரி பகிர்வில் உத்தரப்பிரதேசத்துக்கு ஒன்றிய அரசு திரும்பிக் கொடுத்திருப்பது ரூ.9.08 லட்சம் கோடி ஆகும்.
2018-2019இல் இருந்ததை விட 2024-2025இல் ஒன்றிய அரசின் பட்ஜெட் இருமடங்காக அதிகரித்துள்ளது. இருந்தபோதும் மாநில அரசுக்கு வழங்கும் நிதி பங்களிப்பில் பெருமளவு மாற்றமில்லை” . மேலும், “2018-2019ஆம் ஆண்டு ரூ. 24.5 லட்சம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வருவாய் 2024-2025இல் ரூ.45 லட்சம் கோடியாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் கருநாடகாவுக்கு 2018-2019இல் 46,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு தற்போது 50,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
விகிதாச்சாரப்படி பார்க்கும் பொழுதுதான் ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை புரியும்.
அதிலும் பிஜேபி ஆளும் மாநிலங்களின் கண்ணில் வெண்ணெய் என்றால், பிஜேபி ஆட்சி அல்லாத மாநிலங்களின் கண்ணில் சுண்ணாம்பாகும்.
இந்த நிலையில் பிஜேபி ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலங்கள் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்தால் மட்டுமே இதற்கு ஒரு வழி பிறக்கும். அந்த வகையில் கருநாடக மாநில அரசு மேற்ªகொள்ளும் தென் மாநிலங்களின் ஒருங்கிணைப்பு வரவேற்கத்தக்கதும் – வழிகாட்டத்தக்கதுமாகும்.
No comments:
Post a Comment